ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல்
வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’
இதழுக்குத் தனித்த இடமுண்டு.

இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு
‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற
திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’
இதழுக்கு முக்கியப் பங்குண்டு.

சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று
‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார்
அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான
இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது.

‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என
இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக
அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன்
இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர்.

ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’
ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார்
தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு
இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர்.

இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை
நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல்
வெளியிட்டார்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட
‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு,
சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர
கருத்துகள் இடம்பெற்றன.

இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை,
வாசகர் கேள்வி – பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில்
நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.

சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர்,
‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’
உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு
‘தமிழ’னில் எழுதினார்.

இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார்
போன்ற தலித் பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு
என பல தலித் அல்லாத அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர்.
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல்
காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள்
பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த
சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால்,
தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன்
பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து
நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த
‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது.

பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ்
ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம்
ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு
நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.

நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட
‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது.
எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத்
தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழி
காட்டுகிறது!

(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆ
கின்றன.)

————————-

– இரா.வினோத், தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: