இப்போது இவர் ஐபிஎஸ் அதிகாரி!

ILMA-1

வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்த
ஒருவர் என்ன செய்வார்? அங்கேயே நல்ல வருமானம்
வரக்கூடிய ஒரு வேலையைத் தேடிக் கொண்டு,
இன்னும் உயரே பறக்க ஆசைப்படுவார்.

ஆனால் இல்மா அஃப்ராஸ் அப்படிச் செய்யவில்லை.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்
கழகத்தில் படித்த அவர், ஏழை மக்களின் கண்களில்
வழியும் கண்ணீரைத் துடைப்பதற்கென்றே தான்
பிறந்த மண்ணுக்குத் திரும்பி வந்திருக்கிறார்.
இப்போது அவர் ஓர் ஐபிஎஸ் அதிகாரி.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில்
உள்ளது குன்டார்கி. இங்கு ஏழை விவசாயி ஒருவரின்
மகளாகப் பிறந்தவர்தான் இல்மா அஃப்ராஸ்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருடைய தந்தை,
இல்மா அஃப்ராûஸயும் அவருடைய தம்பியையும்,
அவருடைய தாயையும் தவிக்கவிட்டுவிட்டு, இறந்து
போகிறார். அப்போது இல்மாவுக்கு வயது 14. தம்பிக்கு
வயது 12.

கடுமையான வறுமை. இல்மாவின் தாய் பல
வேலைகளையும் செய்து இரு பிள்ளைகளையும்
வளர்க்கிறார். தம்பியும் வேலைக்குப் போக வேண்டிய
சூழல்.

இல்மா மட்டுமே அந்த வீட்டில் படிக்கிறார். தாய், த
ம்பியின் உழைப்பு அவரைப் படிக்க வைக்கிறது.

“பொதுவாக பெண்ணைப் பெற்ற ஒரு தாய் பெண்ணை
வளர்த்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க
வேண்டும் என்றே நினைப்பார்கள். பெண்ணுக்குத்
தேவையான நகைகளை வாங்குவது, வரதட்சணைக்கான
பணத்தைச் சேமிப்பது என்பதே அவர்களின் முக்கிய
எண்ணமாக இருக்கும்.

ஆனால் என் அம்மா அப்படி நினைக்கவில்லை. என்னைப்
படிக்க வைப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது”
என்கிறார் இல்மா.

உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பை முடித்த அவர்,
பட்டப்படிப்பு படிப்பதற்காக புதுதில்லியில் உள்ள
செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே
அவர் படித்தது தத்துவம். அந்தக் கல்லூரியில் படித்தது
அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

“கல்லூரியில் பாடங்களைப் படித்ததை விட, கல்லூரிக்கு
வெளியில் உள்ள உலகைக் கற்றுக் கொள்ள பெரிய
வாய்ப்பாக கல்லூரியில் படித்த அந்த மூன்று ஆண்டுகள்
இருந்தன.

அங்கு பணிபுரிந்த பேராசிரியர்கள் மாணவர்களுடன்
நெருங்கிப் பழகினார்கள். முக்கியமான பாடங்களைப் புரிந்து
கொள்வதற்காக மாணவர்களுக்கு உதவினார்கள். நாங்கள்
தத்துவம் படித்ததால் சுயமாகச் சிந்திக்கும் பழக்கம்
அப்போது எனக்கு ஏற்பட்டது.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்
எனக்கு அப்போது ஏற்பட்டது.

நமது நாட்டில் உள்ள ஒரு சிறிய, இருண்ட கிராமத்தில் உள்ள
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட என்ன செய்ய
வேண்டும்? என்று அங்கு படிக்கும்போது மாணவர்களாகிய
நாங்கள் விவாதிப்போம்.

அது பற்றி பிற மாணவர்கள் சொல்வதைக் கவனமாக,
பொறுமையாகக் கேட்போம். தெளிவான முடிவுகளுக்கு
வருவோம். பல்வேறு சிந்தனைப் போக்குகளின் தேவையை
அப்போது என்னால் உணர முடிந்தது” என்கிறார் இல்மா.

இல்மாவின் கடின உழைப்பால் அவருக்கு அதிக
மதிப்பெண்கள் கிடைத்தன. அதனால் வெளிநாட்டுப்
பல்கலைக்கழகத்தில் பயில கல்வி உதவித் தொகை
கிடைத்தது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின்
வூல்ஃப்ஸன் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.

வூல்ஃப்ஸன் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரியின்
விவாத அரங்கத்தில் உலகில் பல பகுதிகளில் இருந்து
மாணவர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் என பலரும்
வந்து பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிப்பார்கள்.
அது இல்மாவின் அறிவுக்கண்களைத் திறந்து
விட்டிருக்கிறது.

வெறும் படிப்போடு மட்டும் இல்மா நிற்கவில்லை.
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின்
மக்கள் நெருக்கம் உள்ள மன்ஹாட்டன் பகுதியில்
தன்னார்வத் தொண்டுகள் செய்ய இல்மா சென்றார்.

அங்குள்ள மக்களின் வாழ்க்கைநிலையைப் பார்க்கும்போது,
அவருக்கு தனது சொந்த ஊர் மக்களின் வாழ்க்கை நிலையே
கண்ணுக்குள் நின்றிருக்கிறது. எப்போது இந்தியாவுக்குத்
திரும்பப் போகிறோம் என்ற எண்ணமே அப்போது அவர்
மனதில் இருந்திருக்கிறது.

படிப்பு முடிந்ததும் இல்மா, இந்தியா திரும்பிவிட்டார்.
சொந்த ஊருக்கு வந்ததும் அக்கம்பக்கத்தில்
உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் எழுதித்
தருவது; கண்புரை அறுவைச் சிகிச்சை செய்வதற்கான
உதவிகளைச் செய்வது என்று தன்னைச் சுற்றியுள்ள
மக்களில் ஒருவராக மாறிவிட்டார் இல்மா.

வெளிநாட்டில் படித்துவிட்டு இல்மா இதுபோன்று இருந்ததைப்
பற்றி அவருடைய அம்மா எதுவும் சொல்லவில்லை.
இல்மாவின் படிப்புக்காக உழைத்த அவருடைய தம்பியும்
எதுவும் சொல்லவில்லை.

வீட்டிலிருந்தபடியே அவர் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்காகத்
தன்னை தயாரிக்கத் தொடங்கினார். தேர்வு எழுதினார்.
தேர்வு தரவரிசைப் பட்டியலில் வெற்றிகரமாக அவர் 217 ஆவது
இடத்தைப் பெற்றார். இந்திய காவல்பணி அதிகாரியாக
இமாச்சல பிரதேசத்தில் பணி செய்ய அவர் நியமிக்கப்பட்டார்.

அதற்கான 16 மாதப் பயிற்சிகளும் அவருக்கு அளிக்கப்பட்டன.
இப்போது அவர் ஓர் ஐபிஎஸ் அதிகாரி.

” என் அம்மா கடின உழைப்பின் மதிப்பை எனக்குச்
சொல்லிக் கொடுத்தார். என்னுடைய படிப்புக்காக என்
அம்மாவும், தம்பியும் எண்ணற்ற தியாகங்களை எனக்காகச்
செய்துள்ளார்கள். இவர்கள் கற்றுக் கொடுத்ததை விடவா
எனது கல்வி எனக்குக் கற்றுக் கொடுத்துவிடப் போகிறது?”

என்கிறார் இல்மா.


ந.ஜீவா
நன்றி-மகளிர்மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: