கி.மு., 599ல் அவதரித்த, வர்த்தமான மகாவீரர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது…

நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், ஏதோ இன்று நடப்பதை
அன்றே சொன்னது போல இருக்கும். கி.மு., 599ல் அவதரித்த,
வர்த்தமான மகாவீரர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது…

கவுசாம்பி நகரில் இருந்த பெரும் செல்வந்தரின் மகனான,
தனதேவன் என்பவர், ஊர் ஊராகப்போய் வியாபாரம் செய்து
வந்தார். வர்த்தமானபுரம் எனும் ஊரை அடைந்த போது,
அவருடைய வண்டியை இழுக்கும் காளை மாடு, மோசமான
நிலையை அடைந்தது.

வேறு வழியற்ற நிலையில், அவ்வூர் முக்கியஸ்தர்களிடம்
ஏராளமான பொன்னை அளித்து, ‘இந்த காளையை பத்திரமாக
காப்பாற்றி பார்த்துக் கொள்ளுங்கள்…’ என்றார், தனதேவன்.

பொன்னைப் வாங்கிய அவர்கள், காளையை காப்பாற்றுவதில்
அக்கறை காட்டாததால், காளை இறந்தது.

இறந்த காளை மறு பிறவியில், அதே கிராமத்தில், ஒரு யட்சனாக
பிறந்தது.

தவம் செய்து, விவரம் அறிந்த யட்சன், ‘என்னைக்
காப்பாற்றுவதற்காக தந்த பொன்னை பெற்றுக் கொண்டு, என்
மரணத்திற்குக் காரணமான, இந்த ஊர் மக்களை விட்டு வைக்க
மாட்டேன். கொள்ளை நோயாக பரவி, இவர்களை அழிப்பேன்…’
என்று, சபதம் போட்டார்.

ஊரில் உள்ள அனைவரும், பெயர் சொல்லத் தெரியாத, கொடிய
கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு துடித்தனர்; திறந்தவெளி
பொது இடத்தில் கூடி கதறினர்.

அப்போது அசரீரியாக, ‘தீயவர்களே… பேராசை வசப்பட்ட நீங்கள்,
பெரியவர்களை மதிக்கவில்லை. ஒரு காளை மாட்டை
பராமரிக்காமல், பொன்னை முழுவதுமாக உரிமை கொண்டாடிய
நீங்கள், அதற்கு உண்டான பலனை அனுபவித்துத் தான் ஆக
வேண்டும்…’ என்றார், யட்சன்.

நடுங்கிய ஊர் மக்கள், பரிகாரம் கூறும்படி வேண்டினர்.

மனம் இரங்கி, ‘இறந்துபோன அந்த காளை மாட்டின் எலும்புகளை
குவித்து, அதன்மேல் ஒரு கோவில் கட்டுங்கள்… யட்சன் வடிவம்
ஒன்றையும், காளை ஒன்றின் வடிவத்தையும் அங்கு பிரதிஷ்டை
செய்து வழிபாடு செய்யுங்கள்…’ என்றார், யட்சன்.

அதன்படியே கோவில் கட்டினர்.

இருப்பினும், யட்சனின் கோபம் முழுமையாக தணியவில்லை.
அக்கோவிலில் வந்து இளைப்பாறுபவர்களுக்கு, தொல்லை
கொடுத்து, கொல்லவும் செய்தார்.

அந்த நேரத்தில் தான், வர்த்தமான மகாவீரர் அக்கோவிலுக்கு
வந்து தங்கினார். இரவில், கோரமான வடிவத்துடன் பெருங்குரலில்
கத்தி, மகாவீரரை மிரட்டினார், யட்சன்.

மகாவீரர் அஞ்சவில்லை; பெரும் பாம்பு வடிவம் கொண்டு,
மகாவீரரை கடித்தார், யட்சன்.

அதுவும் செல்லுபடியாகவில்லை. கடைசியில் தன் ஆற்றலை இழந்த,
யட்சன், மகாவீரரின் திருவடிகளை வணங்கி, அன்றுடன் அங்கிருந்து
மறைந்தார். ஊர் மக்களும் துயரங்களிலிருந்து விடுதலை
அடைந்தனர்.

ஏராளமான மகான்களும், ஞானிகளும் அவதரித்த பூமி,
நம் பாரத பூமி. காரண காரியம் தெரியாமல், ஒரு கொடிய நோய்,
நம் அனைவரையும் மிரட்டி, விரட்டிக் கொண்டிருக்கிறது.

அந்நோயை விரட்டி, நம்மை காக்குமாறு, அந்த தவ சீலர்களையே

வேண்டுவோம்!

பி. என். பரசுராமன்
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: