யானைகளை அடக்கும் கும்கிப் பெண்

PRABAHT

யானை வரும் போது கையில் அங்குசத்துடன் வரும் ஆண் பாகன்களைப் பார்த்து இருப்போம். பெண் ஒருவர் அங்குசத்துடன் வரும் அரிய காட்சியை அசாம் மாநிலத்தில் பார்க்க முடிகிறது.

அந்த பெண்ணின் பெயர் ஃபர்பாடி பர்வா. நம்ம ஊர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் இவர் கும்கிப் பெண். 60 வயதை எட்டிய நிலையிலும் அத்தனை சுறுசுறுப்பாகக் காட்சி தருகிறார். வெயில், மழை என கடின உழைப்பினால் அவர் முகத்தில் விளைந்த சுறுக்கங்கள் முகவரிகளாகக் காட்சிதருகின்றன. இனி ஃபர்பாடி பர்வா பேசுகிறார்: 


“காட்டு யானை என்றால் யாராக இருந்தாலும் பயந்து ஓடிவிடுவார்கள். அந்தக் காட்டு யானைகளை அடக்கி, நாம் சொல்வதை கேட்க வைப்பது தான் என்னுடைய பிரதான வேலை என்று அவர் சொல்லும் போது முகம் இறுக்கமாக இருந்து வார்த்தைகள் மென்மையாக வந்து விழுகின்றன.

இது எங்கள் பரம்பரைத் தொழில். அப்பா சந்திர பர்வா சர்வதேச அளவில் யானை பயிற்சியாளர். அவரைக் கண்டாலே காட்டு யானைக் கூட்டம் தலைதெறிக்க ஓடும். யானை பலத்திற்கு நிகரானவர் கிடையாது அவர். ஆனால் எத்தனை யானைகள் வந்தாலும் அத்தனையையும் அடக்கி ஆளக்கூடிய அசாத்திய சக்தியும் தைரியமும் படைத்தவர்.


நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பாடங்களில் முழு அக்கறை செலுத்திப் படிக்க மாட்டேன். யானைகளுடன் தான் அதிகம் இருப்பேன். பரீட்சை எழுத மட்டுமே பள்ளிக்குப் போவேன். வருடத்திற்கு ஆறு, எட்டு மாதங்கள் காட்டுக்குள் அப்பாவுடன் இருப்பேன்.

சிறு வயதில் நான் பொம்மைகளுடன் விளையாடியதில்லை. யானை குட்டிகளுடன் தான் விளையாடுவேன். அம்மா-அப்பா இருவரும் என்னைக் கட்டாயப்படுத்திக் கல்லூரியில் சேர்த்தார்கள். ஒரு வழியாகப் படிப்பை முடித்தேன். 


முதல் அனுபவம் !


அப்போது எனக்கு பதினைந்து வயது. அப்பா யானை பிடிப்பதைப் பார்த்து இருக்கிறேன். அவர் ஊக்கம் தரவே இந்த வேலையில் இறங்கினேன். மிகவும் ஆபத்தான வேலைதான். ஆனால் மனதில் அசாத்திய துணிச்சல் உண்டு. ஒரு யானையின் மீது உட்கார்ந்து கொண்டு, 20 கிலோ எடையுள்ள சணல் கயிற்றில் ஒரு முடிச்சுப் போட்டு, அதைக் காட்டிற்குள் இருக்கும் யானைக் கூட்டத்தின் மீது வீச வேண்டும்.

சணல் முடிச்சு எந்த யானையின் மீது விழுகிறதோ அது சிக்கிக் கொள்ளும். அது தன்னுடைய முழுப் பலத்தையும் பிரயோகித்துத் தப்பிக்க முயலும்போது ஏற்கெனவே நான் உட்கார்ந்திருக்கும் பழக்கப்பட்ட யானையும், யானைப் பாகனும் சேர்ந்து, முடிச்சை இறுக்க, யானையைத் தப்பிக்க விடாமல் செய்து, அந்த யானையைப் பிடித்துவிடலாம். இப்படியாக இதுவரை ஆயிரம் யானைகளைப் பிடித்து இருக்கிறேன்.


யானை பிடிக்கக் காட்டுக்குள் செல்லும்போது, உயிரோடு திரும்பி வருவது என்பது உத்தரவாதம் இல்லை. அதுவும் காட்டு யானைகளிடம் தப்பித் தவறி சிக்கி விட்டால் காலால் மிதித்தே கொன்றுவிடும்.

ஒருமுறை, இரு பெண் யானைகள், என்னைத் தாக்க அருகில் ஓடிவந்தன. நல்லவேளையாக, பழக்கப்பட்ட யானைகள் சில என் பக்கத்தில் இருந்ததால் அவைகள் என்னைக் காப்பாற்றின.


காட்டு யானைகளைப் பிடித்து வந்த பிறகு, முதலில் அளிக்கப்படும் பயிற்சி, நான்கு உத்தரவுகளுக்குக் கீழ் படிவதுதான். “நில்… முன்னே போ… பின்னே போ… திரும்பு’ போன்றவைதான் . பழக்கப்பட்ட இரு யானைகளுடன், ஒரு பிடிபட்ட யானையைக் கயிற்றால் கட்டி, அதைப் பழக்குவோம். இரண்டு வாரங்கள் வரை அடம்பிடிக்கும். அதன் பிறகு வழிக்கு வந்துவிடும். 


அது முரண்டு பிடித்தாலும் அதனுடன் தொடர்ந்து பேசப் பேச அது நம்முடைய பாஷையை பழகிக் கொள்ளும். பிடிபட்ட யானையோடு பல நாட்கள் இரவும், பகலும் பேசி, அதைச் சமாதானப்படுத்த வேண்டும். உன்னைப் பாதுகாக்க நான் இருக்கிறேன்.

உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வேன். சாப்பாடு தருகிறேன் என்று மனிதர்களிடம் பேசுவது போல் அன்பான வார்த்தைகளை யானைகளிடம் தொடர்ந்து பேச வேண்டும். ஒரு கட்டத்தில் குழந்தையைப் போல நம் சொல்பேச்சுக் கேட்கும்.

வருமானம் !
அசாமில் தேயிலை தோட்டங்கள் அதிகம். அவற்றைக் காட்டு யானைகள் நாசம் செய்து விடும். தோட்டங்களைப் பாதுகாக்கும் பணியை அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்றவர்களிடம் வழங்குவார்கள்.

காட்டு யானைகள் தோட்டங்களை நாசம் செய்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பழகிய யானைகளை வைத்துக் கொண்டு இந்தப் பணிகளைச் செய்வோம். அதற்கான கூலி கிடைக்கும். யாருடைய தோட்டங்களைப் பாதுகாக்கிறோமோ அவர்களே எனக்கும், யானைக்கும் சாப்பாடு தந்து விடுவார்கள். 


சிறுவயதில் இருந்தே கரடுமுரடான பணி செய்து பழகிவிட்டேன். எனக்கு மென்மையான வேலை எதுவும் செய்யத் தெரியாது. எனக்கு இந்த யானைகள்தான் குடும்பம். இந்த ஊர் மக்கள்தான் என் உறவு. எனக்கென்று வேறு யாருமில்லை.” மனதில் இருப்பதைப் பட்டென்று சொல்லிவிட்டு, “வா டா ராஜா’ என யானை மீது ஏறிச் செல்கிறார் ஃபர்பாடி பர்வா.


-ராஜன்

மகளிர்மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: