‘நர்ஸ் தான் ஆனா மெக்கானிக் வேலையும் தெரியும்’: தன் குழந்தைகளுக்காக மினி ஆட்டோ தயாரித்த ஒரு மனிதனின் கதை


!

By கார்த்திகா வாசுதேவன்  |   தினமணி

mini_auto2

என் பெயர் அருண் குமார் புருஷோத்தமன். கடந்த ஏழரை வருடங்களாகப் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸிங் ஆஃபீஸராக இருந்தேன். இப்போது இடுக்கி ஜில்லா மருத்துவமனையில் கேரளா ஹெல்த்கேர் சர்வீஸில் நர்ஸாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது குழந்தைகளுக்காக கடந்த ஏழரை மாதம் மிகுந்த சிரத்தையோடு இந்த மினி ஆட்டோவை உருவாக்கி இருக்கிறேன். இந்த ஆட்டோவின் பெயர் சுந்தரி ஆட்டோ.

இதை நான் எப்படி உருவாக்கினேன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இதில் நான் பயன்படுத்தி இருக்கும் பொருட்களில் பலவும் நமது வீடுகளில் நாம் முன்பே உபயோகப்படுத்தி கழித்துப் போட்டவை தான். இந்த ஆட்டோவின் முன்புறத்தின் வலப்பகுதியை உருவாக்க நான் என் வீட்டில் ரிப்பேர் ஆகி பயனற்று இருந்த சன் டைரைக்ட் டி டி ஹெச்சை வொர்க்‌ஷாப்பில் மோல்ட் செய்து வாட்டமாக வளைத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.

ஆட்டோவின் அடியில் இருக்கும் மெட்டல் பாகத்திற்கு வீட்டில் இருந்த பழைய ஸ்டீல் ஸ்டவ்வை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன். அதே போலத்தான் இந்த ஆட்டோவின் உட்புறத்தில் சாவி போட்டால் தான் வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறேன்.

சாவி தவிர கிக் ஸ்டார்ட் செய்வதற்கும் இதில் வசதி உண்டு. அது மட்டுமல்ல, சாதாரணமாகப் பெரிய ஆட்டோக்களில் காணப்படும் வைப்பர் மெக்கானிஸன் என் குழந்தைகளுக்கான ஆட்டோவிலும் உண்டு. 

இது தவிர ஆட்டோவின் முன்புறக் கண்ணாடிப்பகுதியின் ரப்பர் மெட்டீரியலுக்காக பழைய செருப்புகளில் இருக்கும் ரப்பரை வெட்டிப் பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்த மினி ஆட்டோவை இயக்க இரண்டு 12  வோல்ட் டி சி மோட்டாரைப் பயன்படுத்தி இருக்கிறேன். மொத்தம் 24 வோல்ட் மோட்டார் பவர் இதற்குப் போதும். பெரிய ஆட்டோக்களில் இருப்பதைப் போன்றே இதிலும் முன்புற ஹெட் லைட்டுகள், உட்புற லைட், பிரேக் வசதி, ஹார்ன் வசதி, முதலுதவிப் பெட்டி வசதி, மொபைல் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி,

சும்மா ஃபேன்ஸிக்காகவேனும் மீட்டர் பாக்ஸ் வசதி என ஒரு பெரிய ஆட்டோவுக்குண்டான அத்தனை அம்சங்களையும் நான் என் மினி ஆட்டோவிலும் உருவாக்கி வைத்திருக்கிறேன். ஆட்டோவில் செல்லும் போது என் குழந்தைகளுக்குச் சலிப்புத் தட்டக்கூடாது என்பதற்காக இதில் டிரைவர் ஷீட்டுக்கு அடியில் பென் டிரைவ் வசதியும், மெமரி கார்டு வசதியும் கூட செய்து வைத்திருக்கிறேன்.

ஆட்டோ ஓட்டும் போது பாட்டுக் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டலாம் பாருங்கள், அதற்காகத்தான், அதோடு, இதை உருவாக்க அதிக செலவாகவில்லை, வீட்டிலிருக்கும் பழைய பிளாஸ்டிக் கண்டெய்னர் பாக்ஸைத்தான் இதற்காக உபயோகித்திருக்கிறேன்’ என்கிறார் அருண்குமார் புருஷோத்தமன்.

பெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தைகள் விளையாடுவதற்காக எதைக் கேட்டாலும், அந்தப் பொருள் எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் இந்தக் காலத்தில் வாங்கித் தர சித்தமாகவே உள்ளனர். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாதபோது, குழந்தைகளை இப்படியாவது திருப்திப்படுத்தலாமே என்ற ஆசையில் தான் அப்படிச் செய்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் பணம் செலவழித்தும் கூட அவர்களால் தமது குழந்தைகளை முழுமையாகத் திருப்திப் படுத்தி விட முடியாது போகிறது.

காரணம், கடைகளில் பணத்தைக் கொட்டி வாங்கித் தரும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் (கார், ஸ்கூட்டர், ட்ரெய்ன் போன்றவை) சில மாதங்களிலேயே தங்களுடைய வேலையைக் காட்டத் தொடங்கி விடும். முதலில் அவற்றிற்கு பேட்டரி வாங்கி மாளாது. இரண்டாவது மெயிண்டனென்ஸ் தொல்லை. சில குழந்தைகளுக்கு அவற்றைப் பக்குவமாகக் கையாளத் தெரியாது.

அவர்கள் ஏனோதானோவென்று உபயோகித்து சில மாதங்களிலேயே அவற்றை ரிப்பேர் ஆக்கி விடுவார்கள். இந்தக் கஷ்டம் எல்லாம் அருண்குமார் புருஷோத்தமனுக்கு இல்லை.

இந்த சுந்தரி மினி ஆட்டோவை அவர் தானே தன் கைகளால், தன் குழந்தைகளுக்காகச் செய்வித்திருக்கிறார். அதனால் என்ன? பாசமுள்ள எல்லா அப்பாக்களும் செய்யக் கூடியது தானே? என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.

ஏனெனில், இந்த அப்பா, தான் வாங்கித் தந்த பொருள் ரிப்பேர் ஆனால், அதை உடனடியாக சரி செய்யக்கூடிய அளவுக்கு பொருள் குறித்த ஞானம் கொண்டவராகவும் இருப்பது அவரது ஸ்பெஷல். அதனால் தான் இந்த விடியோவைப் பகிரத் தோன்றியது.

அருண்குமார் உருவாக்கிய இந்த மினி ஆட்டோ, இரவுகளிலும் பயணத்திற்கு ஏற்றதாம். குழந்தைகள் இரவில் எங்கே செல்லப்போகிறார்கள். இந்த ஆட்டோக்களை குழந்தைகள் மட்டும் பயன்படுத்துவதைக்காட்டிலும் பிறவியிலேயே குள்ளமாகப் பிறந்து வாழ்க்கைத் தேவைக்கு என்ன செய்வது? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் குள்ள மனிதர்களுக்கும் கூட பயன்படுத்தலாம்.

அவர்கள் இந்த ஆட்டோக்களை பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்று பள்ளி மற்றும் வீடுகளில் விடப் பயன்படுத்தலாம். இது ஒரு மாற்று உபயோகமே தவிர இப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அருண்குமார் இதை உருவாக்கவில்லை என்பது நிஜம். அவரது நோக்கம் அவரது குழந்தைகளின் சந்தோஷம் மட்டுமே!

இந்த விடியோவை முதல்முறை காணும் போது, மேலுமொன்று தோன்றியது. இது குழந்தைகள் இயக்கும் ஆட்டோ என்பதால் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ் கருவி வசதியையும் இதில் இணைக்கலாம். தவிர குழந்தைகள் தனியே இந்த வாகனத்தில் செல்லும் போது புதியவர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏதேனும் ஏற்படுமாயின் உடனடியாக பெற்றோர்க்கும், காவல்துறைக்கும் அந்த அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கை கடத்தப்படும்படியான அலார்ம் செட்டப் வசதிகளையும் இதில் இணைக்கலாம். இத்தனையையும் இணைத்து விட்டால் சற்று வயதில் மூத்த குழந்தைகள் இதில் தாராளமாகப் பள்ளி சென்று திரும்பலாம்.

தன் குழந்தைகளுக்காகத் தான் என்றாலும் கூட புதுமையாக இப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்த அருண்குமாரை நாம் பாராட்டினால் தவறில்லை.

வாழ்த்துக்கள் அருண்குமார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: