கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம் Tm3


“மனம் என்ன கல்லோ’ என்போம், கடுமையான மனத்தை
இவ்வாறு கூறுகின்றோம். அவ்வாறான கடுமையான மனம்
உடையவர்கள் வேடர்கள்.

விலங்குகளை வேட்டையாட கடுமையான மனம் வேண்டும்.
அம்பு பட்ட மானும், புலியும், சிங்கமும் துடிதுடித்துச் சாவதை
காணும் திண்ணிய நெஞ்சம் இருக்க வேண்டும்.

அவற்றை அறுத்து சுட்டுப் பொசுக்க வேட்டுவச்சியும் பாவம்
புண்ணியம் பாராதவளாக இருத்தல் அவசியம்.

ஆனால், எவ்வளவு கடினமானவர்களுக்கும் யாரோ ஒருவரிடம்
அன்பு செலுத்தும் ஈரம் இருக்கும். அப்படியான கல்லுக்குள்
ஈரத்தைக் கவிதை ஆக்குகிறது 18 வரிகள் கொண்ட
புறநானூற்றுப் பாடல் ஒன்று. வீரை வெளியனார் இயற்றிய
இப்பாடல் இந்த வித்தகத்தைப் புரிகிறது.

பரிசு பெற்ற புலவர், பரிசில் நாடிவரும் புலவரை ஆற்றுப்படுத்தி,
அதாவது வழிகாட்டி அனுப்பி வைப்பதாக அமைந்த பாடல் இது

காட்டு வழியாகப் போகும்போது, “வேடன் ஒருவன் வீட்டில்
தங்கிச் செல்லலாம்’ என்கிறார். வேடனைப் பற்றி கூற வந்தவர்,
அவன் மனைவியின் அருள் குணத்தை சுட்டிக் காட்டுகிறார்.

பந்தல் போன்ற நிழல் தரும் பலாமரம், அதன் நிழலில்
வேட்டையாடும் அந்த வேட்டுவன் ஒரு நார்க் கட்டிலில்
உறங்குகிறான். வேடன் வீட்டில் பார்வை மான் ஒன்று
கட்டப்பட்டிருக்கிறது. அந்த மானை பார்வைக்கு வைத்து,
அதைக் கடித்துக் குதற, பாய்ந்து வரும் கொடிய விலங்குகளை
வேட்டையாடுவது வேடர்கள் வழக்கம்.

“பார்வை மடப்பிணை’ என்பதால் அது ஒரு பெண்மான்.
வீட்டில் கட்டி வளர்ப்பதால், அந்த மானுக்கு ஆண் மானுடன்
கூடி மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதே இல்லை.
அந்தப் பெண்மான் புணர்ச்சிக்கு ஏங்கியிருக்கிறது.
வாசலில் மான் தோலில் தினையரிசி காய்கிறது.

இந்த நேரத்தில் கட்டியிருக்கும் பெண் மானிடம் ஆண் மான்
ஒன்று வந்து விளையாடுகிறது. புணர்ச்சியில் ஈடுபட இருக்கும்
நேரம். காட்டுக் கோழிகள் தினை அரிசியைக் கொத்துகின்றன.

அன்றைய இரவு உணவுக்கான தினையரிசி அது. காட்டுக்
கோழிகள் தின்றுவிட்டால் வேடனும் வேட்டுவச்சியும் பசித்த
வயிற்றுடன் படுக்க வேண்டியதுதான்.

கோழியை விரட்ட வேடனின் மனைவி விரைந்து வருகிறாள்.
கல்லை எடுத்தவள் மான்களைப் பார்த்துவிட்டாள். கிடைக்காத
புணர்ச்சி கிடைக்க இருக்கும் வேளையில், சத்தம் கேட்டு வேடன்
விழித்துக் கொண்டால் ஆண் மானை வேட்டையாடிவிடுவான்.
போனால் போகட்டும் என்று அமைதியாகத் திரும்புகிறாள்.

வேடனின் மனைவியின் உள்ளத்தில் ஈரம் கசிகிறது.
அந்தக் காட்சியைக் காட்டி, அந்த வேடன் வீட்டில் நாம் தங்கிச்
செல்லலாம் என்று வழிகாட்டுகிறார்.

பார்வை மானின் புணர்ச்சிக்காக தினை அரிசியை இழந்து
பசித்திருக்கத் துணியும் வேட்டுவச்சியின் மேன்மையான
கருணையுள்ளம் இப் பாடலில் காட்டப்படுகிறது.

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணை வயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இவ் வழங்காமையின் கல்லென ஒலித்து…

(புறநா.320)

By -திருவாரூர் இரெ.சண்முகவடிவேல்
நன்றி-தமிழ்மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: