துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்!

துணை நடிகராக எம்.ஜி.ஆர் பட்ட அவமானங்கள்! MGR_AS_SUPPORTING_ACTOR


எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, 
கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை 
உரமாக்கி உயர்ந்தவர். 

அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் 
சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய்
மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்

நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த
‘சாயா ‘ என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற 
கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. 

திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் 
மகிழ்ச்சியை அளித்தது.

கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி.
படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு
காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் 
விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் 
மயங்கிவிழுவார். 

கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்
செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த  அன்றைய தினம் எம்.ஜி.ஆர் 
ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்க
முடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி 
குமுதினியின் கணவர் கோபமடைந்து, ‘ஒரு புதுமுக நடிகரை 
நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான்
என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி 
எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” 
என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் 
வேதனையும் அடைந்தார். 
———————–

இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட 
தயாரிப்பாளர், எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, 
“கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் 
வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே 
இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.

இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக 
இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் 
அறிவர்.

அதேபோல், அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் டங்கன், தான்
இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன 
எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” 
படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு
கௌரவ குறைச்சலாகப் பட்டது.

எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, 
எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு புண்படுத்த முடியுமோ அந்த 
அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.

அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், 
எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் 
காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு
மெல்லிய டாக்கா மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார். 

அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் 
வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, 
கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை 
தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.

எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல்,
டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை 
என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் 
சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.

வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே 
வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில்
எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை
முடிகிறார். 

டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி
செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் 
துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது. 

உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் 
“தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து 
எடுக்கிறார். எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று 
காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் 
வெகு விரைவில் வரும்… வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.

1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் 
பலித்து விடுகிறது.

அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் 
அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.

உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் 
என்ற செய்தியை சொல்கிறார்.

எம்.ஜி.ஆரோ… வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை 
வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் 
வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, 
உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, 
“கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை 
அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே 
அழைத்துச் செல்கிறார்.

“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக 
வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய 
கம்பி போல் நுழைகிறது.

“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, 
எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக 
இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை 
நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை 
மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.

“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை 
நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும்
ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில 
சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” 
என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர 
வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து 
வரப்படுகிறார்.

“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. 
அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ 
என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.

நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா?
மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் 
வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, 
தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை 
திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.

——————————-
By வழக்கறிஞர் சி.பி. சரவணன் 
நன்றி-தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: