புதுநாத்து – சிறுகதை

kadhir8

 

நம்மூர்ல இப்ப மயிலுங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுடி.
மொதல்ல ரெண்டு மயிலு வந்திருக்குன்னு கோதை சொன்னா.
நான் நம்பவேயில்ல. நாலுநாளு கழிச்சு நம்ம கொல்லை
மூங்கிகுத்து பக்கம் ரெண்டு நின்னத நானே என் கண்ணால
பாத்தேன்.

ரெண்டும் அம்புட்டு அழகு. மயிலு இங்க நின்னா தோகைங்க
அங்க கெடக்கு. அம்மாம் பெரிசு. அதுங்க கழுத்தை பாத்துகிட்டே
இருக்கலாம் போலிருக்கு. பளபளன்னு அப்புடி ஒரு நெறம்.
திருபுவனம் பட்டை வெட்டி தச்சு விட்டது மாதிரி அப்படியொரு
நெகுநெகுப்பு. அடுத்த ஒருவாரத்துல ஏகப்பட்ட மயிலுங்க
வந்துடுச்சு.”

லட்சுமி போனில் கதையளக்க, பவித்ரா ஜன்னல் கம்பிகளைப்
பிடித்தபடி ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள்.

“”ஒங்கப்பாருக்குதான் மயிலுங்கள கண்டாலே ஆவறதில்ல.
அதுங்க பயிர நாசம் பண்ணிடுங்களாம். வீட்டு மேல ஏறி ஓட்டை
சரிச்சு விட்ருங்களாம். திட்டிகிட்டே கெடக்காரு” என்று நீட்டி
முழக்கியவள்,

“” ஏன்டி பவி, எனக்கொரு சந்தேகம்…” என்று நிறுத்தினாள்.

“” என்னாம்மா ?”

“”ஆண் மயிலுக்கு தோகை இருக்குமா, பொண் மயிலுக்கு தோகை
இருக்குமா?”

“”ஆண் மயிலுக்குத்தான் தோகை இருக்கும்”

“” கோதை அப்புடித்தான் சொன்னா. ஆனா எனக்குதான் டவுட்டா
இருந்துச்சு. ஏன்னு கேளேன்.”

“”சொல்லேன்”

“”பொண் மயிலு பெரிய சைசு கோழியாட்டாம் இருக்கு. பாக்கவே
சகிக்கல. ஆனா ஆண் மயிலுதான் பட்டுப்பொடவைய விரிச்சு
போட்டமாதிரி தோகைய பொரளவுட்டுகிட்டு அலையுது”

“”அதுக்காக…..?”

“”கடவுள் பொம்பளைங்களதான் அழகான உருவமா படைச்சிருக்காரு.
ஆனா மயிலு விஷயத்துல மட்டும் மாத்தி படைச்சிட்டாரு.
ஒருவேளை ஏதும் கொழப்பத்துல இருந்து அப்புடி செஞ்சிட்டாரோ
என்னவோ…” என்று சந்தேகம் கேட்டு அதற்கு தானே ஒரு தீர்வையும்
கண்டுபிடித்துவிட்ட லட்சுமி, இறுதியாக அந்த கேள்வியைக் கேட்டாள்.

“”இன்னியோட இருவத்தெட்டு நாளாவுது. இந்நேரத்துக்கு
வந்திருக்கணுமே. வந்துடுச்சா ?”

அந்த கேள்வியே, வந்திருக்கக் கூடாது என்ற ஏக்கத்தில் கேட்கப்பட்டது
என்பது புரிய பவித்ரா இல்லையென்றாள்.

“”மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு படைக்கிறதா வேண்டிகிட்டிருக்கேன்.
கூடிய சீக்கிரத்துல நல்லது நடக்கணும்”
கிசுகிசுப்பாய் சொன்னவள்,

“”ராத்திரிக்கு பேசுறேன்” என்று போனை வைக்க, பவித்ரா பெருமூச்சு
விட்டு கட்டிலில் அமர்ந்தாள். காலை ஆறுமணிக்கே வியர்த்து வழிந்தது.
சென்னையில் நெருக்கடி மிகுந்த பகுதியில் அமைந்திருந்த பிளாட்டின்
ஐந்தாவது தளத்தில் வீடு.

“”மேலே போகப் போக பொல்யூஷன் குறைஞ்சிடும். அதனாலதான்
ஐஞ்சாவது மாடியில வீடு பார்த்திருக்கேன்”

பிரபாகர் திருமணம் நிச்சயமான பிறகு ஒருமுறை போனில் பேசிய
போது சொன்னான். இந்த நிமிடம் கார் பார்க்கிங்கில் வாக்கிங்
போய்க் கொண்டிருக்கிறான். இருபத்தேழு வயது நிரம்பிய
அட்டகாசமான இளைஞன். பவித்ராவை பார்த்த நொடி சொக்கி
போய்விட்டான்.

“”மாருதி வரைஞ்ச ஓவியம் மாதிரி பிசிறில்லாம அழகா, அம்சமா
இருக்கே. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு…?”

அவன் தனிமையில் பட்டென்று கேட்டபோது, பவித்ராவுக்கு
வெட்கத்தில் முகம் சிவந்துபோனது. முகம் நிமிர்த்தாமலே
தலையசைத்தாள். அடுத்த மாதம் திருமணம். ஹனிமூன் போய்
வந்த கையோடு தனிக்குடித்தனம்.

“”அம்மாகிட்ட தெனமும் சமையல் பழகிக்கடி. அழகைப் பாத்து
மயங்குற ஆம்பளைங்கள அடிமையா வச்சிக்கணும்னா நல்லா
சமைக்க தெரிஞ்சிருக்கணும். வாய்க்கு ருசியா சமைச்சு போட்டா
புருஷனுங்க நாய்க்குட்டிமாதிரி சுத்தி வருவானுங்க”

அத்தை கண்ணடித்து கூறினாள். பவித்ராவுக்கு வெட்கமாக
இருந்தது. இப்போது அதை நினைத்தபோது உண்மைதான் என்று
புரிந்தது.

“”வாவ்… காலிஃபிளார் மன்சூரியன் எக்ஸலண்ட்டா இருக்கு.
உன் கையைக் கொண்டா” என்று இழுத்து பிடித்து முத்தமிட்ட
பிரபாகர் அன்று மாலையே ஒரு மோதிரம் வாங்கி பரிசளித்தான்.
அந்த ஆறு மாதத்துக்குள் பவித்ராவுக்கு நிறைய கிஃப்ட் கிடைத்து
விட்டது.

“”நானுந்தான் இருவத்திரெண்டு வருசமா சமைக்கிறேன்.
ஒங்கப்பாரு வாயத் தொறந்து நல்லாயிருக்குன்னு ஒரு வார்த்தை
சொன்னதில்ல. ம்ஹூம்… அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை
வேணும்டி” என்ற லட்சுமிக்கு உள்ளூர மருமகனை நினைத்து
அவ்வளவு சந்தோஷம்.

“”என் மாப்ள பவிக்கு வைர டாலர் வாங்கி குடுத்திருக்காராம்…”
என்று பக்கத்து வீட்டு கோதையிடம் சொல்லி பெருமைப்பட்டுக்
கொண்டாள்.

பிரபாகர் வாக்கிங் முடித்து வியர்த்து வழிந்து வந்தான்.

“” ஹேய் பவி, ஏசியை எதுக்கு ஆஃப் பண்ணினே….உனக்கு எப்படி
வேர்த்திருக்கு பாரு…” என்றபடி துண்டெடுத்து அவள் நெற்றியைத்
துடைத்தான்.

“” பொழுதுக்கும் ஏசியை ஓட விட்டுக்கிட்டிருந்தா கரண்ட் பில்
எகிறிடாதா..”
கேட்ட பவித்ரா அதே துண்டால் அவன் முகத்தை துடைத்துவிட்டாள்.

“” கரண்ட் பில் எவ்ளோ ஆனாலும் பரவாயில்ல. என் பட்டு ரோஸ்
வாடாம இருந்தா போதும்”

செல்லமாய் அவளை அணைத்தவன் அடுத்தநொடியே ஞாபகம்
வந்தவனாய் அலறியடித்துகொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

“” இன்னிக்கு எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருக்கணும்.
முக்கியமான மீட்டிங் இருக்கு”

சொல்லிவிட்டு கதவடைத்து கொண்டவன், அடுத்த பத்து நிமிடத்தில்
கிளம்பி ஷூவை மாட்டிக்கொண்டு பை சொல்லி போய்விட, பவித்ரா
அயற்சியோடு சோபாவில் அமர்ந்தாள்.

புது வீடு. வசதிகளுக்கு குறைவில்லை. அத்தனை ஜடப்பொருட்களும்
அதனதன் இடத்தில் பாந்தமாய் உட்கார்ந்திருந்தன. அசையும் பொருள்
அவள் மட்டுமே. அவளுக்கும் அங்கே, இங்கே அசைய வாய்ப்பில்லை.

சமையலறை வேலை முடிந்துவிட்டது. மற்ற வேலைகளை கவனிக்க
செண்பகம் வந்துவிடுவாள். அவளிருக்கும் ஒரு மணி நேரம் சற்றும்
ஆறுதலை உணரும் மனசு அவள் போனபிறகு தனிமையில் சிக்கிக்
கொண்டு மீள முடியாமல் தவிக்கும்.

பவித்ரா கண்களை இறுக மூடிக்கொண்டாள். இந்தமாதிரி
தருணங்களில் ஊரைப்பற்றிய ஏக்கம் பலமாக ஆட்டிவைக்கும்.
அன்றும் ஒரு சந்தோஷமான நாளின் ஞாபகம் மனசுக்குள் நிழலாய்
படிந்து அவளையும் தன்னுள் இழுத்துக்கொண்டது.

அன்று கழுவிவிடப்பட்ட உள் முற்றத்தில் நான்கைந்து
நார்த்தங்குருவிகள் வந்து நின்றதை குளித்துவிட்டு
கொல்லையிலிருந்து உள்ளே வந்த பவித்ரா கவனித்துவிட்டாள்.
குருவிகள் தலையை அசைத்து, கண்கள் மினுங்க அவளையே
பார்த்தன.

“” அம்மா”

பவித்ரா அடுக்களை நோக்கி மெல்ல குரல் கொடுக்க,

“” என்னடி?” என்ற லட்சுமியின் திடீர்க்குரலில் குருவிகள் அதிர்ந்து
முற்ற விளிம்புக்கு தாவின.

“” சத்தம் போடாம ஒரு கைப்பிடி நொய்யரிசி குடும்மா..”

“” எதுக்கு…?”

அடுக்களையைவிட்டு வெளியே வந்த லட்சுமி முற்றத்தில்
நின்றிருந்த குருவிகளை விரட்டப்போக, பவித்ரா கையசைத்து
தடுத்தாள்.

“” பாவம்மா… கொஞ்சூண்டு நொய் குடு. எல்லாம் தின்னுட்டு
பறந்துடும்” என்றவள், அங்கலாய்ப்போடு அவள் தந்த நொய்யை
முற்றத்தில் விசிறி விட குருவிகள் அலறியடித்துக்கொண்டு
கொல்லைப்புறம் பறந்தன.
பவித்ரா தூணுக்குப் பின்புறம் மறைந்து காத்திருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது வீணாகவில்லை. குருவிகள் மறுபடி வந்து
நொய்யை கொத்தி திங்க தொடங்கின. அன்று ஆரம்பித்த பழக்கம்
பின்பு வழக்கமாகிப் போனது.

“” ஒங்க பொண்ணுக்கு தாராள மனசு. தெனமும் நாலஞ்சு
சீவனுங்களுக்கு படியளக்குறா”

லட்சுமி கிண்டலாய் கூற, பெரியசாமி பெருமையாய் சிரித்தார்.

“” வெவசாயி மவ. பொறவு வேறெப்புடி இருப்பா…செய்யட்டும்,
செய்யட்டும்”

“” ஒங்களுக்கு கஞ்சி காய்ச்சி தரலாமுன்னு கம்பு வாங்கி
வச்சிருந்தேன். அத்தியும் கொஞ்சம், கொஞ்சமா குருவிங்களுக்கு
போட்டாச்சு”

“” அதனால என்னா…வாங்குனா போச்சு”

“” நாளைக்கி இவ கலியாணமாயி போயிட்டா இந்த
குருவிங்களுக்கு யாரு தீனிபோடுவா?”

“” நீதான். நான் போயிட்டா ஒனக்கு பாரம் கொறஞ்சிடும்.
சும்மாதானே கெடக்கப்போற. ஒரு புடி தானியம் போட்டா
கொறஞ்சாபோயிடுவ…?”

பவித்ரா கோபமாக கேட்டாள். திருமணமாகி கிளம்பும்போது
கட்டிக்கொண்டு அழுத அம்மாவிடம்,

“” குருவிங்களுக்கு தானியம் போட மறந்துடாதம்மா…” என்றாள்
கெஞ்சலாக.

“” அம்மாவ வுட்டுட்டு போறதவுட இந்த குருவிங்கள வுட்டுட்டு
போறதுதான் இவளுக்கு வேதனையா இருக்கு, போடி…”

லட்சுமி முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, அவளை கொஞ்சி
சமாதானப்படுத்திவிட்டு வந்தவளுக்கு சென்னையின்
எந்திரத்தனமான வாழ்க்கை மூச்சு முட்ட வைத்தது.

“” பொழுது போகலேன்னா என்ன செய்வ பவி?”

ஒருமுறை பிரபாகர் கேட்டான் .

“”பக்கத்து வீட்டு கோமதியத்தையோட தாயக்கட்டை ஆடுவேன்.
கொல்லையில பூத்து குலுங்குற மல்லிகைப்பூவைக் கட்டி
கோயிலுக்கு எடுத்துகிட்டு போவேன். அக்கம், பக்கத்து வீட்டுல
இருக்க ஃபிரெண்ட்ûஸ கூப்புட்டு சிடியில படம் போட்டு பார்ப்பேன்.
ராத்திரியானா வெளியில சாணம் தெளிச்ச தரையில ஒக்காந்து
கதை பேசுவேன். நல்லா பொழுது போகும்.”

அவள் சந்தோஷமாக கூறியபோது, பிரபாகருக்கு இப்படியெல்லாம்
பொழுதை கழிக்க முடியுமா என்று தோன்றியது. நகரத்தில் பிறந்து,
நகர நாகரீகத்தில் வளர்ந்தவன் அவள் சொன்னதைக் கேட்டு
தனக்குள் சிரித்துக் கொண்டான்.

பிரபாகர் ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தபோது டிவி ஓடிக்
கொண்டிருந்தது.

“” இன்னிக்கு பொழுது எப்படி போச்சு?”

“” உம்…போச்சு…” என்றவள் தட்டெடுத்து வைத்தாள். அவன் சாப்பிட
தானும் சாப்பிட்டாள். பிரபாகர் அசதியோடு வந்து படுக்கையில்
விழுந்தான். பின்னோடு வந்த பவித்ராவின் முகம் சோர்ந்து
போயிருந்தது. திருமணமாகி இந்த ஆறுமாதத்தில் அவள்
பெரும்பாலும் அவள் அப்படித்தானிருந்தாள்.

சனி, ஞாயிறு பிரபாகர் வீட்டிலிருக்கும் சமயங்களில் முகத்தில்
தனி ஜொலிப்பு தெரியும். மற்ற நாட்களில் அந்த சோர்ந்துபோன
முகம்தான். பிரபாகர் அருகில் வந்து படுத்தவளை மெல்ல அணைத்து
கொண்டான்.

“”ஏன் டல்லாயிருக்க…? ஊர் ஞாபகம் வந்துடுச்சா…?”

கேட்டதுதான் தாமதம். விலுக்கென்று திரும்பியவள் கண்களில்
கண்ணீர்.

“” என்னடா…?”

“” ஊர்ல நெறைய மயிலுங்க வந்திருக்குதாம். மயிலு ரொம்ப
அழகு, இல்ல. ஆணும், பொண்ணுமா எக்கசக்க மயிலுங்க கொல்லை,
தெருவுல நடமாடுறதா அம்மா சொன்னாங்க”

அவளுடைய குரல் கரகரத்தது.

“” ஊருக்கு போகணுமா…?”

பிரபாகர் அவள் கன்னம் வருடி கேட்டான்.

“” உங்களுக்கு லீவு கெடைக்குமா…?”

“”அதைப்பத்தி உனக்கென்ன கவலை. நாளைக்கு நைட் பஸ்ஸூல
ரெண்டு டிக்கெட் போட்டுடுறேன். உனக்கு சந்தோஷம்தானே…?”

“”தேங்க்ஸ்…” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

“” மாசத்துக்கு ஒரு சனி, ஞாயிறு உங்க ஊருக்கு போறோம்.
அங்கே சந்தோஷமா இருந்துட்டு வர்றோம். சரியா…?”

“” சரி…”

அவள் முகம் நிமிர்த்தாமலே சொன்னாள். நார்த்தங்குருவிகள்
கண்ணுக்குள் நிழலாடின.

“” ஊருக்கு போனதும் நீ என்னை மறந்துடப் போற”

“” சேச்சே…அப்படியெல்லாம் இல்ல”
அவளின் குரலில் புதுத்தெம்பு.

“” அங்கே இருக்க ரெண்டு நாளும் உன் குருவிங்களுக்கு நாந்தான்
தீனி போடுவேன். சம்மதம்தானே…?”

“” உம், சரி”

பவித்ரா வேக, வேகமாக தலையாட்டினாள். அதில் குழந்தையின்
குதூகலம் தெரிந்தது.

“”செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்துல நடும்போது அது
மண்ணுல வேர் பிடிக்க கொஞ்சநாளாகும். வேர் பிடிச்சிடுச்சுன்னா
அதை அசைக்க முடியாது”

நண்பன் ஒருவன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. செடியை வேர்
பிடிக்க வைக்க என்ன செய்யலாமென்று யோசித்தவனுக்கு
சட்டென்று அது உரைத்தது.

“தான் கிளம்பிவிட்டாலும் குருவிகளுக்கு அம்மாவை விட்டு தீனி
போட வைத்த பவித்ராவின் இளகிய மனதை கட்டிப்போட புது
உறவு வந்தாக வேண்டும். வந்துவிட்டால் அவளுடைய தனிமை
பறந்துவிடும்” என்றெண்ணினான் பிரபாகர்.

—————————————–
ஐ.கிருத்திகா
தினமணி கதிர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: