சனீஸ்வரர் தோஷம் நீங்க உதவும் நளனின் பூர்வஜன்மக் கதை!மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் நள சரிதம்,
நள – தமயந்தியின் வாழ்க்கையை விவரிக்கிறது.

தருமருக்கு முன்னரே சூதாட்டத்தில் அனைத்து
செல்வங்களையும் இழந்து, படாத கஷ்டங்களை
எல்லாம் அனுபவித்தவர் நள மகாராஜா.

பேரழகும் பெருஞ்செல்வமும் பெற்றுத் திகழ்ந்ததைப்
போலவே, அளவற்ற துன்பங்களையும் எதிர்கொண்டு
வாழ்ந்தவர்.

நிடத நாட்டின் மன்னரான நளன், விதர்ப்ப தேசத்து
இளவரசியான தமயந்தியை மணந்த கதையும், பின்னர்
பிரிந்து திரிந்த சோக வாழ்க்கையும் நமக்குத் தெரியும்.

நளனின் சரிதத்தைப் படிப்பவர்கள், சனீஸ்வரரின் பிடியில்
இருந்து விடுபடுவர் என்றும் சொல்வது உண்டு.

ஆனால், நளனின் பூர்வ ஜன்மக் கதையைக்
கேட்பவர்களைத்தான் சனீஸ்வரர் பிடிக்க மாட்டார் என்று
சொல்லப்படுகிறது. நளனின் அந்த பூர்வஜன்மக் கதை
இதுதான்…

—————————

அயோத்தியை அடுத்த காட்டுப்பகுதியில் வாழ்ந்தவர்கள்
ஆகுகன் – ஆகுகி தம்பதியினர். வேடுவ இனத்தைச் சேர்ந்த
போதிலும் இவர்கள் உயிர்க்கொலை செய்யாத உத்தமர்கள்.

சிவனின் மீது மாறாத அன்புகொண்ட ஆகுகன், தினமும்
ஒருவேளை மட்டுமே காட்டுக்குள் சென்று உணவு தேடுவான்.

அதுவும் தானாக விழுந்த காய், கனிகளை மட்டுமே எடுத்து
வருவான். அவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு,
மனைவியோடு பங்கிட்டு உண்பான்.

அப்படி ஒருநாள் உணவு தேடிச் சென்றபோது, மாலை வரை
அலைந்து திரிந்தும் ஒரே ஒரு மாம்பழம் மட்டுமே அவனுக்கு
கிடைத்தது. அதைக் கொண்டு வந்து, பசியோடு இருந்த
மனைவியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான் ஆகுகன்.

மனைவியோ `குளித்து முடித்து, சிவபூஜை செய்த பின்னர்
இருவருமே சாப்பிடுவோம்’ என்றாள். பூஜை முடித்து
உண்ணப்போகும் நேரத்தில் வந்து சேர்ந்தார் ஒரு சிவனடியார்.

விருந்தினர் என்போர் புண்ணியத்தை தரும் இறைவனுக்குச்
சமம் என்று கருதிய தம்பதியினர், அவருக்கு அந்தப் பழத்தை
கொடுத்து உண்ணச் செய்தனர்.

சின்னஞ்சிறிய அந்தக் குடிலில் மூவர் தங்க வசதி
இல்லாததால், தனது மனைவியை அந்த அடியாருக்குத்
துணையாக வைத்துவிட்டு, வெளியே காவலுக்கு நின்றான்
ஆகுகன்.

கொடிய மிருகங்கள் உலவும் அந்தக் காட்டில் சிவனடியாருக்கு
ஒரு துன்பமும் நேரக் கூடாதே என்று எண்ணி இரவு முழுக்கக்
காவல் இருந்தான். உள்ளே இருந்த ஆகுகி இரவு முழுக்க
அடியாருக்கு கால் பிடித்தபடி பாதசேவை செய்தாள்.

அவர் உறங்கியதும் கணவனைப் பார்க்க எழுந்தாள்.
அப்போது அடியார் உறக்கத்தில் முனகவும், தம்மால் அவர் தூக்கம்
கலையக் கூடாதே என்று சேவையைத் தொடர்ந்தாள்.

—————————-

வீடு தேடி வந்த விருந்தினரை இவர்கள் கவனித்த
விதத்தைக் கண்டு சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அலகிலா விளையாட்டுக்குச் சொந்தக்காரரான ஈசன், வேடுவ
தம்பதியினரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணினார்.
காவலுக்கு இருந்த வேடுவனின் மேல் ஒரு சிங்கத்தை ஏவினார்.

கோரப் பசியோடு விரைந்து வந்த சிங்கத்திடம், தாமே வலியச்
சென்று வணங்கினான் ஆகுகன். தன்னை நாடி வந்திருக்கும்
அதிதியின் தூக்கம் கலையாமல் இருக்க, சத்தமின்றி தன்னை
வேறு ஓர் இடத்தில் வைத்து உண்ணுமாறு வேண்டினான்.

ஒரு மனிதன் தன்னிடம் பேசுவதையும், தன்னை உண்ணுமாறு
வேண்டுவதையும் எண்ணி வியந்தது சிங்கம். அவனைப் பாராட்டி,
ஆகுகனை விட்டுவிடுவதாகவும், அதற்கு பதில் வீட்டில் உள்ள
வேறு ஒருவரை உண்ணுவதாகவும் கூறியது.

ஆனால், அதை மறுத்த ஆகுகன், தன்னை நாடி வந்திருக்கும்
அதிதியைக் கொல்வது பாவம். அவருக்கு பாத சேவை செய்யும்
தன் மனைவியைக் கொல்வதும் அடாத செயலே என்று கூறி,
தன்னையே கொன்று பசியை தீர்த்துக்கொள்ளுமாறு வேண்டினான்.

சிங்கமும் ஆகுகனை கொன்று தின்னத் தொடங்கியது.
அப்போதும் ஒரு சிறு சத்தம்கூட போடாமல் தன்னையே
கொடுத்தான் ஆகுகன்.

பொழுது விடிந்தது. வெளியில் வந்த ஆகுகி மாமிசத்தின்
மிச்சத்தையும், ஆடைகளையும் கண்டு இறந்து கிடப்பது தனது
காதல் கணவனே என்று அறிந்து துடித்தாள். மனம் வெடித்தாள்.

வந்திருந்த சிவனடியாரும் மனம் வேதனை கொண்டார்.
தன்னுயிரைக் காட்டிலும் பிரியமான கணவன் மாண்ட பின்னர்,
தான் வாழத் தேவையில்லை என்று கருதிய ஆகுகி, குடிசைக்குள்
நுழைந்து தீ வைத்துக்கொண்டாள்.

கீழிருந்து மேலாகப் பற்றிய தீ, அக்கினி பகவானையே சுட்டது.
ஆதி பரம்பொருளான சிவனையும் தொட்டது. விடையேறி,
உமையம்மையோடு அங்கே காட்சி அளித்தார் பரமேஸ்வரன்.

தீ மலர்க்குவியலானது; மாமிசப் பிண்டத்தில் இருந்து, ஆகுகன்
எழுந்தான். மலர்க் குவியலில் இருந்து ஆகுகி எழுந்தாள்.

சிங்கம், சனீஸ்வரர் ஆனார். சிவனடியார் இந்திரன் ஆனார்.
அந்த இடமே சொர்க்கலோகமாக மாறியது. தன்னை நாடி வந்த
அதிதிக்காக தன்னையே கொடுத்த அந்தத் வேடுவத் தம்பதியரை
எல்லோரும் வாழ்த்தினர்.

`அடுத்த பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, எடுத்துக்காட்டான
தம்பதியாக வாழ்வீர்கள்’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

அந்த ஆகுகனும் ஆகுகியுமே அடுத்த பிறவியில் நளனாகவும்
தமயந்தியாகவும் பிறந்தார்கள். அதன் பிறகு, நளன் – தமயந்தி
கதைதான் உங்களுக்குத் தெரியுமே?

வந்த விருந்தினரை உபசரித்து, பாதுகாத்து வழியனுப்புவதே
தமிழர்களின் இல்லற தர்மம். அதையே நம் புராணங்களும்
இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.

எந்த நேரத்திலும் நம்மை நம்பி வந்தவர்களை கைவிடவே கூடாது
என்பதைத்தான் இந்தக் கதை நமக்குக் கூறுகிறது.

———————-

அதிதியாக வருபவர் இறைவனே என்பதால்தான் அதிதியை
‘அதிதி தேவோ பவ’ என்ற வாக்கியம் உணர்த்துகிறது.

எனவே, நம் வீடு தேடி வருபவர் யாராக இருந்தாலும்,
இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது நம்முடைய கடமை.

—————————
எம்.ஹரிகாமராஜ்
நன்றி-விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: