தமிழ்வாணன் 10

பிரபல எழுத்தாளர், பத்திரிகையாசிரியர்

பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான
தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இன்று
(மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார்.
இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு
‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம்
வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார்.
எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக
இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக
சேர்ந்தார்.

# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின்
ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும்,
எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது.

‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர்
வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான
நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.

# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார்.
‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’
என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.
இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை
அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’
வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும்
இவரிடம் ஒப்படைத்தார்.

‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த
அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பிப் படித்தனர்.

இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில்
ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா,
அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும்
பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.
அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார்.

பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.
கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின்
கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை
பார்ப்பதில் வல்லவர்.

# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து
விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்
செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய
2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார்.

‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம்
எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை.
ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும்
தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து
அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு
வந்துவிடுமாம்.

# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும்
மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால்
56-வது வயதில் (1977) காலமானார்.

—————————————
ராஜலட்சுமி சிவலிகம்
தி இந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: