ஆணாதிக்கத்துக்கு இடையில் பெண்களாலும் சாதிக்க முடியும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

தினமணி மகளிர் தின நட்சத்திர சாதனையாளர் விருது 
வழங்கும் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த
லலிதா குமாரி, லலிதா தனஞ்செயன், பிருந்தாலட்சுமி, 
அர்ச்சனா, சுதாசேஷய்யன், லட்சுமிமேனன்.
———————————

திரையுலகில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய 
கால கட்டத்தில் தடைகளைத் தகர்த்தெறிந்து அசாத்திய 
சாதனை படைத்த மங்கையரை கௌரவிக்க கடமைப்
பட்டுள்ளோம் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 
புகழாரம் சூட்டினார்.

தினமணி நாளிதழ் சார்பில் திரைத்துறையில் சாதனை 
புரிந்த நட்சத்திர மங்கையருக்கு பாராட்டு விழா 
சென்னை கலைவாணர் அரங்கில் வெள்ளிக்கிழமை 
நடைபெற்றது. 

விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 
தலைமை வகித்துப் பேசியது: 

தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் மகளிரின் 
பங்கு மகத்தானது என்பதை உலகுக்கு பறை
சாற்றுவதற்காகவே தினமணி சார்பில் இந்தப் பாராட்டு 
விழா நடத்தப்படுகிறது. 

திரையுலகில் மட்டுமல்ல, தனி மனித வாழ்க்கையிலும் 
மகளிரின் பங்கு மகத்தானது. 

தாய், சகோதரி, மனைவி, மகள் என்கிற பெண்மையின் 
நான்கு பரிமாணங்களையும் தங்களது நடிப்பாற்றலால் 
நம் கண்முன்னே நிறுத்திய பெருமை திரையுலகில் 
தங்களது நடிப்பால் முத்திரை பதித்த நடிகையருக்கு 
உண்டு.

வரும் ஆண்டுகளிலும் தொடரும்… தினமணி நாளிதழின் 
இணைப்பான மகளிர் மணியின் சார்பில் 1950-ஆம் 
ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான கால
கட்டத்தில் தனி முத்திரை பதித்த 9 திரையுலகத் 
தாரகைகளுக்கு தற்போது பாராட்டு விழா நடைபெறுகிறது. 

அடுத்த ஆண்டு 1960-ஆம் ஆண்டு முதல் முதல் 1980-ஆம் 
ஆண்டு வரையிலும், அதற்கு அடுத்த ஆண்டு 1970-ஆம் 
ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரையிலும் என 20 ஆண்டு 
கால கட்டத்தில் தடம்பதித்த தாரகையர் பாராட்டப்பட 
இருக்கிறார்கள்.
=

ஆண்கள் முன்னால் பெண்கள் நிற்பதே தவறு என்று 
விலக்கி ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில், ஆண்களுக்கு எந்த 
விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று தடையை
உடைத்தெறிந்து ஆடவர்களே அதிசயிக்கும் விதத்தில், 
அசாத்திய சாதனை புரிந்த அந்த மகளிருக்கு ரசிகர்கள் 
சார்பிலும் தினமணியின் சார்பிலும் திரையுலகின் சார்பிலும் 
இந்த நேரத்தில் முதல் வணக்கம் செலுத்தக் கடமைப்
பட்டிருக்கிறோம்.

டி.பி.ராஜலட்சுமியைத் தொடர்ந்து எஸ்.டி.சுப்புலட்சுமி, 
எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள், டி.ஏ.மதுரம், 
இங்கே விருது பெறும் வைஜயந்திமாலாவின் தாயார் 
வசுந்தராதேவி, டி.ஆர்.ராஜகுமாரி என்று தங்களது 
நடிப்பாற்றலாலும் இசை, நடனத் திறமையாலும் தமிழ்த் 
திரையுலகில் சூறாவளியை ஏற்படுத்திய அனைவரையும்
இந்த நேரத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கடந்த 1950 முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்ட 
சினிமா பற்றி பேசவோ, எழுதவோ, ஆய்வு செய்யவோ முற்படும் 
எவராலும் அகற்றி நிறுத்த முடியாத அளப்பரிய ஆளுமையாகத் 
திகழ்ந்தவர் நடிகை பானுமதி. 

இன்று இங்கே பாராட்டப்படுவதற்கு பானுமதி, சாவித்ரி, 
வி.என்.ஜானகி, பத்மினி, தேவிகா, மனோரமா, பண்டரிபாய் 
ஆகியோர் நம்மிடையே இல்லை என்கிற குறை இருக்கத்தான் 
செய்கிறது. 

தனிப்பெரும் ஆளுமை ஜெயலலிதா: 

தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டு காலம் தங்கத் தாரகையாக 
கோலோச்சி, அடுத்த 35 ஆண்டு காலம் அரசியலில் தனிப்பெரும் 
ஆளுமையாக வலம் வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 

அவருடன் திரையுலகில் இணைந்து நடித்து நெருங்கிப் பழகிய 
9 நட்சத்திர சாதனை மகளிருக்கு இங்கே விருது வழங்கி பாராட்டு 
விழா நடத்தும்போது, அவர் தலைமையேற்கவில்லையே என்கிற 
குறை, விருது பெறும் 9 சாதனை நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல 
பலருக்கும் இருக்கும்.

விருதுபெறும் ஒவ்வொருவரும் அவரவர் வகையில் ஆளுமைகள்.
வாழ்க்கை திரைப்படத்தில் தொடங்கி கலையையே தனது 
வாழ்க்கையாக மாற்றிவிட்டிருக்கும் வைஜயந்தி மாலா, நடிப்பின் 
உச்சம் என்று நானிலம் போற்றும் நடிகர் திலகம் 
சிவாஜி கணேசனுக்கும் பானுமதிக்கும் சளைத்ததல்ல என் திறமை
என்று தகுதி பெற்ற செளகார் ஜானகி, 

அமுதைப் பொழியும் நிலவாய் தமிழிலும் தெலுங்கிலும் தனி 
முத்திரை பதித்த ஜமுனா, ஒன்றல்ல இரண்டல்ல, மூன்றுமுறை
தேசிய அளவில் தலைசிறந்த நடிகை என்று ஊர்வசி பட்டம் 
வென்ற சாரதா, 

விண்ணில் பறந்த மங்கை, வண்ணப் படத்துக்கென்றே 
வடிவெடுத்த நங்கை காஞ்சனா, பூம்புகார் மாதவிக்கு உருவம் 
கொடுத்த பேரெழிலாள் ராஜஸ்ரீ, புன்னகைக்குப் பேரரசி,
நடிப்புக்கு இளவரசி, இன்றுவரை எழிலரசி கே.ஆர்.விஜயா, 
ஸ்ரீதரின் மோதிர விரலால் குட்டுப்பட்டு, நாயகியாய் நிலை
பெற்று, தனது நடன நேர்த்தியால் கண்ணில் தெரிகின்ற 
வானத்தைக் கைகளில் கொண்டுவந்த வெண்ணிற ஆடை நிர்மலா, 

அன்றும் இன்றும் என்றும் ரோஜா மலராய் ராஜகுமாரியாய், 
தென்றலெனத் திரையுலகில் வளையவரும் குமாரி சச்சு, 
இவர்களையெல்லாம் பெறுவதற்கு தமிழ்த் திரையுலகம் தவம் 
செய்திருக்கிறது என்றார் கி.வைத்தியநாதன்.

————————- தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: