சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்?

நல்லது செய்ய நினைத்துச் செய்வது நல்லதாகிறது. சில நேரம் அது கெட்டதாகவும் முடிகிறது.

கெட்டதை நினைத்துச் செய்வது, கெட்டதாக ஆகிறது. சில தருணங்களில் அது நல்லதாகவும் ஆகிவிடுவது உண்டு.

இதில் சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்?

கெட்டதை நினைத்துச் செய்து, கெட்டதாகவே முடிந்த வகையைச் சேர்ந்தவள் அவள்.

மனித மனத்தின் உணர்ச்சிகள் குறித்து நம் முன்னோர் சொன்னதைப் போல, இன்றுவரை வேறு யாரும் சொல்லவில்லை. அவர்கள் நமக்குத் தந்த உணர்ச்சிமயமான கதாபாத்திரம்தான், சூர்ப்பணகை.
சூர்ப்பணகையைப் பற்றி அறிமுகம் செய்யும்போது,

‘நீல மாமணி நிருதர்வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்’ என்கிறார் கம்பர்.

அதாவது, ‘இந்தச் சூர்ப்பணகை ராவணனை அடியோடு அழிக்கும் வல்லமை படைத்தவள்’ என்கிறார்.

சூர்ப்பணகை, ராவணனின் சகோதரி ஆயிற்றே! அவள் ஏன் தன் அண்ணனை அழிக்க வேண்டும்?

காரணம் இருக்கிறது. சூர்ப்பணகையின் கணவன் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. அவள் பிள்ளையின் பெயர் சாம்பன். ஒருமுறை, போர் வெறியில் இருந்த ராவணன், வித்யுஜ்ஜிஹ்வாவைக் கொன்றுவிட்டான். தங்கையின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த திருமாங்கல்யத்தைத் தரையில் வீசிவிட்டான். சூர்ப்பணகை கொதித்துப் போனாள்.

‘கணவர் இறந்துவிட்டார்; அதுவும், கூடப் பிறந்தவனே கொன்று விட்டான்’ என்பது தெரிந்ததும், அண்ணன் ராவணனை அந்தகனிடம் அனுப்பிவிட வேண்டும் என அப்போதே முடிவு கட்டிவிட்டாள் சூர்ப்பணகை.

முடிவு கட்டினால் போதுமா? அதற்கான சக்தி வேண்டாமா?
மகன் சாம்பனை, தவம் செய்து சக்தி பெற்று வரும்படி அனுப்பினாள் சூர்ப்பணகை. அதன்படி, சாம்பன் தர்ப்பைப்புல் அடர்ந்த காட்டில் அமர்ந்து தவம் செய்தான். அவன் அங்கே அமர்ந்திருப்பது யாருக்குமே தெரியாதவண்ணம் அடர்த்தியும் உயரமுமாக வளர்ந்திருந்தன தர்ப்பைப் புற்கள். சாம்பனின் தவம் ஸித்தியாகும் நேரத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீசீதாப்பிராட்டி, ஸ்ரீலட்சுமணன் ஆகியோர் வனவாசம் வந்தார்கள். அப்போது, காட்டில் தர்ப்பைப்புல் அறுக்கப்போன லட்சுமணன், புல்லோடு புல்லாகச் சேர்த்து, சாம்பன் தலையையும் அறுத்துவிட்டான்.

ஏற்கெனவே கணவனை இழந்த துயரத்தில் இருந்த சூர்ப்பணகை, மகனையும் இழந்தாள். மனம் உடைந்தாள். மகனைக் கொன்றவர்களையும் மணாளனைக் கொன்றவனையும் மோதவிடுவது என்று தீர்மானித்தாள்.

இதில், யார் இறந்தாலும் அவளுக்கு லாபம்தான்!
அதற்காகவே, மூக்கும் காதும் அறுபட்ட நிலையில், வேகமாக ஓடிப்போய் ராவணனிடம் சீதையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
சீதையின் அழகை விரிவாக வர்ணித்துவிட்டு, ”அண்ணா! சிவபெருமான் தன் உடம்பின் பாதியில் பார்வதியை வைத்திருக்கிறார். லக்ஷ்மிதேவியை மகாவிஷ்ணு, தன் வக்ஷஸ்தலத்தில் வைத்திருக்கிறார். பிரம்மதேவர் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்திருக்கிறார். வீரனே! நீ சீதாதேவியைப் பெற்றால், எப்படி வைத்து வாழப் போகிறாய்?” என்று கேட்டாள்.

‘வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி?’ – கம்பராமாயணம்.
மேலோட்டமாகப் பார்க்கையில், ‘உன் உடம்பின் பாதியிலா? வக்ஷஸ்தலத்திலா? நாவிலா?’ எனக் கேட்பது போலிருக்கிறதல்லவா? ஆனால், உட்பொருள் அதுவல்ல!

‘சீதையைக் கொண்டு வந்த பிறகு, நீ எங்கே வாழப் போகிறாய்? உனக்கு மரணம் நிச்சயம்!’ என்பதே சூர்ப்பணகையின் சிந்தனை.
‘ராவணா! நீ! சீதையைக் கொண்டு வந்தால் ஆகாயத்திலும் பூமியிலும், துயரமும் குற்றமும் உனக்கே உண்டாகும்’ என்பதே சூர்ப்பணகையின் உண்மையான வாக்கு.

அவளின் எண்ணம் போலவே, சீதையைக் கடத்திக்கொண்டு வந்த குற்றத்தால், மிகுந்த துயரத்தை அனுபவித்து, பிறகு இறந்தான் ராவணன்.

ஆக, சூர்ப்பணகை தன் முயற்சியில் வெற்றி பெற்று, எண்ணியதை முடித்துவிட்டாள்.

படித்ததில் பிடித்தது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: