தியாகமூர்த்தி – சிறுகதை- புதுமைப்பித்தன்

செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி,
நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ,
காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில்
ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும்
கண்டுபிடிக்க முடியாது.

ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர்
இசைத்த,
தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்
தானே வந்தால் இங்கு விடுவானே தோணி

என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே
மேலே சொல்ல முடியும்.

தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய
அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும்
செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத்
திருப்பதியையும் பிணித்து நின்றது.

தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம்.
அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில்
சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு
முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை
போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது,
பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல
சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற
தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது
என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத்
தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக்
கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

முதலில் ‘ஸைக்கிள்’ ‘கடிகாரம்’ ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர
‘மோட்டார் கண்டக்டர்’, ‘டிரைவர்’, பிறகு ‘மெக்கானிக்’ என்ற
பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக்
கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் ‘ஒர்க் ஷாப்’
என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது.
கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான்.
ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான்
என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து
வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண்
குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக்
காலமானாள்.

———————————————

உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில்
கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே ‘ஒர்க் ஷாப்’ அவர்கள் தடுத்து
விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது.

எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும்
அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால்
மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற
நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு
இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

ஒரு சுப தினத்தில் ‘ஒர்க் ஷாப்’ கதவடைக்கப்பட்டது.
அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை.
‘செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்’ என்ற கதைதான்.

கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக்
கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை,
பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது
வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன.

உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில்
சேகரித்த ‘முதல்’ வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய
தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த
வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.

******

‘இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்’
முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை
கொடுத்தபொழுது, ‘அன்ன தாதா’ என்று அவரை மனமாரப்
புகழாமல் இருக்க முடியுமா?

நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை
வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு
வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான்
புகழ்வோம்.

மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது
பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற
தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே,
அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம்
உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்;
பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல்
நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம்.
சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து
உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர்
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய,
தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க
வரவில்லை.

அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே
போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர்.
கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் – பாதி சம்பளம் –
கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள்.
ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால்
கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான்.
கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம்.

மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு
கும்பிடவா செய்கிறோம்?

தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா?
அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்?
அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு
என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.
—————————————-

ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு
வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம்
எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எ
ந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே!

உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண்
இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார்.
இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

இனி என்ன செய்வது?

இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்து
விட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான்.
சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத்
திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத்
தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?

‘இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு
தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார்.
ஒரு கை பார்த்தால் தான் என்ன?’

வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம்
கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி.
மனசு அதில் லயித்துவிட்டது.

“என்ன அப்பா, இப்படி இருக்கே?” என்றதற்கு ஒன்றும் சொல்ல
முடியவில்லை.

திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி
முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை
முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை.

இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம்.
பயந்து நடுங்கினார்கள்.

“நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது
ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார்.
வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்”
என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை
நிறைவேற்றப் புறப்பட்டார்.

எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.

“வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல்.
நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை” என்றார் நாயுடு.

எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது” என்றார் ராமசாமி. குரல்
வித்தியாசமாக இருந்தது.

குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து,
“நீ நாளைக்கு வா” என்றார்.

“நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன்.
என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்”
என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த
நோட்டுக்களில் கையை வைத்தார்.

நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான்.
அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா?
ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.

நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். “உண்ட வீட்டில் கெண்டி
தூக்கிய பயலை விடுகிறேனா பார்” என்றார்.

விவரிப்பானேன்?

பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.

பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு.
எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின்
குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான
உலகமல்லவா?

பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.

ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டு
பிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?

———————————–
அழியாசுடர்கள் வலைதளத்தில் வலையேற்றியது:
RAMPRASATH HARIHARAN

https://ta.wikisource.org/wiki/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: