நிழல் காந்தியின் நிஜ முகவரி

நிழல் காந்தியின் நிஜ முகவரி Gandhi

காந்தியாகத் திரைப்படங்களில் நடிப்பவர் மட்டுமல்ல 
காந்தி நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர் கனகராஜ். 
இது தவிர மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் என பல 
முகங்களுக்குச் சொந்தக்காரர். 

நிஜ வாழ்க்கையில் யார் இந்த கனகராஜ்? 
அவரிடம் கேட்டோம்:

“நான் மதுரை அருகேயுள்ள அருப்புக்கோட்டை பகுதியைச் 
சேர்ந்தவன். பொம்மக்கோட்டை என்ற கிராமம் தான் பிறந்து
வளர்ந்த ஊர். 3 வயதில் புத்தர் வேடமிட்டு நடித்தது தான் 
மேடையேறிய முதல் அனுபவம். 

பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்த அனுபவம் 
உண்டு. பள்ளிப்படிப்பை முடித்ததும், மதுரை அமெரிக்கன் 
கல்லூரியில் பி.எஸ்சி படித்தேன். விடுதியில் தங்கி படித்தேன். 
அதனால் ஆண்டுதோறும் விடுதி நாள் வந்தால், மாணவர்கள் 
சேர்ந்து நாடகம் தயாரித்து நடிப்போம். 

அப்போது கல்லூரியில் ஆண்டு விழா வந்தது. அதில் 
பங்கேற்பதற்கு வாய்ப்புக் கேட்டேன். இல்லை என்று சொல்லி
விட்டார்கள். எனது நண்பர்களிடம் வந்து சொன்னேன்.
“உனக்கே வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்களா?
கவலைப்படாதே நாமே ஒரு நாடகம் போடலாம்’ என்றார்கள்.

1966-ஆம் ஆண்டு கலைஞரின் தாக்கம் அதிகம். கலைஞர் 
எழுதிய “நச்சுக்கோப்பை’ நாடகத்தைப் போடுவது என முடிவு 
செய்தோம். அதில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் 
நபர்கள் சரியாக இருந்தார்கள்.

சாந்தா என்ற பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் இல்லை. 
உடனே என்னை பெண் வேடமிட்டு நடிக்கச் சொன்னார்கள். 
சரி, என்று நடித்தேன். அனைத்து தரப்பில் இருந்தும் 
பாராட்டுகள் குவிந்தன. பேராசிரியர்களே என்னுடன் போட்டோ 
எடுக்க போட்டி போட்டனர். 

அதனைத் தொடர்ந்து கண்ணதாசன் தலைமையேற்ற 
நாடகத்திலும் பெண் வேடத்தில் நடித்தேன். அவரும் என்னைப் 
பாராட்டினார்.

படிப்பை முடித்ததும் சினிமாவில் இயக்குநராகவோ, 
கவிஞராகவோ ஆக வேண்டும் என்று ஆசைபட்டேன். 
நடிகராக ஆர்வமில்லை. ஆனால் வாழ்வாதாரம் வேண்டுமே.
சென்னைக்கு வந்தேன். மருத்துவ பிரதிநிதியாக 
பணியாற்றினேன். 

ஆங்கிலம் சரளமாக பேச கற்றுக் கொண்டேன். இயக்குநர் 
ஒருவரின் நட்பு கிடைத்தது. 10 ஆண்டுகள் மருத்துவ பிரநிதியாக 
பணியாற்றிய என்னை வேறு இடத்திற்கு மாறுதல் செய்வது 
என முடிவு எடுத்தார்கள். 

வேலையை விட்டுவிட்டேன். “ஹிக்கின்பாதம்ஸ்’ நிறுவனத்தில்
பணியாற்றினேன். ஆனால் சினிமாவிற்குள் நுழைந்து விட 
வேண்டும் என்ற முயற்சி ஒருபுறம் தொடர்ந்து கொண்டே 
இருந்தது.

நிழல் காந்தியின் நிஜ முகவரி Gandhi1
நிழல் காந்தியின் நிஜ முகவரி Gandhi2

அப்போது பிரபலமான செய்தி வாசிப்பாளரான 
ஷோபனா ரவியின் மாமனார் பேராசிரியர் விஸ்வம், 
வீடியோ நாடகம் எடுத்தார். அதில் நடித்தேன். மேலும் 
ரகு என்பவர் ஆண்டு தோறும் நாரத கான சபாவில் 
நாடக விழா நடத்துவார். 

அதில், காசி நாத சாஸ்திரி வேடம் கொடுத்து நடிக்கச் 
சொன்னார். இதற்கிடையே என்னோடு நட்பாக இருந்த 
இயக்குநர் மரணமடைந்துவிட்டார். கவிஞர் 
கண்ணதாசனும் இறந்துவிட்டார். எப்படியும் கவிஞர் 
ஆகிவிட வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால், 
இன்று வரை கவிஞர் ஆகும் வாய்ப்புக் கிட்டவில்லை. 
ஆனால் நடிப்பதற்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் 
கிடைத்தன.

ராடான் நிறுவனம் தயாரித்த “சித்தி’, “சின்னப் பாப்பா, 
பெரியபாப்பா’ தொடர்களில் நடித்தேன். அதனைத் 
தொடர்ந்து நண்பர் ஒருவர் ரமணா கம்யூனிகேசன்ஸ் 
நிறுவனத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். 

என்னைப் பார்த்த இயக்குநர் பாலகிருஷ்ணன் “நீங்கள் 
காந்தி வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்’ 
என்றார். அவர் இயக்கிய காமராஜர் படத்தில் என்னை 
காந்தியாக நடிக்க வைத்தார். அடுத்து “முதல்வர் மகாத்மா’ 
படம் எடுத்தார். இதில் அனுபம்கேர் உடன் நடிக்கும் 
வாய்ப்புக் கிடைத்தது.

காந்தியாக நடிக்க ஆரம்பித்த பிறகு காந்தி பற்றித் தெரிந்து 
கொள்ளும்படி, இயக்குநர் பாலகிருஷ்ணன் சொன்னார். 
அதனால் காந்தி பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய
வாழ்க்கை, கொள்கை பற்றி முழுமையாகத் தெரிந்து 
கொண்டேன். இன்றும் உலகம் ஏராளமானப் பிரச்னைகளில்
சிக்கி கிடக்கிறது. இதற்கு காந்திய வழியில் நிச்சயம் தீர்வு 
காண முடியும்.

தற்போது நண்பர்களோடு இணைந்து “உன்னத இந்தியா 
இயக்கத்தை’ ஆரம்பித்துள்ளோம். அப்துல்கலாமும், காந்தியும் 
சொன்ன விஷயங்களை மக்களுக்குப் பயன்படும்படி செய்ய
வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். 

தூய்மை இந்தியா, பசுமை இந்தியா, ஆரோக்கிய இந்தியா, 
வளமான இந்தியா, அமைதி இந்தியா உருவாக முயற்சி 
எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த அமைப்பை நடத்துவற்கு யாரிடமும் நன்கொடை 
கேட்பதில்லை. அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிகளில் 
கிடைக்கும் பயன்படுத்த முடியாத பொருட்களை மறு சுழற்சி 
செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த 
அமைப்பு செயல்பட்டு வருகிறது.

என்னுடைய அப்பா ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. எங்கள் 
ஊரில் சுதந்திர போராட்ட வீரர்கள் அதிகம். நாட்டு பற்றுள்ள 
மண். என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் படிப்பார். 

அப்போது சொல்வார் “என்னுடைய குழந்தைகள் பெரிய 
பணக்காரனாக வரணும்னு ஆசைப்படல. காந்தி மாதிரி 
விவேகானந்தர் மாதிரி வரணும்’ என்பார். 

அவருடைய ஆசையை நான் நிறைவேற்றி இருக்கிறேன் 
என நினைக்கிறேன் என்று சொல்லும், கனகராஜின் 
கண்களில் நீர் கோர்க்கிறது.

நான் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், நல்ல 
மனங்களில் இடம் பிடித்து இருக்கிறேன். இதுவே காந்தி 
தந்த பரிசு என்கிறார் “நிழல் காந்தி’யான கனகராஜ்!

————————

– வனராஜன்
நன்றி- தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: