ஜப்பான் செல்லும் சுடரொளி!கிராமத்து இளம் பெண்ணின் எளிமையான தோற்றம்.
கண்ணில் தீர்க்கமான பார்வை. அதற்கேற்ப அவருக்குப்
பெற்றோர் வைத்த பெயர் சுடரொளி.

பெயருக்கேற்ப, அறிவியல் ஆர்வத்தைச் சுடர்விட்டுப்
பிரகாசிக்கச் செய்துள்ளார் அவரது ஆசிரியை கலையரசி.

விவசாயிகளைக் காப்பற்ற முடியாதா?

மாணவி சுடரொளி சேலத்தை அடுத்த காட்டூர் கிராமத்தைச்
சேர்ந்தவர். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் தற்போது பிளஸ் 1 படித்துவருகிறார்.

அவருடைய தந்தை சுடலேஸ்வரன் பெயிண்டிங் தொழிலில்
ஈடுபட்டுவருகிறார். தாய் பாப்பாத்தி, தங்கை ராஜலட்சுமி,
தம்பி விக்னேஸ்வரன் என எளிமையான குடும்பத்தைச்
சேர்ந்தவர்.

2014-ல் காட்டூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம்
வகுப்பு படித்தபோது, மாவட்ட அளவிலான அறிவியல்
கண்காட்சியில் பங்கேற்றார். அப்போது, எளிய முறையில்
செலவு குறைவான தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்வது
குறித்து ‘பருவகால மாற்றத்துக்கேற்ற நவீன தொழில்
நுட்பங்களுடன் கூடிய வேளாண்மை’ என்ற தலைப்பில்
தனது அறிவியல் படைப்பினைக் காட்சிப்படுத்தினார்.

பின்னர் மாநில அளவிலான கண்காட்சியில் தங்கப்
பதக்கத்தையும் வென்றார்.

“காட்டூர் பள்ளியில் படித்தபோது, எனது அறிவியல் ஆர்வத்தை
கவனித்த எனது ஆசிரியை கலையரசி, மாவட்ட அளவிலான
அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கு என்னை
ஊக்கப்படுத்தினார். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நான்
விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகளைக் காணும்
போதெல்லாம் அதைத் தடுக்க முடியாதா என்று யோசிப்பேன்.
அதைத் தடுப்பதற்காக, ‘ஒருங்கிணைந்த பண்ணை முறை’
என்ற திட்டத்தை அறிவியல் கண்காட்சிக்கான படைப்பாக
எடுத்துக்கொண்டேன்.

இந்த திட்டம் அப்துல் கலாமின் கனவுகளில் ஒன்று”
என்கிறார் சுடரொளி.

விரைவில் வேளாண் விஞ்ஞானி

கோழி வளர்ப்பின் தொடர்ச்சியாக மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பின்
தொடர்ச்சியாக இயற்கை உரம் உற்பத்தி, உரத்தின் மூலமாக
அதிக மகசூல், வீட்டுக் கழிவு நீரில் விவசாயம், சூரிய சக்தியின்
மூலமாக பாசனம் என 28 வகையான திட்டங்களை செயல்படுத்தி,
விவசாயத்தில் லாபம் பெற முடியும் என்பதை இந்த அறிவியல்
கண்காட்சியில் செயல்வடிவில் காட்டினார்.

இதற்காக, ஏழு மாதங்கள் நேரடி விவசாயத்திலும் ஈடுபட்டார்.

இந்தப் படைப்பு தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல்
ஆய்வுக்கான விருதுக்குத் தேர்வானது. துணை
ஜனாதிபதி ஹமீது அன்சாரியிடம் விருது பெற்றார். அதனை
அடுத்து தற்போது இந்திய மாணவர்கள் 30 பேருடன்
‘சக்குரா எக்சேஞ்ச் புரோக்ராம் ஜப்பான்’ எனும் பயணம் மூலமாக
ஜப்பானுக்கு மே 27 அன்று புறப்படுகிறார்.

அங்கு 10 நாள் சுற்றுப் பயணம் செய்து ஜப்பான் நாட்டின் முக்கிய
ஆராய்ச்சி நிலையங்களை நேரில் பார்வையிடுவதுடன்,
அந்நாட்டின் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

அறிவியல் சுற்றுப் பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பும்
போது, விவசாயத்தைக் காக்கும் வேளாண் விஞ்ஞானியாக
உருவெடுக்கும் உத்வேகத்துடன் சுடரொளி பிரகாசித்தபடி
வருவார் என்பதில் ஐயமில்லை.

——————————-எஸ்.விஜயகுமார்

தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: