ஆஸ்துமாவும் பெண்களும்

பரிமளாவுக்கு வயது முப்பது.
தனியார் கம்பெனியில் வேலை செய்யும் கணவன்,
பள்ளி செல்லும் இரு பையன்கள் என்று சின்னக் குடும்பம்!

நடுத்தரக் குடும்பம் என்பதால், வீட்டு வேலைகளை
அவளேதான் செய்வாள். அன்றும் வழக்கம்போல அனைத்து
வேலைகளையும் அவளேதான் செய்தாள். அன்று… துணி
துவைப்பது, வீட்டை ஒட்டடை அடிப்பது என்று நிறைய
வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள்.

வேலையை முடித்துவிட்டு மாலை ரெஸ்ட் எடுக்கலாம்
என்று அவள் அமர்ந்த போதுதான் பிரச்னை ஆரம்பித்தது.

பரிமளாவுக்கு திடீரென மூச்சுத் திணறுவது போல இருந்தது.
இயல்பாக மூச்சு விட முடியவில்லை. ஒரு மூக்கு முழுவதும்
அடைத்து விட்டது போன்ற உணர்வு.

பக்கத்து வீட்டுக்காரர்கள் தந்தார்கள் என்று ‘நேஸல் ட்ராப்ஸ்’
விட்டுப் பார்த்தும் குணம் கிடைக்கவில்லை. அவ்வப்போது
மயக்கம் வருவது போல வேறு இருந்தது.

டாக்டரிடம் காட்டினாள். ‘‘உங்களுக்கு தூசு அலர்ஜி இருக்கிறது.
அதனால் இனிமேல் முடிந்தவரை தூசு பக்கமே போகாதீர்கள்’’
என்றார் டாக்டர்.

பரிமளாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை அவளுக்கு
அலர்ஜி என்று எதுவும் ஏற்பட்டதில்லை. ‘‘கவலைப் படாதீர்கள்.
தூசுப் பக்கம் போக நேர்ந்தால், மூக்கை மூடுவது போல் மாஸ்க்
போட்டுக் கொள்ளுங்கள்!’ என்று ஆலோசனையும் தந்தார்
டாக்டர்.

அலர்ஜிதான் ஆஸ்துமா நோய்க்கு அடிப்படை என்கிறார்கள்
டாக்டர்கள். அதனால் அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்துவிட்டால்
ஆஸ்துமா வராது. நோய்க் காரணியை இனம் கண்டுபிடித்து
விட்டால், நோயைத் தடுத்து விடலாம் அல்லவா?

சரி… இந்த அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன?
குறிப்பாக எந்த வயதினருக்கு இதனால் அதிகம் பாதிப்பு உண்டாகும்?
அதிலும் பெண்கள், இந்த அலர்ஜியினால் எந்தளவுக்குப்
பாதிக்கப்படுகிறார்கள்..? என்ற கேள்விகளுடன் அலர்ஜி நிபுணர்களை
அணுகினோம்..

‘‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை
மட்டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி
ஏற்படாமல் தவிர்த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல
ஆஸ்துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு
ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு
பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வரலாம். முன்பெல்லாம்
பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும்
அதிகமில்லாத சூழல்… ஆனால் இப்போது அப்படி இல்லையே!…
பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்கள்.
ஆண்களின் வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

அதனால் ‘எக்ஸ்போஷர்’ அதிகமாகிறது. தூசும் மாசும் அதிகமான
சூழல், டென்ஷன், வெளியுலக வேலை அழுத்தம், உடல்
ரீதியிலான பல அசௌகர்யங்கள் என்று பல விஷயங்கள் இதற்குக்
காரணமாக அமைகின்றன.

சீயக்காயும் அலர்ஜியாகலாம்!

பெண்களுக்குத் தலை முடி அதிகம் என்பதால், அழுக்கும் தூசும்
போகத் தலைக்குச் சீயக்காய் பவுடர் பயன்படுத்தி தேய்த்துக்
குளிப்பார்கள். அந்த சீயக்காய் பல பெண்களுக்கு அலர்ஜிக்கு
வழிவகுப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அதிலும் எளிதில் அலர்ஜிக்கு ஆளாகிறவர்களாக இருந்தால் வேறு
பிரச்னையே வேண்டாம்!…

தூசும் முக்கிய காரணம்

சிலருக்கு சாதாரணமாக தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தம்
செய்யும் போது கூட அந்த தூசுவினால் அலர்ஜி ஏற்படும். தூசு
மூக்கினுள் சென்றவுடன் தும்மல் வரும். சிலருக்கு ஒரு தும்மலோடு
நின்று விடும். சிலர் தொடர்ந்து தும்மல் போடுவார்கள்.

மூக்கிலிருந்து தண்ணீர் வழிய ஆரம்பிக்கும். அந்த அறிகுறிகளைத்
தொடர்ந்து இருமல், வீஸிங் போன்ற தொல்லைகள் இருந்தால்
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சமையல் நெடியும் கூட!

அதேபோல், சமையல் செய்யும்போது வாணலியிலிருந்து கிளம்பும்
நெடி கூட சிலருக்கு அலர்ஜி ஏற்படக் காரணமாகிறது!… நீண்ட நேரம்
அடுப்படியில் நிற்பது, தாளிக்கும் போது உடனே மேலெழும்பும்
வாசனை கலந்த புகை இவையும் மூக்கில் ஒருவித எரிச்சலை
உண்டாக்கும். இதுவும் கூட அலர்ஜிக்கான காரணம்தான்.

மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பவர்களுக்கும் புகை மூலம்
பிரச்னை வரும். வாணலியிலிருந்து கிளம்பும் நெடியை விட
ஆபத்தானது இந்தப் புகை மண்டலம். அப்படியே, நுரையீரலில்
போய்த் தேங்கிவிடும். இது கூட ஆஸ்துமா ஏற்படக் காரணம்தான்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! ஆஸ்துமாவை குணமாக்க
முடியாது!.. ஆனால் அந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டுப்படுத்த
முடியும். அதனால் முடிந்தவரை இந்த நோய் வருமுன்பே
காப்பதுதான் நல்லது.’’ என்கிறார் டாக்டர் நரசிம்மன்.

பெண்களுக்கு ஒரு வித்தியாசமான காரணம்….

‘‘பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்பட அவர்களின் உடல்சார்ந்த
காரணமும் ஒன்று. அதில் முக்கியமானது Atopy எனப்படும்
ஒவ்வாமை இயல்பு!’’ என்கிறார் அலர்ஜி_ஆஸ்துமா நிபுணர்
டாக்டர் கே.ஏ. மோகனதாஸ்.

‘‘இந்த ஒவ்வாமை இயல்புடைய பெண்களுக்கு மகப்பேறு காலத்தில்
ஆஸ்துமா ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இவர்களில்கூட மூன்றில்
ஒரு சதவீத பெண்களுக்குத்தான் குழந்தை பிறந்த பின்பு ஆஸ்துமாவின்
கடுமை குறையலாம். ஆனால் கர்ப்பம் தரிக்கும்போது முதல் முறையாக
உண்டாகும் ஆஸ்துமா மறுமுறையும் வரத்தான் வாய்ப்புகள் அதிகம்!

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவீன கஷ்டங்களான பரபரப்பு,
வேலைப்பளு போன்றவற்றாலும், மன அழுத்தம், உணர்ச்சி வசப்படுதல்
போன்ற காரணங்களாலும் பல பெண்கள் மறுபடியும் இந்த அலர்ஜி
ஆஸ்துமா தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்! ’’ என்கிறார் டாக்டர்
மோகனதாஸ்.

‘‘ஆஸ்துமா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதை வெளியில்
சொல்வதில்லை. இது தவறு. சிலர் தங்களுக்கு வந்திருப்பது
ஆஸ்துமாவே அல்ல என்று ‘அண்டர் எஸ்டிமேட்’
பண்ணியிருப்பார்கள். இதுவும் தவறு. நோய்க்கான அறிகுறிகள்
தெரிந்தால் தாமதிக்காமல், உடனே டாக்டரிடம் போய்விட வேண்டும்.

(உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது?
விவரங்கள், பாக்ஸ் மேட்டரில்)

எப்படி டெஸ்ட் செய்து கொள்வது?

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கும் அறிகுறிகளை நீங்கள் உணரும்
பட்சத்தில் அதை முறைப்படி டெஸ்ட் செய்துகொள்ள நவீன
பரிசோதனைகள் நிறைய வந்துவிட்டன.
‘இன்ஜெக்ஷன் இம்யூனோதெரபி!’ என்ற டெஸ்ட் எந்த வயதினருக்கும்
செய்யலாம்.

‘பல்மோனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ என்ற பரிசோதனையின் மூலமும்
ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.

என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?

மருந்துகள் உபயோகிப்பதை விட கருவிகள் பயன்படுத்தி
‘ஆஸ்துமா’வை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.
முடிந்தவரை எந்தவிதமான இன்ஃபெக்ஷனும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். அநாவசிய மனபயம், பரபரப்பு போன்றவை
அலர்ஜிக்குக் காரணமாகிவிடும். அதனால் தவிர்க்கலாம்.

ஸ்டீராய்டு இன்ஹேலர்கள் நல்ல பயன் தருபவை. மாத்திரைகள்,
கேப்ஸ்சூல் என்று நேரடியாக உட்கொள்வதை விட, இந்த
இன்ஹேலர்கள் நல்லது.

இன்ஹேலர்களில் பல வகை… ரோட்டோஹேலர், அக்யூஹேலர்,
டயோஹேலர், நெபுலைஸர் என்று இருக்கின்றன. இவற்றில்
ரோட்டோஹேலரில் உலர்ந்த நிலையிலேயே மருந்தை
(DRY POWDER) வைத்துப் பயன்படுத்த முடியும்.

மாத்திரைகள் உடனடியாக பலனைத் தராது என்பதால், இந்த
இன்ஹேலர் முறையே சிறந்தது.

கவனியுங்கள்… அலர்ஜிக்கான பரிசோதனை என்பது ஆஸ்துமா
தடுப்பு முறைகளில் முக்கியமானது! எந்த வகையான அலர்ஜி
என்பதை வைத்தே நோயின் தீவிரத்தை அறியலாம்.

தக்காளி, எலுமிச்சை, வேர்க்கடலை, பச்சைப் பயிறு உள்ளிட்ட
உணவு வகைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். இதனால்
ஆஸ்துமா ஏற்பட்டிருக்கிறதா என்பதை இந்தச் சோதனை மூலம்
கண்டுபிடித்து விட முடியும்.

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
அதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன் தரும்.
கடுமையான பயிற்சிகள் அவசியமில்லை.
யோகாவுடன் கூடிய பயிற்சி நல்லது.

முடிந்தவரை தூசிக் காரணிகளிடமிருந்து விலகியே இருங்கள்.

எங்கெங்கே தூசுகள் இருந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்?

டி.வி.யிலும், அதன் ஸ்டாண்டுகளிலும் அடிக்கடி தூசு பரவி நிற்கும்.
ஏ.சி. ஃபில்டர்களில் தூசுப் படலங்கள் படிந்திருக்கலாம்.
தலையணைகளில் கூட தூசுப் பூச்சிகள் (DUST MITES)
இருக்கும். இவை கண்களுக்குத் தெரியாது. தூங்கும் போது மூக்கின்
வழியே உள்ளே சென்று அலர்ஜியை ஏற்படுத்தும்.
அதனால் அவ்வப்போது தலையணை உறையை சுத்தம் செய்வது
அவசியம்.!

முக்கியமாக…

எக்காரணம் கொண்டும் டாக்டரின் அட்வைஸ் இல்லாமல்
நீங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள். காரணம்…
மாத்திரையின் அளவும், வீரியமும் உங்களுக்குத் தெரியாது
என்பதுதான்.

உங்கள் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால்,
முதலிலேயே நீங்களும் ‘செக்அப்’ செய்து, உங்களுக்கு
அலர்ஜி ஆஸ்துமா இல்லை என்பதை உறுதி செய்து
கொள்ளுங்கள்.

————————————-
_ எஸ். அன்வர்
nantri-Kumutham-sinehithi

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: