–
பெண்கள் கல்வி கற்பதற்கே பெரும் தடை விதித்த நிலை
இன்று மாறி, பள்ளியின் ஒருநாள் முதல்வராக 14 வயது
மாணவியை நியமிக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல்
ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியையும் தருகிறது அல்லவா…
ஆண்களை விடவும் பல துறைகளில் பெண்கள் சாதித்து
வருவதற்கு அடிப்படையான காரணம் அவர்களுக்குக்
கிடைக்கும் கல்வி.
பள்ளிக்கூடங்களே பெண்களின் வாழ்க்கைப் பயணத்தை
சரியான திசைக்கு வழிகாட்டும். அந்தப் பள்ளியில்
மாணவிகள் கெளரவிக்கப்படும்போது, அவர்களின்
மகிழ்ச்சியில் பெருமிதமும் இணைந்துகொள்ளும்.
அது, அவர்களின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகி விடும்.
அப்படியான அரிய வாய்ப்பைத்தான் 14 வயது மாணவி
பிரியங்கா மர்மு பெற்றிருக்கிறார்.
ஜார்ஹண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்க்பம் மாவட்டத்தின்
துர்கூ எனும் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார்
பழங்குடி பிரிவைச் சேர்ந்த பிரியங்கா. படிப்பிலும் சக
மாணவர்களோடு பழகுவதிலும் சிறப்பானவர் பிரியங்கா.
அவரைத்தான் அந்தப் பள்ளியின் ஒரு நாள் முதல்வராக
மாற்றியுள்ளனர்.
காலையில் பள்ளிக்கு வந்த பிரியங்காவை பள்ளியின்
முதல்வர் சுனில் யாதவ் தனது அறைக்கு அழைத்துச் சென்று
பள்ளியின் முதல்வர் இருக்கையில் அமரச் செய்தார்.
அப்போது, உடனிருந்த கிராமத்தலைவர் லஷ்மி சரண் சிங்
பிரியங்காவுக்கு வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும்
கூறியுள்ளார். பள்ளியின் முதல்வர் எனும் அடையாளமாக
சிவப்பு நிறத்தில் வின்னர் பெல்ட் (sash) அணிவித்தனர்.
காலையில் பள்ளியின் மைதானத்தில் நடக்கும் பிரேயரை
முன்னின்று நடத்தினார் பிரியங்கா. அப்போது
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பேடி பச்சாவ், பேடி படாவ்
திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
‘சமூக மாற்றத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்கும்
முயற்சிகளுக்கு மாணவர்களான நாமும் உதவ வேண்டும்’
என்றார். பின், வகுப்புகள் தொடங்கியதும், பள்ளி வளாகத்தைச்
சுற்றி நடப்பவற்றை கவனித்தார்.
வகுப்புகள் நடக்கும் விதத்தைக் கண்காணித்தார்.
மாணவர்களின் பசியைப் போக்கும் உன்னத திட்டம் மதிய
உணவுத் திட்டம். பள்ளியில் மதிய உணவு சமையல் செய்யும்
இடத்திற்குச் சென்றார் பிரியங்கா. அங்கு, மாணவர்களுக்கு
பரிமாறத் தயாராக இருக்கும் சத்துணவை ருசித்துப் பார்த்தார்.
மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன் இப்படி ருசித்துப் பார்த்து,
குறைகள் இருக்கின்றனவா எனச் சோதிக்கும் நோக்கில்
பிரியங்காவின் இந்தச் செயல் இருந்தது. இதை பள்ளியின்
ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
சிங்க்பம் மாவட்டத்தின் துணை ஆட்சியர் சஞ்சய் குமார் பாண்டே
சிறப்பான இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மிகுந்த
ஆர்வமாக உள்ளார். மாதத்தில் ஒருநாள் பள்ளியின் முதல்வராக
அந்தப் பள்ளியின் மாணவர் ஒருவர் பதவி வகிக்க வேண்டும்
என்பதே இந்தத் திட்டத்தின் சிறப்பு.
சஞ்சய் குமார் இது குறித்த செய்திகளையும் செய்திகளை
வெளியிட்ட இணையத்தளங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில்
பகிர்ந்து வருகிறார். கிராம புறப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக
இவர் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.
பள்ளியில் படிக்கும் ஆயிரம் மாணவர்களில் ஒருவராக இல்லாமல்,
தனித்து தான் பார்க்கப்படுவதை ஒவ்வொரு மாணவரும் விரும்புவர்.
அப்படி தன்னை மாற்றும் எந்தவொரு விஷயத்திலும் ஆர்வத்துடன்
கலந்துகொள்வர்.
மேலும், ஒரு பள்ளி மாணவருக்கு பிடித்த விதத்திலும் இருக்க
வேண்டியது அவசியம். அப்போதே அவர்கள் விரும்பி படிக்கும் நிலை
அங்கு ஏற்படும். அந்தச் சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.
ஆசிரியர் – மாணவர் இருவரிடையே நல்ல நட்பை விதைக்கும்
இந்தத் திட்டத்தை மலர் கொத்து கொடுத்து வரவேற்கலாம்.
–
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதை
அமுல்படுத்தலாமே!
–
————————————
நன்றி- விகடன்
மறுமொழியொன்றை இடுங்கள்