சிறுகதை – சுத்தி சுத்தி வந்தீக

ஏழை நாடோடி முதியவர் ஒருவர் ஒரு பெரிய மாளிகை முன் நின்று, “”வீட்டில் யார்? கதவைத் திறங்கள். இரவு மட்டும் தங்கிச் செல்ல அனுமதியுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டார். குரல் கேட்டு வெளியில் வந்தாள் ஒரு பெண். முதியவரைப் பிச்சைக்காரன் என்று நினைத்து, “”அதெல்லாம் முடியாது. இடமில்லை போய்விடு!” என்று விரட்டினாள்.


முதியவர் அங்கிருந்து நடந்து, ஒரு சிறிய குடிசை வீட்டு முன்நின்று கதவைத் தட்டி முன்போலவே தங்குவதற்கு இடம் கேட்டார். ஒரு பெண்மணி வெளியில் வந்து, “”வாருங்கள் ஐயா. இங்கு நீங்கள் தங்கலாம். சிறிய இடம். அதனால் சிரமம் இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்,” என்று வரவேற்று உபசரித்தாள். முதியவர் மகிழ்ந்தார். உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார்.

ஏழைக்குடும்பம்; இரண்டு மூன்று குழந்தைகள். நல்ல துணிமணி இல்லை. நைந்து கிழிந்து போனவற்றையே அக்குழந்தைகள் அணிந்திருந்தனர். பிறகு அந்தப் பெண்மணி வீட்டிலிருந்த சொற்ப உணவைக் கொண்டு வந்து வைத்து முதியவரை சாப்பிட அழைத்தாள். “”என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து உண்ணலாம்!” என்றவாறு தான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து, எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார் முதியவர்.

குழந்தைகள் உண்டு மகிழ்ந்தனர். மறுநாள் பொழுது விடிந்தது. தன் பயணத்தைத் தொடர்ந்த முதியவர் கிளம்பும்போது, “”அம்மணி! நீ காலையில் முதன் முதலில் செய்யத் தொடங்கும் வேலை மாலையில் இருட்டும் வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்!” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவருக்கு விடை கொடுத்துவிட்டு உள்ளே சென்ற பெண்மணி குழந்தைகளுக்குப் புதுச்சட்டைகள் தைக்க விரும்பினாள். அவளிடம் கொஞ்சம் புதுத்துணி இருந்தது. எல்லாருக்கும் போதுமா என்பது தெரியவில்லை. எனவே, அளந்து பார்க்கத் தொடங்கினாள். அவ்வளவுதான்!  அளக்க அளக்க புதுத்துணி வளர்ந்து கொண்டே போயிற்று. அவளும் சளைக்கவில்லை. மாலைக்குள் துணி  மலைபோல் குவிந்துவிட்டது. தேவையான துணியை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்று, பொருள் ஈட்டி அதைக் கொண்டு நிம்மதியாக குழந்தைகளை வளர்க்க நினைத்தாள்.

அப்பெண்மணி துணியை அளக்கப் பயன்படுத்திய கோல், பக்கத்துவீட்டுப் பணக்காரியுடையது. மாலையில் அவளிடம் அதைக் கொண்டு போய் திரும்பக் கொடுத்தாள். கூடவே தன் வீட்டில் நடந்த அற்புதங்களைப் பெருமையாகக் கூறினாள். அப்போதுதான், அந்த முதியவரைத் தான் விரட்டியடித்தது அந்தப் பணக்காரிக்கு நினைவுக்கு வந்தது. அவரைத் தன் வீட்டில் தங்க அனுமதிக்காமல் போனோமே என்று வருந்தினாள்.

இப்போதுதான் என்ன மோசம் போய்விட்டது என்று எண்ணிய அவள் தன் குதிரை வண்டிக்காரனை அழைத்தாள். “ஓடு ஓடு! உடனே போய், அந்த கிழப்பிச்சைக்காரன் எங்கேயாவது நடந்து போய்க் கொண்டிருப்பான். அவனை மறித்து வண்டியில் ஏற்றி நம் வீட்டுக்கு உடனே அழைத்து வா!” என்று அவனை விரட்டியடித்தாள்.


அதற்குள் கிழவர் நீண்ட தூரம் போய்விட்டார். அவரை அணுகிய வண்டிக்காரன், “”ஐயா, என் எஜமானி உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லி வண்டி அனுப்பியிருக்கிறார்!” என்றான். முதியவருக்குத் திரும்பிச் செல்ல விருப்பமில்லை; வர மறுத்தார். ஆனால், வண்டிக்காரனோ விடுவதாக இல்லை. “”ஐயா! என் எஜமானி  மிகவும் கோபக்காரி. நான் மட்டும் தனியாகத் திரும்பிச் சென்றால் என்னை வேலையை விட்டே நிறுத்தி விடுவாள். எனவே தயவு செய்து என்னுடன் வாருங்கள்!” என்று கெஞ்சினான்.

முதியவருக்குப் பாவமாக இருந்தது.  வண்டியில் ஏறிக் கொண்டார்.  பணக்காரி அவரை வணங்கி வரவேற்றாள். உள்ளே அழைத்துப் போனாள். சிறப்பான அறுசுவை உணவுகளை வழங்கினாள். மிருதுவான பஞ்சுமெத்தை ஒன்றை விரித்துப் போட்டு,  “”முதியவரே, நிம்மதியாக இதில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கேட்டுக் கொண்டாள்.

அதிகாலையில் துயிலெழுந்த முதியவர் தனது பயணத்துக்கு ஆயத்தமானார். அதற்குள் பணக்காரிக்கு அவசரம்.


“”சொல்லுங்கள் முதியவரே! இன்று நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டாள். அதற்கு அந்த முதியவர்,  முதல் நாள் அந்தப் பெண்ணிடம் கூறியது போலவே, “”அம்மணி! நீ காலையில் முதன் முதலில் செய்யத்  தொடங்கும் செயல், நிற்காமல் மாலையில் இருட்டும் வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கும்!” என்றார்.


அவ்வளவுதான்! அடுத்தகணம், அந்த பணக்காரி முதியவருக்கு விடை கொடுப்பதைக் கூட மறந்து விட்டாள். வீட்டுக்குள் ஓடினாள். புதுத்துணி ஒன்றை அளப்பதற்கு அளவுகோலை எடுத்துக் கொண்டாள். புதிய லினன் துணி அடுத்த அறையில் இருந்தது. அதைக் கொண்டு வர ஓடலானாள். அந்த நேரம் பார்த்து அவள் கால்களில்  ஒரு கோழி சிக்கிக் கொண்டது. அவள் தடுமாறினாள்.

துணியை அளக்க வேண்டியதை மறந்தாள். சினத்துடன்  கோழியை அடிக்க அளவுகோலை ஓங்கிக் கொண்டு ஓடினாள். அவள் செய்த அந்த முதல் செயல், அவளைத் தொற்றிக் கொண்டுவிட்டது. பாவம்! மாலை வரையில் கன்னாபின்னா என்று திட்டிக் கொண்டே, அளவுகோலை ஓங்கியவாறு கோழியைத் துரத்தித் தடுமாறிக் கீழே விழுந்து புரண்டு, எழுந்து, மீண்டும் விழுந்து, மீண்டும் எழுந்து ஓடிக் கொண்டே இருந்தாள். அந்தப் பேராசை பிடித்த பணக்காரிக்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது.

நன்றி-சிறுவர்மலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: