`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!

தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன், சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும், திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு அருட்காட்சி தருகின்றார்.

தணிகைப் புராணம், குமாரதந்திரம், திருப்புகழ்,  ஸ்ரீதத்வநிதி, அகத்தியர் அருள்பெறு படலம், தியான ரத்னாவளி போன்ற நூல்கள் முருகப்பெருமானின் ஆயுதங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. பன்னிரு கரங்களை உடைய கடவுள் என்பதால் முருகனுக்கே பல்வேறு ஆயுதங்கள் போர்க்கருவிகளாக அமைந்துள்ளது.

குறிப்பாக முருகனின் ஆயுதங்களில் வேலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. முருகப் பெருமானின் திருக்கை வேலே முருகனின் வடிவமாகவும் போற்றித் துதிக்கப்படுகிறது. முருகப் பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும் ஆயுதங்களைப் பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்
சக்தி வேல் – முருகனின் ஆயுதங்களில் முதன்மையான இடம் வேலுக்குத்தான் உண்டு. காரணம், அன்னை பராசக்தி தன் சக்தி முழுவதையும் ஆவாஹணம் செய்து, முருகப் பெருமானுக்குக் கொடுத்த காரணத்தினால், சக்திவேல் என்று சிறப்பிக்கப்படுகிறது.

இன்றைக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவத்தின்போது, அம்பிகை முருகனுக்கு சக்திவேல் வழங்கும் வைபவம் சிக்கலில் நடைபெறுகின்றது.

அங்குசம் –  அங்குசம் என்பது சிறிய ஆயுதம்தான். ஆனால், அந்தச் சிறு ஆயுதமே, மிகப் பெரிய யானையை அடக்கி ஆள்கிறது. அதைப்போல் மும்மலங்களால் (ஆணவம், கண்மம், மாயை)  மதம் பிடித்துத் திரியும் நம்மையெல்லாம் அடக்கி ஆள்வதற்கே முருகப் பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் அங்குசம் உணர்த்துகிறது.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

பாசம் – பகைவர்களின் உடலைக் கட்ட உதவும் கயிறு இது.

பகைவர்களின் உடலை மட்டுமல்ல, புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லும் நம் மனதைக் கட்டி அடக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

வில் – குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான், வேடனாக வந்து வள்ளியை ஆட்கொண்டபோது தாங்கிய வில் ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது.

தரிசித்தவர் நெஞ்சில் ஆழமாக தைக்கும் அற்புத வில் என்று ஆன்மிகப் பெரியோர்கள் இந்த வில்லைக் குறிப்பிடுவர்.

அம்பு – வில்லிருந்தால் அம்பு இல்லாமலா? கழுகின் இறகினைக் கட்டிய அம்பு முருகப்பெருமானின் கரங்களில் உள்ளது. இது குற்றங்களைத் தைத்து செல்லக்கூடியது.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

கத்தி – தேவசேனாபதியின் கம்பீர அடையாளமாக கத்தி உள்ளது. இடுப்பில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கத்தி வீரபாகுவின் பரிசு என்பார்கள்.

கேடயம் – எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுவது கேடயம். தன்னை நம்பிச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் கேடயமாகத் திகழும் முருகப் பெருமானின் திருக்கரங்களில் கேடயம் இருப்பது பொருத்தம்தானே!

வாள் – முருகப் பெருமானின் வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும் நீண்ட வாளுக்குக் கட்டுவாங்கம் என்று பெயர். இந்த வாள் அனைத்துத் துயரங்களையும் அறுக்கவல்லது.

சூலம் – சிவனாரின் ஆயுதமான சூலத்தை முருகனும் தங்கியுள்ளார்.

ஆணவம், கன்மம், மாயை என்னும் தீயவைகளைச் சாய்க்க சூலத்தின் மூன்று கூர்முனைகளும் தயாராக இருக்கின்றன என்பதை சூலம் உணர்த்துகிறது.

கரும்பு வில் – மன்மதனைப்போலவும், அன்னை காமாட்சியைப்போலவும் முருகப்பெருமான் கரும்பு வில்லைத் தாங்கியுள்ளார். போகசக்தியின் வடிவாகவே இதைத் தாங்கியுள்ளார்.

மலரம்பு – கரும்பு வில்லுக்குத் துணை இது. மலரம்பு கொண்டு மனம் கவர்ந்தவர்களைத் தாக்கித் தன்வசப்படுத்திக் கொள்பவர் முருகப்பெருமான்.

கதை – திருமால் தாங்கும் கதை, முருகப்பெருமானின் கையில் திகிரி என்ற பெயரில் உள்ளது. எதையும் சுக்குநூறாக உடைக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.

சங்கு – வெற்றி நாதம் எழுப்பும் சங்கு முருகப்பெருமானின் அவசியமான ஆயுதமாக உள்ளது.

முருகப்பெருமானின் ஆயுதங்கள்

சக்கரம் – விஷ்ணுவின் சக்கராயுதத்தை முருகப்பெருமான் ஏந்தியுள்ளார். உண்மையில் விஷ்ணுவுக்கு முன்பே முருகன்தான் சக்கரம் கொண்டிருந்தார் என்று திருத்தணிகை புராணம் கூறுகிறது.

கும்பகோணம் அருகேயுள்ள அரிசிற்கரைபுத்தூர் தலத்திலுள்ள முருகப் பெருமான் சக்கரம் ஏந்தியுள்ளார்.

வஜ்ரம் – இந்திரனின் வஜ்ராயுதத்தையும் முருகப்பெருமான்  தாங்கியுள்ளார். ஆயிரம் கூர் முனைகளைக் கொண்ட இது எதையும் குத்திக் கிழிக்க வல்லது.

முருகப்பெருமான்

தண்டம் – நீளமான இந்தக் கைத்தடி எதையும் தாக்கும் திறன் கொண்டது. தண்டாயுதபாணி வடிவமே அற்புதமானது அல்லவா!

உலக்கை – தோமரம் என்ற உலக்கையைத் தாங்கிய கோலத்தை சூரபத்மனை சம்ஹரித்த தாரகாரி வடிவத்தில் காணலாம்.

தீமைகளை அழிக்க இத்தனை படைக்கலன்களை முருகப்பெருமான்  தாங்கினாலும், அவன் பக்தர்களை அன்பு செய்து அடைக்கலம் தருவது அபய, வரக் கரங்களினால்தான். எனவே ‘யாமிருக்க பயமேன்’ என்று சொன்ன முருகன் உள்ளவரை நமக்கென்ன கவலை?


மு.ஹரி காமராஜ்
நன்றி- விகடன்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: