தனிமையுணர்வு எனும் நோய்!

LONELYNESS
பரபரப்பான நம் அன்றாட வாழ்க்கைக்கு இடையே
இனம்புரியாத ஒரு தனிமையுணர்வை, வெறுமையை நாம்
அனைவரும் எப்போதாவது உணர்வதுண்டு.

எவ்வித மாற்றமும் இல்லாமல், பெரும்பாலானோரின்
வாழ்க்கை இயந்திரமயமாய் ஒரே மாதிரியாக சக்கரம் போல்
சுழன்று கொண்டிருப்பது இதற்கு முக்கிய காரணமாக
இருக்கலாம்.

ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த
தனிமையுணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஓர்
ஆய்வு அதிர்ச்சி தகவல் அளிக்கிறது.

18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களில் 73 சதவீதம் பேர்
தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாகவும், இதுவே
பெண்களில் 31 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில்
83 சதவீதம் பேர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி
கொள்கின்றனர் என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

ஒருவர் தம்முடைய நேரம் முழுவதையும் தனிமையில் கழிக்க
விரும்புவது என்பது மட்டும் தனிமையுணர்வு கிடையாது.
இந்த சமூகத்துடன் பின்னிப் பிணைவதில் இருந்து தம்மை
விடுவித்து கொள்வது, சகமனிதர்களுடன் பழகுவதில்
ஏற்படும் தயக்கம், தடுமாற்றம், பெரிய கூட்டத்துக்கு மத்தியில்
அந்த கூட்டத்தோடு கூட்டமாக தம்மால் ஒன்றிபோக முடியாதது
போன்றவை ஒருவர் தனிமையுணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்
என்பதற்கான அறிகுறிகளாகும்.

மனிதர்கள், தங்களது அகம் மற்றும் புறவாழ்க்கை சார்ந்த
பல்வேறு தேவைகளுக்கு ஒருவரையொருவர் சார்ந்து வாழ
வேண்டியுள்ளது. இவ்வாறு ஒருவர் மற்றொருவரைச் சார்ந்தும்,
குழுக்களாகவும் வாழ்வதுதான் மதிப்பும், மகிழ்ச்சியும்,
பாதுகாப்பானதும்கூட.

மாறாக, குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து தங்களைத்
தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வது அவர்களின்
உடல்நலம், மனநலத்துக்கு உகந்ததல்ல.

இயற்கைக்கு முரணான இந்த அணுகுமுறை, நாளடைவில்
வாழ்க்கையைப் பற்றிய ஒருவித பயத்திற்கும், மன
அழுத்தத்துக்கும் வழிவகுத்துவிடும்.

ஆனால், இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறையில்
ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களால் மக்கள் மத்தியில்
தனிமையுணர்வு அதிகரித்து வருகிறது.

அதிகரித்து வரும் தனிக்குடித்தன வாழ்க்கை முறை,
நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும், நமக்கு
இடையே மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.

———————–

பொருள் ஈட்டும் பொருட்டு நாம் பெரும்பாலும் வீடு, அலுவலகம்
என இரண்டு முனைகளுக்கு இடையே ஊசலாடிக்
கொண்டிருப்பதால் சமுதாயத்துடனான நம் தொடர்புகள் மெல்ல
மெல்ல அற்றுப் போகின்றன.

குறிப்பாக, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களின்
ஆதிக்கம் ஒரு மனிதனை சக மனிதரிடமிருந்து தனிமைப்
படுத்திவதில் இன்று முக்கியப் பங்கு வகிக்கின்றது.

முகம் தெரியாதவர்களுடன் புதிய உறவை தொடர்பை ஏற்படுத்த
ஏதுவாக இருக்கும் சமூக ஊடகங்களுக்கு அடிமைகளாகி
விடுவதால், தங்களின் கண்ணெதிரே உள்ள பல உறவுகளின்
அருமை, பெருமைகள் இன்றைய இளைய தலைமுறைக்கு
தெரியாமலேயே போய்விடுகிறது.

தனிமை மனநிலையிலிருந்து ஒருவர் வெளியே வருவதென்பது
உண்மையில் கொஞ்சம் கடினமான விஷயம்தான். மேலும்,
இதற்கான செயல் தந்திரம் ஒருவருக்கொருவர் மாறுபடும்
என்றாலும், பொதுவான சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்
மூலம், தனிமை எண்ணத்திலிருந்து நாம் நாளடைவில் விடுபடலாம்.

வீட்டை விட்டு வெளியே வாருங்கள் – தனிமையின் தாக்குதலில்
இருந்து விடுபட முதலில் நாம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை
விடுத்து, வாயிற் கதவுகளை திறந்து சமுதாயத்தை நோக்கி நடை
போட வேண்டும். இந்தப் பயணத்தில் நீங்கள் சந்திக்கும்
பலதரப்பட்ட மனிதர்களில் இருந்து உங்கள் எண்ண அலைகளுக்கு
ஒத்துபோகும் மனிதர்களுடன் நட்பை, புதிய உறவை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள்.

அவர்களிடம் உங்களது எண்ணங்களைச் சற்றும் தயக்கமின்றி
பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த நட்பு வட்டம் எண்ணிக்கையில் பெரிய அளவாக இருக்க
வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆரம்பத்தில் குறிப்பிட்ட
சிலருடன் நட்பு பாராட்டினாலே போதுமானது. நாளடைவில்
அந்த நட்பு வட்டம் விரிவடைந்து உங்களின் தனிமையைத்
தவிடுபொடி ஆக்கிவிடும்.

குறிப்பாக, இளம் தலைமுறையினர் சமூக ஊடகங்களின்
வாயிலாகக் கிடைக்கும் முகம் தெரியாத உறவுகளுக்கு தரும்
முக்கியத்துவத்தை விட வீட்டிலும், பணி புரியும் இடத்திலும்,
சமூகத்திலும் தங்களைச் சுற்றியுள்ள உண்மையான உறவுகளுக்கு
முக்கியத்துவம் அளித்து அவர்களுடன் நிறைய நேரத்தைச்
செலவிட வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்வது மனித இயல்பாகும்
என்ற யதார்த்த உண்மையை நாம் உணர வேண்டும்.
அப்போதுதான் சிறு தவறு செய்பவர்கள், குறைகள்
உடையவர்களுடன் நாம் பழக முடியும்.

உங்களை நீங்களே உயர்த்தி கொள்ளுங்கள் – உங்களிடமுள்ள
நேர்மறையான பண்புகள், சாதனைகளைப் பட்டியலிடுங்கள்.
இதன் மூலம் உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்து,
சமூகத்தைப் பற்றிய பயத்தை வென்றெடுங்கள்.

இயந்திர வாழ்க்கைக்கு இடையே இளைப்பாற நேரம்
ஒதுக்குங்கள். தனிமையெனும் நோயிலிருந்து விடுபடுங்கள்.

————————————-
– வெ.ந.கிரிதரன்
இளைஞர்மணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: