காப்பி சாப்பிடும்போது பாட்டியின் கண்ணில் தென்பட்டு
விடக் கூடாது.
‘சீப்பிக் குடிக்காதே’ என்று கத்துவாள். அவளுக்கு ஆடியோதான்
அவுட்டே தவிர வீடியோ மிக துல்லியம்.
“அதென்ன, கவ்விக் குடிக்கிற பழக்கம், உன் எச்சல் எல்லாருக்கும்
பரவணுமாக்கும்?” என்பது போல் திட்டுவாள்.
சீப்பிக் குடிப்பதிலுள்ள சுகத்தைப் பற்றி அவளிடம் விளக்க
முடியாததால் அதை இங்கே எழுதுகிறேன். பாட்டி கண்ணில
ஒருகால் பட்டு அவள் திருந்தக் கூடும்!
தூக்கி சாப்பிடுகிறவர்கள் காருக்கு பெட்ரோல் ஊற்றுகிற மாதிரி
தொடதொடவென்னு திரவத்தை ஊற்றிக் கொள்கிறார்கள்.
‘சீப்பி சாப்பிடுவதிலுள்ள சுகத்தை அனுபவிக்காத சூடுகெட்ட
மானிடரே கேளுங்கள்…’ என்று செய்யுள்கூட இயற்றலாம்.
காப்பி சூடாக வருகிறது. அண்ணாந்து சாப்பிடுகிறவர்கள்
சட்டென்று அதைத் தூக்கிவிட மாட்டார்கள். கையில் டம்ளரைத்
தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள். கை விரல் பொறுக்கக் கூடிய
சூடாக டம்ளர் இருந்தால்தான் அதைத் தூக்குவார்கள்.
சுடச் சுட ஊற்றிக் கொண்டால் வாய் வெந்துவிடும்.
ஆனால் சீப்பிச் சாப்பிடுகிறவர்களுக்கு டம்ளரின் சூட்டைப்
பற்றியோ உள்ளே இருக்கும் திரவத்தின் சூடு பற்றியோ
கவலையில்லை. மேதை ராஜாஜி மாதிரி ஒரு துண்டினால்
சூடான டம்ளரைப் பிடித்துக் கொண்டு விடுவார்கள். கவ்விச்
சாப்பிடும்போது முதல் ஸ்பரிசம் உதடுகளுக்குள் கிடைக்கிறது.
தூக்கிச் சாப்பிடுபவர்கள் தங்கள் உதடுகளுக்கு வேலை
கொடுப்பதில்லை. சீப்பி சாப்பிடும்போது உதடுகள் வழியே காப்பி
வாய்க்குள்ளே செல்கிறது. காப்பியில் ஏதாவது தூசி தும்பு
இருந்தாலோ, பிளாஸ்டிக் பால் கவரின் கத்திரிக்கப்பட்ட முனை
இருந்தாலோ உதடு வடிகட்டி விடும்.
உதடுகள் சூட்டை வரவேற்று அதிகப்படியான சூட்டை, சமன் செய்து
ஸ்டெபிலைஸ் செய்கிறது. உதடுகள் சிறந்த ஸ்டெபிலைஸர்கள்.
உதடு வழியே உள்ளே செல்லும் காப்பி குபுகுபுக்கென்று நேரே
உணவுக் குழாயில் பாய்வதில்லை.
வாய்க்குள் சிறிது தங்கி அங்குள்ள ருசி மொட்டுக்களில் தனது
வாசனையையும் சுவையையும் கமகம என்று பரப்பிச் சில
வினாடிகள் கழித்து தொண்டை மண்டலப் பிரவேசம் செய்கிறது.
மிதமான சூடாதலால் தொண்டைக் குழாயில் வழி நெடுக காப்பிக்கு
இனிய வரவேற்பு.
தூக்கி சாப்பிடும் முறையில் சுடச் சுட ஊற்றிக் கொள்ளும்போது
தொண்டை மண்டலம் சூட்டுக்குப் பயந்து திரவத்தைச் சட்டென்று
அகப்பையில் விழும்படி அனுமதித்து விடுகிறது.
காப்பி என்னும் தேவ திரவமானது குடிப்பதற்கு முன்பே, தயாரிப்பின்
போதே, ஏன் அரைப்பட்ட மறு வினாடியே, அரைபட்ட நிலையிலேயே
வாசனை பரப்பி மகிழ வைக்கிறது. சாப்பிடும் போதும் நறுமணம்,
சாப்பிட்ட பின்னும் கூட வாயில் கமகமவென்ற காப்பி மணம் கமழும்.
அண்ணாந்து சாப்பிடுகிறவர்களுக்கு இத்தகைய இன்பம் குறைவு.
காப்பியின் யுடிலிடி மதிப்பை தூக்கி சாப்பிடுகிறவர்கள் குறைத்து
விடுகிறார்கள். சீப்பி சாப்பிடும்போது ஒரு சுயநலப் பாதுகாப்பும்
நம்மை அறியாமலேயே கிடைக்கிறது.
வேறு யாராவது நண்பர் சட்டென்று வந்து விட்டால் ‘தூக்கித்தான்
சாப்பிட்டேன்’ என்று காப்பி சிறிது பறி போகும் சாத்தியக் கூறு
உண்டு. சீப்பி கேஸில் அது கிடையாது. ‘அடடா! எச்சல்
பண்ணிட்டேன்’ என்று தப்பித்துக் கொள்ளலாம்.
வந்தவர்களுக்கு முக்கியமாக வீடுகளில் காப்பி தருவதுபோல தந்து
விட்டுக் குழந்தைகளை ஏவி விடுவார்கள்.
அதுகள் நாம் சாப்பிடும் காப்பியையே குறி வைத்து,
‘மாமா, காப்பி குடு’ என்று டம்ளரைப் பிடித்து இழுப்பார்கள். சீப்பி
சாப்பிடுபவர்களா “அடடே! வாண்டாம் கண்ணு. மாமா காப்பி எச்சல்!’
என்று தப்பித்துக் கொள்ளலாம்.
தூக்கிச் சாப்பிட்டால் நல்ல பெயர் கிடைக்கும் என்ற சில
‘தூக்கிகள்’ தவறாக நினைக்கிறார்கள்.
காப்பி டம்ளரை எப்படியும் கழுவித்தான் வைக்கப் போகிறார்கள்.
ஆகாச கங்கை மாதிரி உயரத் தூக்கிச் சாப்பிட்டாலும், சந்தேக
குணமுள்ள பெண்மணிகளுக்கு, டம்ளரின் விளிம்பு நம் உதட்டில்
நடுநடுவே பட்டது போலத் தோன்றும்.
‘எச்சில் பண்ணிச் சாப்பிட்டாரா, தூக்கிச் சாப்பிட்டாரா
தெரியவில்லை’ என்று நமக்கு ரெண்டுங்கெட்டான் பட்டம் கட்டி
விடுவார்கள்.
சில வீடுகளில் ஆற்றிக் கொள்ள வசதியாக இரண்டு டம்ளர்களில்
அல்லது டபரா டம்ளரில் தருவார்கள். சில வீடுகளிலோ அழகாக
டிரேயில் டம்ளரை வைத்து ஒற்றை டம்ளரில் காப்பியைத்
தருவார்கள்.
கல்யாண வீடுகளில் ரிசப்ஷனில் நீட்டுவார்களே அது மாதிரி.
அது சூடாக இருந்து விட்டால் தூக்கி சாப்பிடுகிறவர்களுக்குத்
திண்டாட்டம்.
ஆற்ற மாட்டாமல் ஆற்ற ஒரு டம்ளர் வேண்டுமெனத் தவிப்பார்கள்.
‘சீப்பி’க்கு அந்தக் கவலை இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக
உறிஞ்சிச் சாப்பிட்டு விடுவார்கள்.
தூக்கிகள் வேறு வகையிலும் நஷ்டப்படுகிறார்கள்.
காப்பியில் சர்க்கரை குறைவாக இருக்கிறது என்பதை வாயில்
வைத்ததுமே சீப்பி சொல்லி விடுவார். சில துளிகள்தான் சர்க்கரை
குறைவு என்ற அதிருப்தியுடன் வாயில் போயிருக்கும்.
ஆனால் தூக்கிக்கோ கபகபவென்ற கால் டம்ளர் உள்ளே போன
பிறகுதான், ‘சர்க்கரை வேண்டும்’ என்பதைக் கண்டுபிடிக்க
முடியும்.
ஐயோ பாவம், சர்க்கரை குறைவாகக் கால் டம்ளர் காப்பியைக்
குடிக்க நேர்ந்ததே, என்று மேலும் கால் டம்ளர் காப்பியை இலவச
இணைப்பாகத் தரவா போகிறார்கள்?
காப்பி பானம் ஒரு வகை மருந்தாகவும் பயன்படுகிறது.
அதில் உள்ள போதைப் பொருளில் வலி மறப்புச் சக்தி உள்ளது.
சீப்பிச் சாப்பிடும்போது வாய்க்குள் போகும் காப்பி பற்களையும்
ஈறுகளையும் ஈரப்படுத்தி, ஒளிந்து கொண்டிருக்கும் நோய்க்
கிருமிகளை ஒழித்துக் கட்டி விடும். (வெள்ளைக்காரர்கள் பல
தேய்க்காமல் பெட் காப்பி சாப்பிடுவது இதனால்தான் என்று
கொள்ளலாம்.)
அண்ணாந்து கொட்டிக் கொள்கிறவர்களுக்கு சில சமயம்
விசித்திர அபாயங்கள் நேர்வதுண்டு.
அண்ணாந்த நிலையில் திறந்த வாயில் காப்பியை ஊற்றிக்
கொள்ளும்போது, மேல் தளத்தில் ஊர்ந்து கொண்டிருக்கும்
பல்லியைப் பார்த்து அனாவசியமாகக் காபரா கொண்டு
வெடுக்கென்று தலையைக் கீழே கொண்டு வரும்போது தழுத்துச்
சுளுக்கு அபாயம் ஏற்படக் கூடும். ஹி ஹி!
‘எல்லாரும் ருசித்து ரசித்து காப்பி குடிக்கும் ‘சீப்பி’ முறையையே
கடைப்பிடிப்பது நல்லது’ என்கிறார் ஒரு சீப்பி வழக்க ஆளுனர்.
-பாக்கியம் ராமசாமி
நெல்லைத்தமிழன் said,
திசெம்பர் 3, 2021 இல் 4:16 பிப
நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.
ஆனால் கல்யாணத்துலலாம், இலையிலிருந்து ரசத்தையோ இல்லை பாயசத்தையோ உறிஞ்சி உறிஞ்சி பெட்ரோல் எடுப்பது போலக் குடிப்பவர்களைப் பார்த்தால், கொஞ்சம் தூக்கிச் சாப்பிடுங்கப்பா என்று சொல்லத் தோணுது