பனைமர நிழல் -சிறுகதை


பனைமர நிழல் E_1464929518


வாசலில் வந்து நின்ற சேகரை, யாரும் துளியும்
எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் பரபரப்பும், நிறைய
ஆச்சரியமுமாய், எல்லாரும் அவனை வரவேற்றனர்.

”இருளாயி… உம்மவன், எஞ்சாவுக்குத் தான் வந்து
நிப்பான்னு நினைச்சேன்; பரவாயில்ல முன்னமே
அவுகளுக்கு புத்தி வந்துருச்சு போல…” கோபப்பட்டார்,
ஐயா.

அவருடைய கோபத்தில் நியாயமிருந்தாலும், அந்த
நியாயத்தில் அர்த்தமேயில்லை என நினைத்தான் சேகர்.

கொஞ்சம் வெயிலும், நிறைய நிழலும் படர்ந்து கிடந்த பூமி;
பூச்சுக்கு காத்திருக்கும் சுவர்கள். கிராமத்து சொத்தாய்
திரிந்த ஆடு, மாடு மற்றும் கோழிகள்.

வைத்திக்கும், இருளாயிக்கும் பிறந்தது ஏழு பிள்ளைகள்;
இரண்டு சாமிக்கு தந்தது போக, சேகரோடு சேர்த்து ஐந்து
மிச்சம். இரு ஆண்கள், இரு பெண்கள், சேகர் தான் கடைசி.

செவத்த தோளும், சுருட்டை முடியுமாய் கடைசி பிள்ளை
ரொம்ப அழகாய் பிறந்ததில், பெற்றவர்களுக்கு ரொம்ப
பகுமானம்.

சேகருக்கு விவசாயத்தை விட, படிப்பில் தான் நாட்டமிருந்தது.
வெள்ளாமையில் கிடைத்த பணத்தில் பாதியை செலவழித்து,
ஏதேதோ படித்தான். எல்லாவற்றிலும் முதல் மார்க் என்று,
சுவரில், கட்டம் கட்டிய சட்டங்களாய் மாட்டி வைத்தான்.
அந்த சட்டங்களுக்குள் ஒளிந்து கிடப்பது, அவனுடைய புத்தியின்
உழைப்பு என்று, யாரும் அங்கீகரிக்கவில்லை என்ற ஆதங்கம்,
அவனுக்கு எப்போதுமே உண்டு.

சேகருக்கு எல்லாம் தன்னால் கூடி வர, படிப்பு முடிந்த கையோடு
வேலையும் அமைந்தது. உயரிய வாழ்க்கை வசதி, படித்த மனைவி
என்று, கூடப்பிறந்த நான்கு பேருக்கும் கிட்டாத எல்லாமும்,
அவனுக்கு வாய்த்தது.

வேலையில், படிப்பில் திளைத்து பழகியவனுக்கு, கிராமத்துக்கு
வருவது மறந்து போனது. பண்டிகை வந்தால், பெற்றோர், உடன்
பிறந்தோரிடம் போனில் பேசுவதோடு தன் கடமை முடிந்ததாக
நினைத்துக் கொண்டான்.

”பாத்தியா சேகரு… என் பொண்ணோட மஞ்சத் தண்ணிக்கு
நீ வந்துட்டயில்லே… இதுக்கு பேர் தான் ரத்த பந்தங்கிறது,”
சந்தோஷத்தில் திளைத்தாள் அக்கா.

”இதுக்கெல்லாம் ஒரு விழான்னு, ஊரை கூட்டி ஏன்க்கா விளம்பரம்
செய்துட்டு இருக்கே… எப்பத்தான் நீங்க எல்லாம் மாறுவீங்களோ…”
என்றான்.

அவனுடைய பதிலில் அக்காவின் முகம், சுண்டிப் போனது.

ஏன் சேகரு… உன் பொண்டாட்டிக்கு தான் எங்கள பாக்கிற
ஆசை இல்ல; ஆனா, எங்களுக்கு பேரன், பேத்திய
பாக்கணும்ன்னு ஆசை இருக்காதா…” நெஞ்சு பொறுக்காமல்
கேட்டாள் அம்மா.

”இந்த வருஷம் லீவுக்கு கூட்டிட்டு வரேன்ம்மா,” எரிச்சலாய்
நுனி நாக்கில் சொன்னான். அந்த வார்த்தையில் இருந்த
பொய், அவனுக்கே தெரிந்தது.

‘மூன்று ஆண்டுகளுக்கு முன், பெரியப்பா காரியத்திற்கு வந்து
போனதே ஐயா நச்சரித்ததால் தான். அப்படியிருக்க
குடும்பத்தை அழைத்து வருவதாவது…’ என நினைத்துக்
கொண்டான்.

சொந்தங்களால் வீடு நிரம்பி வழிந்தது. உறவுமுறை ஜனங்கள்
எல்லாம், விருந்து சாப்பிட்டு, சீர் செய்தபடி இருந்தனர்.

”ஏன் ராமுண்ணா… நான் தெரியாம தான் கேட்கிறேன்…
இவங்க எல்லாம் ஏன் தட்டுமுட்டு சாமான்களை கொண்டு
வந்து, சீர்ங்கிற பேர்ல, நம்ம வீட்டை நிறைக்கிறாங்க…

இந்த பழக்கமெல்லாம் இன்னுமா நம்ம ஊர்ல மாறாம இருக்கு…
எப்ப தான் நம்ம ஜனங்க திருந்தப் போறாங்களோ…” என்றான்
சேகர்.

புன்னகைத்தான் ராமு. தம்பியின் சிந்தனையின் உயரம்,
அவனுக்கு எட்டாததாக இருந்தது.

”அப்படியில்ல சேகர்… இதெல்லாம் காலம் காலமாய் நினைவில்
நிற்கிற விஷயங்க. நம்ப வீட்டில தண்ணி காய வைக்குற
பித்தளை அண்டா இருக்கே… அது, நம்ம பாட்டிக்கு அவங்க பாட்டி
சீதனமா தந்ததாம். இந்த பாத்திரங்கள நாம பயன்படுத்தும் போது,
அதை தந்தவங்களோட நினைவும், அவங்களோட நமக்கிருக்கும்
உறவும், அவங்க ஆசீர்வாதமும், நம்பள நிழல் போல
தொடரும்கிறது நம்பிக்கை,” என்றான் ராமு.

”இந்த தேவையில்லாத சென்டிமென்ட்டால தான், நம்மோட
கிராமமே முன்னேறாம இருக்கு; சிட்டியில வந்து பாரு…
ஆயிரத்தெட்டு வாட்டர் ஹீட்டர் வந்தாச்சு,” என்றான்.

சேகர் நிறைய மாறி இருந்தான். விழுதுக்கும், வேருக்கும்
கவலைப்பட்டு, வியாக்கியானம் பேசுகிற சென்டிமென்ட்களில்
அவனுக்கு துளி கூட நாட்டமில்லை.

கூடத்தை ஒட்டிய அறையில், சேகருக்கு படுக்கை போடப்பட்டது.
காற்று போதவில்லை என்று அவஸ்தை பட்டதால், இரண்டு டேபிள்
பேன் கொண்டு வந்து வைத்தனர்.

தான் ஓடி ஆடிய வீடென்றாலும், சேகருக்கு அந்த வீடும், சூழலும்
ரொம்பவுமே அன்னியமாய் தோன்றியது. ‘எப்போ கிளம்பி
வர்றீங்க…’ என்று, 20, ‘மெசேஜ்’ அனுப்பி விட்டாள், அவன் மனைவி.
அவளிடம் பேசலாம் என்றால், பாழாய் போன ஊரில், ‘டவர்’ இல்லை.

”என்ன சித்தப்பா… தூக்கம் வரலியா…” என்று கேட்டபடி அருகில்
வந்து அமர்ந்தான், பெரியண்ணன் மகன் கண்ணன். நெகு
நெகுவென உயரமும், பதினெட்டு வயதுக்கான அரும்பு மீசையும்,
சிரித்த முகமுமாய், அவனை பார்க்கும் போது, அடிமனதில்,
மத்தாப்பாய் உற்சாகம் பூத்தது.

”எப்படிடா போகுது படிப்பெல்லாம்?” என்று கேட்டான் சேகர்.

”சூப்பரா போகுது சித்தப்பா…”

”பிளஸ் டூ முடிச்சதும், கிளம்பி, மும்பை வந்து சேரு… எண்ணி
அஞ்சே வருஷத்துல உன்னால கற்பனை செய்து கூட பார்க்க
முடியாத உயரத்திற்கு உன்னை கொண்டு போறேன்.
சுத்த போர்டா இந்த ஊர்… எப்படிடா நீ இங்க இருக்கே…
உன் வயசு பசங்க சிட்டியில எப்படியெல்லாம் அனுபவிக்கிறாங்க
தெரியுமா?” என்றான்.

மவுனமாக சித்தப்பாவை பார்த்தான் கண்ணன்.

என்னடா யோசிக்குற… சித்தி ஏதும் நினைப்பாங்களோன்னு
கவலைப்படுறியா… அவ இங்க இருக்கறவங்க மாதிரி
இல்லடா; நிறைய படிச்சவ. இந்த மாதிரி விஷயங்களுக்கு
முழுக்க, ‘சப்போர்ட்’ பண்ணுவா…
நீ ஒருமுறை வந்து தான் பாரேன்,” என்றான்.

”தப்பா நினைச்சுக்காதீங்க சித்தப்பா… நான் படிக்கிறதுக்கு
வெளியில போற ஐடியால்லாம் இல்ல. நம்ப ஊருக்கு
பக்கத்துலயே காலேஜ் வந்தாச்சு; அங்கேயே படிக்கலாம்ன்னு
இருக்கேன். படிச்சு முடிச்சதும், பக்கத்திலேயே வேலை
பார்க்கணும். எங்கப்பாவுடைய பண்ணையும், சித்தப்பாவுடைய
உரக்கடையும், ‘இம்ப்ரூவ்’ செய்ய, நான் தானே உதவி செய்யணும்.

ஏன்னா, அவங்க ரெண்டு பேரையும் பாத்துக்க, வீட்ல நான்
ஒருத்தன் தானே பையன். மத்ததெல்லாம் பொம்பளை
புள்ளைங்க, அதுவும் சின்ன பிள்ளைங்க,” என்றான்.

அவன் பொறுப்பாய் பேசியது, சேகருக்கு வியப்பாய் இருந்தது.
ஆனாலும், தன் அண்ணன்களுடன் தன்னையும் சேர்த்துக்
கொள்ளாதது, வருத்தமாய் இருந்தது.

”என்னடா… ஏதாவது, ‘லவ்’ மேட்டரா… அதான் ஊரை விட்டு
வரமாட்டேன்னு சொல்றியா…” கண்ணடித்தான் சேகர்.

கண்ணனின் இளம் முகத்தில் வெட்கம் எட்டிப் பார்த்தது.

”அப்படித்தான் வச்சுக்கங்களேன்…” என்றான் குறும்பாக!

”ஏய்… எவ்வளவு தைரியமா, என்கிட்டயே, ‘லவ்’ பண்றேன்னு
சொல்வே…” என்றான் சற்றே கோபமாக!

”தப்பா நினைக்காதீங்க சித்தப்பா… ஒரு மகனா, பொறுப்புள்ள
மனுஷனுக்கு உண்டான கடமையை தான் நான் காதலிக்கிறேன்.
விட்டுட்டு போறது பெரிசில்ல; ஆனா, திரும்ப வரும் போது,
நமக்கான இடம் அங்கே இல்லாம போயிடக் கூடாதில்ல,” என்றான்
மென்மையாக!

அவன் பேச்சில் இருந்த முதிர்ச்சியை உணர்ந்து, ஆச்சரியமாக
அவனையே பார்த்தான் சேகர்.

”மும்பையில நிறைய வசதிகள் இருக்கலாம்; அந்த வசதிகளை
அளவுக்கு அதிகமாய் மோகிக்க ஆரம்பிச்சுட்டா, இயல்பான
எல்லா விஷயங்களும், நமக்கு அசவுகரியங்களா போயிடும்,”
என்றான் கண்ணன்.

”என்னடா எனக்கே புத்தி சொல்றியா…” என்றான் கோபமாக!

”ச்சே ச்சே… நான் சாதாரணமா தான் சொல்றேன். பெரிய
குடும்பத்துல வளர்றேன்; சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள்
நிறைய இருந்தாலும், ஏதோ ஒண்ணு, என்னை இந்த குடும்பத்தோட
கட்டி வைக்குது.

தினமும் எங்கம்மா என்கிட்ட என்ன சொல்வாங்க தெரியுமா…
‘டேய் கண்ணா… உங்க சித்தப்பாவாட்டம் நாகரிகமா வாழ்றேன்னு,
பெத்தவங்களையும், மத்தவங்களையும் தூக்கி வீசியெறிஞ்சுடாதடா
தங்கம்…

ஐயாவுக்காவது மூணு பிள்ளைங்க; தாங்கிக்க ரெண்டு பேர்
மிச்சமிருக்காங்க. எனக்கு நீ ஒருத்தன்தான்டா இருக்கேன்’னு,
சொல்வாங்க,” என்றான்.

இதைக் கேட்டதும் சேகருக்கு, ‘சுர்’ரென்று கோபம் வந்தது.
முகத்தை, ‘உர்’ரென்று வைத்து, அவனை முறைத்துப் பார்த்தான்.

”என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா… நான் இதை குறையா
சொல்லல. உங்க படிப்பு, அதனால, நீங்க அடைஞ்ச உயரம்,
எல்லாமே நல்லா இருக்கு. ஆனா, அது மட்டும் தான் உங்க
உலகம்ன்னு நீங்க அங்கயே தங்கிடறது தான் வருத்தமா இருக்கு.
பட்டும் படாம, மண்ணுல விழற பனைமர நிழலுக்கும்,
மண்ணுக்கும், இடையே எந்த உறவும் இல்லாமலே போயிடுறதப்
போல, நீங்க, நம்ம குடும்பத்துக்கு பனைமர நிழலா ஆயிட்டீங்க.
—————-

”வெளியே கொஞ்சம் எட்டிப் பாருங்க… கூடத்துல
உட்கார்ந்து எல்லாரும் எப்படி பேசி, சிரிச்சு,
விளையாடிட்டு இருக்காங்கன்னு… தூரத்து சொந்தங்க
கூட நெருக்கமா கூடிக் குலாவிட்டு இருக்காங்க.

ஆனா, பெத்த தாய், தகப்பன், அண்ணன், அக்காங்கற
ஒரு வயிற்று சொந்தங்கள் கூட, இப்போ உங்களுக்கு
அன்னியமாயிடுச்சே… அதை, நீங்க
கவனிக்கவேயில்லயே… உங்களோட இந்த கவனக்
குறைவால பாதிக்கப்படறது, நீங்க மட்டுமில்ல,
உங்க குழந்தைகளும் தான்,” எனச் சொல்லி எழுந்து
போய் விட்டான்.

ஒரு சின்ன பையன் நமக்கு புத்தி சொல்கிறானே என
நினைத்து, அவமானமாய் இருந்தாலும், அவன்
வார்த்தையில் இருந்த நிஜம், முள்ளாய் தைத்தது.

அவன் சொல்வது நிஜம் தான். அப்பாவுடைய சித்தப்பா,
பெரியப்பா மகன்கள், பேரன்கள், அம்மாவுடைய தூரத்து
உறவுமுறைகள் கூட, நடுக்கூடத்தில் அமர்ந்து, நையாண்டி
பேசியபடி இருக்க, இவனுக்கோ யாரிடமும் பேச எதுவுமே
இல்லாதது போல் தோன்றியது.

அந்த நிமிடம், அந்த சூழ்நிலையில், தான் மட்டும்
அன்னியப்பட்டது போல், மனதுக்குள் தாழ்வு
மனப்பான்மை ஏற்பட்டது.

இது, இவன் வீடு; இந்த வெப்பமும், மண்ணின் வேக்காடும்
தான் இவனை வளர்த்து ஆளாக்கியது. கிணத்து திட்டும்,
மாட்டு கொட்டகையும் தான், இவன் படிப்பிற்காக
ஒதுங்கிய தனியறைகள்.

உயிரோடு ஒருங்கிணைந்த உறவுகளை கடந்து போகச்
சொல்லியா இவன் கற்ற படிப்பும், நாகரிகமும் கற்றுத்
தந்தது?

நினைத்து பார்க்கையில் வெட்கமாய் இருந்தது.

இரண்டு நாட்கள் போன வேகமே தெரியவில்லை.
சேகர் ஊருக்கு கிளம்பினான்.

”என்னமோய்யா… நீ வந்தத நினைச்சா ரொம்ப பெருமையா
இருக்கு; ஆனா, நீ எங்கள விட்டு, ரொம்ப தள்ளி
போயிட்டயேன்னு வேதனையா இருக்கு,” என்று கூறி,
கைகளைப் பற்றி தழுதழுத்தாள் அம்மா.

”ஆமாமா… நாலு நாளா இந்த வீட்டில இருந்தாலும், உங்க
எல்லாரையும் விட்டு தூரத்துல இருந்தேன். இப்ப
இங்கிருந்து போனாலும், இனி, எப்பவும் என் மனசும்,
உணர்வும், உங்க எல்லார் பக்கத்திலயும் தான் இருக்கும்.

ஏன்னா, தூரம் எது, பக்கம் எதுன்னு என் மகன் எனக்கு
புரிய வச்சுட்டான்,” என்று கூறி, கண்ணனை, தோளோடு
சேர்த்தணைத்து உச்சி முகர்ந்தான், சேகர். எல்லாருக்கும்
இனம் தெரியாத மகிழ்ச்சி பரவியது.

”மாமா… உங்க டிரஸ்சை துவைச்சு போட்ருக்கேன்;
அதை இன்னும் நீங்க எடுத்துக்கல. அப்புறம் உங்க டவல்,
பவுடர், சோப்பு எல்லாத்தையும், இங்கயே விட்டுட்டு
போறீங்க…” அத்தனையும் பொறுக்கியபடி, ஓடி வந்தாள்
அக்கா மகள்.

”எல்லாத்தையும் கணக்குப் பார்த்து பொறுக்கிட்டு போக,
இது, ‘லாட்ஜ்’ இல்லடா செல்லம்… இது, என் வீடு; என்
அடையாளத்தை இங்கிருந்து அழிச்சுட்டு போற மாதிரி,
முட்டாள்தனம் எதுவுமில்லன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
எல்லாம் இங்கயே இருக்கட்டும்; எல்லாரையும் அழைச்சுட்டு
நான் திரும்பி வருவேன்; உங்க கூட உறவாட,” எனக் கூறி,
கம்பீரமாய் நடந்து போனான் சேகர்.

சந்தோஷத்தில், எல்லார் கண்களும் நீரில் நிரம்பியது.

தன் மேல் விழுந்த மாலை நேரத்து மஞ்சள் வெயிலின் நிழல்,
மண்ணில் புரண்டு விளையாடியதை, புன்முறுவல் பூக்க
பார்த்தபடி நடந்தான் சேகர்.

————————————-

எஸ்.பர்வின்பானு
-வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: