பாரதியின் புதிய முகம்

எழுதாத ஓவியமாகத் தமிழ் மக்கள் உள்ளங்களில்
மகாகவி பாரதியாரின் படம் நன்றாக இன்று பதிந்து
விட்டது. அப்படிப் பதிவாவதற்கு அடிப்படையாக
நமக்குக் கிடைத்துள்ள புகைப்படங்கள் வெறும் ஐந்து
மட்டும்தான்.

புகைப்படம் எடுத்துக்கொள்வதில் விருப்பம் மிகுந்தவர்
என்று சொல்லப்படும் பாரதியார் எடுத்துக்கொண்ட
படங்கள் சிலவே; அவற்றுள் கிடைத்தவையோ மிகச்
சில. பாரதி 35, 38, 39 வயதுகளில் எடுத்துக்கொண்ட
படங்கள் மட்டுமே நமக்கு இன்று கிடைத்துள்ளன.

1917-ல் புதுவையில் அவர் வசித்தபோது அவரோடு
நெருங்கிப் பழகிய விஜயன் என்னும்
விஜயராகவாச்சாரியார் ஊரிலிருந்து வந்திருந்த தன்
நண்பனின் விருப்பத்தின் காரணமாகப் பாரதியார்
குடும்பத்தோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் படத்தில் பாரதி, மனைவி செல்லம்மாள்,
மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா, டி. விஜயராகவன்,
அவர் நண்பர் ராமு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் படம் எடுக்கப்பட்ட அதே நேரத்தில் எடுக்கப்பட்ட
இன்னொரு படம்தான் புகழ்பெற்ற பாரதியும்
செல்லம்மாவும் தம்பதியராகக் காட்சி தரும் படம்.

இந்த இரு படங்களையும் எடுக்கக் காரணமாக இருந்த
டி.விஜயராகவன் பிற்காலத்தில் புகைப்படம் எடுத்த
நிகழ்ச்சியைப் பின்வருமாறு விவரித்திருந்தார்

: “என் நண்பர் கணபதி ஐயர் என்பவரின் உறவினரான
ராமு என்பவர் திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்து
வந்தார். ஒருமுறை புதுவை வந்திருந்தபொழுது
பாரதியாருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள
ஆசைப்பட்டார்.

கணபதி ஐயர் இதை என்னிடம் தெரிவித்து, பாரதியாரின்
சம்மதத்தைப் பெறும்படி கேட்டுக்கொண்டார். நானும்
பாரதியாரிடம் கேட்டேன்.

பாரதியார் உடனே ஒப்புக்கொண்டார். திருநீற்றை நெற்றி
முழுவதும் பரவலாகத் தரித்துக்கொண்டு நடுவில்
குங்குமத்தை உயரவாக்கில் இட்டுக்கொண்டார்.

தலைப்பாகை, கறுப்புக் கோட்டு இவைகளை அணிந்தார்.
என்னையும் போட்டோவில் நிற்கும்படி வற்புறுத் தினார்.
அதேபோல் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பாரதியார், மனைவி செல்லம்மாள், மூத்த பெண்
தங்கம்மாள், இளைய பெண் சகுந்தலா, நண்பர் ராமு,
நான் ஆகிய ஆறு பேரும் இப்படத்தில் இருக்கிறோம்.

இதே தினம் பாரதியாரும் செல்லம்மாவும் தனியே நிற்க
வேறு ஒரு படமும் எடுத்துக்கொண்டனர்.”
—-
(டி. விஜயராக வாச்சாரியார், ரா. அ. பத்மநாபன்,
‘பாரதியைப் பற்றி நண்பர்கள்’, ப. 108, காலச்சுவடு, 2016.).

————————
பாரதியின் விருப்பமே பிரதானம்

பின்னர் ஒருமுறை செட்டிநாட்டுக்குச் சென்றிருந்த
போது, கானாடுகாத்தானில் வை.சு. சண்முகம்
செட்டியாரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். பிறகு
காரைக்குடி வந்தபோது அங்குள்ள இந்து மதாபிமான
சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களான சொ.முருகப்பா,
ராய.சொ. முதலியவர்களின் விருப்பத்திற்கிணங்க
அவர்களோடு சேர்ந்தும் தனியாகவும்
இரு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

இந்த இரு படங்களிலும் அவர் தாடியில்லாமலும் கையில்
கோலோடும் காட்சி தருகின்றார். இந்தப் படம்
எடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் சுவையானதாக
இருந்திருக்கிறது.

இதுபற்றி அந்தப் படத்தில் இடம்பெற்ற
ராய. சொக்கலிங்கம் பின்வருமாறு விவரித்திருந்தார்:

“பாரதியைப் படம்பிடிக்க விரும்பினோம். எதற்கும்
அவரை இணக்குவது முடியாத காரியம். அவருக்கே
மனம் வந்ததால்தான் படம்பிடிக்க ஒப்புக்கொண்டார்.
வேண்டிய எல்லாம் தயார்செய்யப் பெற்றன.

பாரதியாரை உட்கார வைத்தோம். ஒரு தடிக்கம்பைத்
தூக்கிக் கையிலே தலைக்கு மேலே கம்பு தோன்றும்படி
நிறுத்திக்கொண்டார். அம்மாதிரிப் படம் பிடிக்கப் படம்
பிடிப்போருக்குச் சம்மதமில்லை. அவர் எவ்வளவோ
சொன்னார்.

‘முடியாது; நீர் சொல்வதை நான் என்ன கேட்பது?’
என்று சொல்லிவிட்டார் பாரதியார். பிறகு, அப்படியே
எடுக்கச் செய்தோம்.”

(காரைக்குடியில் பாரதியார், ராய.சொ. பாரதசக்தி,
ஆண்டுமலர், 1947, ப.7).

———————-

இதற்குப் பின்னர் 1921-ல் புதுவை அன்பர் பாரதிதாசனின்
வேண்டுகோளுக்கிணங்க எடுத்துக் கொள்ளப்பட்டதே
இப்போது புகழ்பெற்று விளங்கும் ஓவல் வடிவப் படத்தின்
அடிப்படையாக அமைந்த படமாகும்.
இந்த ஐந்து படங்களே இப்போது நமக்குக் கிடைத்துள்ள
படங்களாகும்.

பாரதி விரும்பிய படம்

விடுதலையான பாரதி 1919 பிப்ரவரியில் முதன்முறையாகச்
சென்னை சென்றபோது ஆங்கிலத்திலும் தமிழிலும் பல
சொற்பொழிவுகளை ஆற்றினார்.

மார்ச் 2, மார்ச் 17, மார்ச் 21, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில்
நீதிபதி மணி ஐயர், மாங்கொட்டைச் சாமியார் என்னும்
குள்ளச்சாமி, சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ. ரங்கசாமி
ஐயங்கார் தலைமையில் அவரது சொற்பொழிவுகள்
நிகழ்ந்தன.

பெரும்பாலான கூட்டங்கள் நுழைவுக் கட்டணம் வைக்கப்
பட்டே நடந்திருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில்தான்
‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர்
கஸ்தூரி ரங்க ஐயங்காருக்குச் சொந்தமான இடத்தில்
குடியிருந்த ராஜாஜியின் வீட்டில் காந்தியடிகள் தங்கினார்.

அங்குதான் பாரதி காந்தியைச் சந்தித்தார். இந்தக்
காலகட்டத்தில் பாரதியின் தோற்றம் புதுவையில்
காட்சியளித்த தோற்றத்தை ஒட்டியதாகவே தாடியோடு
பெரிதும் இருந்திருக்கிறது.

இந்தக் காலத்தில் நீதிபதி மணி ஐயர் தலைமையில்
1919 மார்ச் 2 தாம் ஆற்றவிருந்த நித்திய வாழ்வு
(The Cult Of Eternal) சொற்பொழிவுக்கான
துண்டுப் பிரசுரத்தில் இடம்பெறுவதற்காகச் சென்னை
பிராட்வேயிலிருந்த ரத்னா கம்பெனி என்னும் போட்டோ
ஸ்டுடியோவில் பாரதியார் படம் எடுத்துக்கொண்டார்.

அந்தப் புகைப்படம் அவருக்கு மிகவும் திருப்தியாக
இருந்ததாம். “ஆனால் பாரதியால் புகழப்பெற்ற
இந்தப் படம் இப்போது எங்கும் கிடைக்கவில்லை”
என்று பாரதியியல் முன்னோடி ஆராய்ச்சியாளர்
ரா.அ.பத்மநாபன் குறிப்பிட்டிருந்தார்
(சித்திர பாரதி, காலச்சுவடு வெளியீடு).

————-

பாரதியின் பொதுவாழ்வில், அவரே விரும்பித் துண்டுப்
பிரசுரத்தில் வெளியிட என எடுத்துக்கொண்ட இந்தப்
படத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை. இந்தப்
படத்தைத் தாங்கிய சொற்பொழிவுக் கூட்டம் பற்றிய
அறிவிப்பு அன்னிபெசன்ட் நடத்திய ஆங்கில நாளிதழான
‘நியூ இந்தியா’வில் 1919 மார்ச் முதல் தேதி வெளிவந்துள்ளது.

மார்ச் முதல் தேதியிலேயே பத்திரிகையில் வெளி
வந்துள்ளதால் இந்தப் படம் சென்னையில் அதற்குச்
சிலநாள் முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, பாரதியின் விடுதலைக்குப் பிந்தைய முதல்
சென்னைப் பயணம் பிப்ரவரி இறுதியில் நடந்திருக்க
வேண்டும் எனத் தெரிகிறது.

————

பாரதியின் ஆறாவது படம்
—————-

புதுவையில் வாழ்ந்தபோது எடுக்கப்பட்ட தாடியோடு
கூடிய படங்களில் உள்ள தோற்றங்களில் இருந்து, இந்தப்
படத்தில் உள்ள பாரதியின் தோற்றம் சற்றே மாறு
பட்டுள்ளது. தன் வீட்டில் காந்தியின் முன்னிலையில்

பாரதியைக் கண்ட ராஜாஜியின் ”பித்த சந்நியாசிபோல்
இருந்தார்” என்ற சித்திரிப்பை உறுதி செய்வதாகவே
இந்தப் படத்தின் தோற்றம் உள்ளது.

எந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக இந்தப் படம் எ
டுக்கப்பட்டதோ அந்தச் சொற்பொழிவு அன்னிபெசன்ட்
நடத்திய நியூ இந்தியா பத்திரிகையிலும் ‘தி இந்து’
ஆங்கில நாளிதழிலும் முழுமையாக வெளிவந்திருந்தது.

‘தி இந்து’வில் வெளிவந்திருந்த சொற்பொழிவுப்
பதிவை முதன்முறையாக ஆ.இரா.வேங்கடாசலபதி
கண்டுபிடித்து வெளியிட்டிருந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

தமிழகம் இதுவரை அறியாத பாரதியின் முக்கியமான
இந்தப் படத்தினை உள்ளடக்கிய அறிவிப்பை முதலில்
கண்ட சீனி. விசுவநாதன் இதன் முக்கியத்துவத்தையோ
முந்தைய இரு தாடி வைத்த பாரதியின் படங்களில்
இருந்து வேறுபட்ட புதிய படம் இது என்பதையோ
அறியவோ அறிவிக்கவோ எந்தக் குறிப்பையும்
வழங்கவோ செய்யவில்லை.

முதல் முறையாக பாரதியின் அறியப்படாத படம் அதன்
பின்னணி குறித்த விளக்கத்தோடு, ‘தி இந்து லிட் ஃபார்
லைஃப்’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தோடு சேர்த்து பாரதியின் அறியப்பட்ட
படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.

26 வயது பாரதியின் படம் பற்றிய புதிய செய்தியும்
‘சுதேசமித்திரன்’ இதழின் வாயிலாக இப்போது
கண்டறியப்பட்டுள்ளது. 1908 ஜூலை 5 அன்று பாரதி,
எத்திராஜ சுரேந்திரநாத் ஆர்யா, ஒரு சாமியார், இரு
சுதேசிய பிரசங்கிகள், வெங்கட்ரமணராவ்
ஆகியோரைப் புகைப்படமாகத் திலகர் அனுதாபக்
கூட்டத்தின் தொடக்கத்தில் எடுத்திருக்கின்றனர்.

அந்தப் படமும் பின்னர் சி.ஐ.டி. அறிக்கையோடு
இணைத்து அரசுக்குக் காவல் துறையால் அனுப்பப்
பட்டிருக்கிறது. விரைவில் 26 வயது பாரதியின்
புகைப்படத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்பது
நம்பிக்கை!

——————————–

மணிகண்டன்,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்,
நன்றி- தி இந்து

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: