ஹியூமர்ல ஏது டார்க்கு? -கலாய்க்கும் விவேக்

தமிழ் சினிமாவில் முப்பதாவது ஆண்டை கொண்டாடுகிறார் ‘சின்னக் கலைவாணர்’ விவேக். ‘பிருந்தாவனம்’ ஹிட் மீண்டும் அவருக்கு ரெட் கார்பெட்டை விரித்திருக்கிறது. அடுத்து தனுஷின் ‘வி.ஐ.பி.2’, சந்தானத்தோடு‘சக்கபோடு போடுராஜா’, ‘ஹிப்ஹாப்’ ஆதியோடு ‘மீசையை முறுக்கு’ என ரிலீஸுக்கு வரிசைகட்டி படங்கள் நிற்கின்றன. ‘நீங்க சினிமாவுக்கு வந்து முப்பது வருஷமாச்சு..?’ என்றதுமே, ‘‘ஏன்ன்ன்… போதும்ங்றீங்களா?’’ என ஜாலியாக புன்னகைக்கிறார். கேள்வியை அங்கிருந்தே ஆரம்பித்தோம்.

உங்க முப்பது வருட அனுபவத்திலிருந்து சொல்லுங்க… இப்ப காமெடியின் தரம் எப்படி இருக்கு?
அந்தந்த காலத்து மக்களால அவ்வப் போது அந்தந்த டைம்ல ரசிக்கப்படுவதுதான் காமெடி. இதுல அது நல்ல காமெடி… இது கெட்ட காமெடினு எதுவுமே இல்ல. கலைவாணர் என்.எஸ்.கே., ஐயா அவ்வளவு உயர்ந்த கருத்துகளை சொன்னார். அப்போதுள்ள நடை ஸ்லோவா இருந்தது. நல்ல கருத்துகளா இருந்தா கூட இப்ப அந்த நடைல சொன்னா எடுபடாது. வேற ஸ்டைல்ல சொல்ல வேண்டியிருக்கு.

ஏன்னா மக்களோட லிவிங் ஸ்டைல் மாறுவதற்கு ஏற்ப காமெடியையும் அப்டேட் பண்ணிக்க வேண்டியிருக்கு. முன்னாடி படங்கள்ல குட்டை பாவாடையே பெரிய கவர்ச்சியாக கருதப்பட்டது. இப்ப நார்மல் கேர்ள்ஸே சர்வ சாதாரணமா பொது இடங்கள்ல மினி ஸ்கர்ட்ல வர்றாங்க.

ஸோ, எது ஆபாசம்? எது டபுள் மீனிங்னு எல்லா காலத்துக்கும் வரையறுக்க முடியாது. மக்கள் ரசிக்கிற எல்லாமே சிறந்த கலைவடிவம்தான். ஹியூமர்ல டார்க் காமெடினு சொல்றாங்க. ஹியூமர்ல ஏது டார்க்கு, வொயிட்டு?! ஹியூமரே வாழ்க்கையோட லைட்டர் சைட்தானே! வாழ்க்கைல சிரிக்கறதுக்காக வச்ச ஒரு விஷயம்தான் காமெடி. அதுமேல பெயின்ட்டை ஊத்தி டார்க் காமெடினு சொல்ல முடியுமா? ஒரு விஷயம் கவனிச்சீங்களா… இப்ப ஃபேமிலியோட பார்க்கிற காமெடி குறைஞ்சிடுச்சு.!

மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்னு வில்லன்கள் பலரும் காமெடியன்ஸா மாறிக்கிட்டிருக்காங்களே..?
நல்ல விஷயம்தானே! ஆக்‌சுவலா பெண்களுக்கு வில்லன்களை ரொம்பவும் பிடிக்கும். ஜெமினியின் ‘சந்திரலேகா’ல வில்லனா வந்த ரஞ்சன்தானே ஹீரோவை விட அதிகம் பேசப்பட்டார்?! ‘மூன்று முடிச்சு’ல வில்லனா வந்த ரஜினிதானே ஹீரோ கமலை விட அதிகம் பேசப்பட்டார்?! ‘ஃபேஸ் ஆஃப்’ ஹாலிவுட் படத்துலயும் வில்லன்தானே ஸ்கோர் பண்றார்?

உண்மைல வில்லன்கள்கிட்ட பேஸிக்கா ஒரு ஹியூமர் இருக்கும். எப்பவும் ஹீரோக்கள்கிட்ட வில்லன்கள் தோத்துடுவாங்க. இதையெல்லாம் வில்லன்கள் கவனிச்சிருப்பாங்க போலிருக்கு. ‘எதுக்கு நாம தோத்தும் ஜனங்க வெறுப்பை சம்பாதிக்கணும்’னு நினைச்சு காமெடி பக்கம் வந்துட்டாங்க போல!

ஐஸ்வர்யா தனுஷ் டைரக்‌ஷன்லயும் நடிச்சிருக்கீங்க… இப்ப சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் ‘வி.ஐ.பி.2’ல நடிக்கறீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம்?
சவுந்தர்யா ரொம்ப  ஃபாஸ்ட் அண்ட் ஷார்ப். குட்டி ரஜினி மாதிரி துறுதுறுன்னு ஒர்க் பண்றாங்க. ஸ்பாட்டுல சின்ன தவறுனாலும் கண்டுபிடிச்சிடறாங்க. ஐஸ்வர்யாவை விட டபுள் ஃபாஸ்ட். தெளிவாவும் இருக்காங்க. ஒரு பெரிய சீனை சொன்ன உடனேயே டேக் போலாம்னு ரெடியாகிடுறாங்க. ‘ஒரு ரிகர்சல் பாத்துடறேன்’னு சொன்னா சிரிக்கிறாங்க. ‘நீங்க எவ்ளோ பெரிய ஆக்டர்.

உங்களுக்கு ஏன் சார் ரிகர்சல்’னு கேட்கறாங்க. இப்படி ஒரு ஒர்க்கிங் ஸ்டைலை இராம நாராயணன் சார்கிட்டதான் பார்த்திருக்கேன். ‘நீங்க படில இறங்கி வர்றீங்க. உங்க மனைவி காபி கொண்டு வந்து கொடுக்கறாங்க’னு அவர் சீனை சொல்லுவார். உடனே, ‘இப்படியா சார் இறங்கி வரணும்’னு அவர்கிட்ட நடிச்சுக் கேட்பேன். ‘கட்… கட்… கட்… ஷாட் ஓகே’னு குரல் கொடுப்பார்!

நமக்கே தெரியாம அவ்ளோ ஸ்பீடா ஷூட் பண்ணுவார். சவுந்தர்யாவும் அப்படி ஒர்க் பண்றாங்க. ‘வி.ஐ.பி.’ல வந்த அதே அழகு சுந்தரம்தான் இதுலேயும். அதே தங்கபுஷ்பம்தான்! ஆனா, இதுல படம் முழுக்க வர்றேன். தங்கபுஷ்பம் யார் என்கிற சஸ்பென்ஸுக்கு இந்த படத்துல ஒருவேளை விடை கிடைக்கலாம்!

என்ன சொல்றார் சந்தானம்?
‘சக்கபோடு போடுராஜா’ படத்துக்காக என்னை கேட்டு சந்தானம் வந்தப்ப, ‘அண்ணே ஸ்கூல் காலத்துல இருந்து உங்களோட காமெடி பாத்து வந்தவங்க நாங்க. நீங்க இந்த படத்துல நடிச்சா எனக்கு கவுரவமா இருக்கும். நான் உங்களை ரசிச்சு வந்தவன். அதனால உங்கள தப்பா பயன்படுத்த மாட்டேன்.

நீங்க என்னவேணா என்னை கலாய்ங்க… திருப்பி உங்கள கலாய்க்க மாட்டேன்’னு சொன்னார். ‘கலாய்க்கறதுதானே உங்க ஸ்டைலு… நீங்களும் பதிலுக்கு கலாய்ச்சாதான் காமெடி சிறப்பா வரும்’னு சந்தானம்கிட்ட சொல்லி அவரையும் கலாய்க்க விட்டு நிறைய சீன் எடுத்திருக்கோம். அந்தப் படத்துக்கு என் கேரக்டர் ப்ளஸ்ஸா இருக்கும். ‘மீசையை முறுக்கு’லயும் என் கேரக்டர் பேசப்படும். ஒரு பையனுக்கு பாரதியாரே அப்பாவாக இருந்தா எப்படி இருக்கும்? அப்படி ஒரு கேரக்டர் பண்ணியிருக்கேன். அடுத்து கதை நாயகனா ஒரு படம் பண்றேன். முழுக்க முழுக்க அமெரிக்கால தயாராகிற படம். அது தவிர, ‘சாமி2’ல நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு.

‘பிருந்தாவனம்’?
நடிகர் விவேக்காவே நடிச்சது எனக்கே புது அனுபவம்தான். டைரக்டர் ராதாமோகன் இந்த கேரக்டரை சொல்லும் போதே, ‘ரியல் லைஃப்ல நாங்க பாக்குற விவேக்தான் படத்துக்கு வேணும். காமெடி விவேக்கா வேணாம் சார்’னு கண்டிஷனா சொல்லிட்டார். அது எனக்கே பிடிச்சிருந்தது. தமிழ்ல இப்படி படம் வந்தது இதுதான் முதல் முறைனு நினைக்கறேன்.

நிஜத்துல நான் பியானோ ஓரளவு வாசிப்பேன். அப்துல் சத்தார் மாஸ்டர் கிட்டதான் கத்துக்கிட்டேன். அவர் சொல்லிக் கொடுத்த சில ரைம்ஸை படத்துலயும் வாசிச்சிருப்பேன். அப்துல் கலாம் வழில நானும் மரம் நடுகிறேன். அதனால படத்துலயும் என்னை மரம் நட வைச்சாங்க. மறக்க முடியாத அனுபவம்.

மரம் நடுவதை தொடர்வீங்களா?
விட்டாதானே? கலாம் ஐயா 2008ல எங்கிட்ட கொடுத்த விஷயம். 2009ல இருந்து சீரியஸா பண்றேன். இந்த ஏழு வருஷங்கள்ல 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டிருக்கேன். எப்ப ஒரு கோடி இலக்கை எட்டறேனோ… அப்ப அவருக்கு அஞ்சலி செலுத்தினதா நினைப்பேன்.

இப்பவும் சைக்கிளிங் போறீங்களா?
Low back pain வந்து படாத பாடு பட்டுக்கிட்டிருக்கேன். காமெடியனுக்கு எக்ஸர்சைஸ் சரிவராது போலிருக்கு. நம்மகிட்டயே காமெடி பண்ணுது! லைஃப்னாலே போராட்டம்தானே! பேக் பெயினை சரி பண்ணிக்கிட்டிருக்கேன். இப்ப கொஞ்சம் யோகாவும் செய்யறேன். வலி சரியானதும் சைக்கிளிங் தொடர்வேன். இந்த சிட்டில சைக்கிள் ஓட்டினா ஒடம்பு இளைக்கும். ஆனா, கண்டிப்பா ஆஸ்துமா வந்துடும்! லாரி, பஸ் விடுற புகை, குப்பை லாரி அள்ளித் தெளிக்கற குப்பைகளுக்கு மத்தில சைக்கிள் ஓட்டணுமே!

உங்களுக்கு பிடிவாரண்ட் போட்டிருந்தாங்களே..?
எட்டு… ஒன்பது வருஷங்களுக்கு முன்னாடி பக்குவமில்லாத காலத்துல பேசின பேச்சுக்கள் அது. அப்துல் கலாம் ஐயா என் வாழ்க்கைல நுழைஞ்ச பிறகு மரம் நடுற வேலைல இறங்கினேன். பத்திரிகைக்காரங்களே என் முயற்சியைப் பாராட்டி ஊக்குவிச்சாங்க. இப்பவும் என்கரேஜ் பண்றாங்க. இப்ப முறைப்படி நீதிமன்றம் அணுகி ஸ்டே வாங்கியிருக்கோம். இனிமேதான் எங்க தரப்பு நியாயத்தை சொல்லுவோம்.

மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: