மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களுள் மிகவும்
முக்கியமானது நரசிம்ம அவதாரம்.
இரண்யன் என்ற அசுரனை அழிப்பதற்கு மட்டுமல்லாமல்
தன்னுடைய பக்தன் பிரகலாதனின் வாக்கை
நிறைவேற்றவும் எடுக்கப்பட்ட அவதாரம் அது.
அந்த அவதாரக் கோலத்தை எம்பெருமான மீண்டும்
காட்டியருளிய தலமொன்று தமிழகத்தில் உள்ளது
உங்களுக்கு தெரியுமா?
அந்தக் திருக்கோலத்தை தரிசித்தவர்கள் யார் என்பதை
அறிவீர்களா?
–
ஒரு சமயம் காஸ்யப முனிவர், வருணன், சுகோஷன்
போன்றோர் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க விரும்பி,
மகாவிஷ்ணுவை நோக்கி தவமியற்றினர்.
அவர்களின் தவத்திற்கு மெச்சிய மகாவிஷ்ணு, பொதிகை
மலைச்சாரலில் மணிமுக்தா தீர்த்தத்திற்கு 40 கல்
தொலைவில் வடக்கே சித்ரா நதி பாய்கிறது.
அங்கே என்னை நோக்கி தவம் செய்க! உங்கள் விருப்பம்
நிறைவேறும்! என, அசரீரி வாக்காய் அருளினார்.
அதன்படி அவர்கள் தவம் புரிய, ஸ்ரீதேவி-பூதேவியருடன்
மகா உக்ரமூர்த்தியாக பதினாறு திருக்கரங்களுடன்
நரசிம்மர் திருக்கோலத்தில் காட்சி தந்தார் எம்பெருமான்.
அந்தத் தலம், நெல்லை மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர்.
–
————————————-
–
இங்கு இயற்கை எழில் சிந்தும் அழகிய சூழ்நிலையில்
அமைந்துள்ளது. அலர்மேல் மங்கா-பத்மாவதி சமேத
பிரசன்ன வேங்கடாசலபதி மற்றும் நரசிம்மப் பெருமாள்
ஆலயம்.
–
அருகே திருவாலீஸ்வரம் என்னும் புராணப் பெருமைமிக்க
சிவன் கோயிலும் உள்ளது.
–
சடாவர்மன் ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன் இப்பகுதியை
கி.பி.1101 முதல் 1124 வரை ஆட்சி செய்தான். அந்தக்
காலகட்டத்தில் அவன் இந்தக் கோயில்களில் இடிந்து
விழுந்த கற்சுவர்களை எடுத்து செப்பனிட்டு திருப்பணி
செய்த வரலாறை இங்குள்ள ஏழு கல்வெட்டுகள் மூலம்
அறிய முடிகிறது.
இதன் மூலம் இக்கோயில்கள் அவன் காலத்திற்கு முன்பே
கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிய வருகிறது.
சோழர் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர்
என்றும்; சோழ மன்னனின் மனைவியான அறிஞ்சிகை
பிராட்டியின் பெயரில் அறிஞ்சிகை பிராட்டி சதுர்வேதி
மங்கலம் என்றும்; குறு மறைநாடு, முனை மோகர் பாகூர்
போன்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் பாகூர் என்பது மருவி பாவூர் ஆனது.
–
சடையவர்மன் ஸ்ரீவல்லப தேவன், சோணாடு கொண்டருளிய
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன்
திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரமப் பாண்டியன்,
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் போன்ற
மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்
பட்டுள்ளன.
–
———————————-
–
வேங்கடாசலபதி பெருமாளின் திருநாமம் முனைகடி
விண்ணர், முனைகடி விண்ணகர், மோகராழ்வார் என்றும்;
அருகிலுள்ள சிவாலய மூலவரின் திருப்பெயர்
திருக்காவலீஸ்வரமுடைய நாயனார் என்றும் அழைக்கப்
பட்டுள்ளன.
முனைகடி மோகர் விண்ணர் என்றால், போரில் எதிரிகளை
வெல்வதில் விருப்பம் உள்ளவர் என்று பொருள்.
மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன்,
தான் ஆட்சிக்கு வந்த ஏழாவது ஆண்டில்
இத்திருக்கோயிலுக்கு நித்ய பூஜைகளுக்கு நிலங்கள்
வழங்கிய செய்திகளும் கல்வெட்டுகள் மூலம் தெரிய
வருகிறது.
–
தமிழகத்தில் மாலிக் கபூரின் படையெடுப்பினால் பல
கோயில்கள் சிதைக்கப்பட்டபோது, இப்பகுதியை ஆட்சி
செய்த சுந்தரபாண்டிய மன்னர், இந்த வேங்கடாசலபதி
அர்ச்சாவதார மூர்த்தியை பாதுகாக்கும் பொருட்டு
சிலகாலம் பூமியில் புதைத்து வைத்ததாகவும்;
பின்னர் இவர் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்
பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
–
கிழக்கு நோக்கிய வாழில் வழியாக நுழைந்தால் மகா
மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கர்ப்பகிரகம்
அமைந்துள்ளது. அங்கே அழகே உருவான அலர்மேல்
மங்கா-பத்மாவதி சமேத பிரசன்ன வேங்கடாசலபதியின்
தரிசனம் கிட்டுகிறது. இவர் மிகுந்த வரப்பிரசாதி.
அவருக்குப் பின்புறம் தனிக்கோயிலில் மேற்கு நோக்கி
நரசிம்மப் பெருமாள் பதினாறு திருக்கரங்களுடன் சேவை
சாதிக்கிறார். இவர் குடைவரைக் கோயில் அமைப்புடன்
காணப்படுவதால், பல்லவர்கள் காலத்தில் இக்கோயில்
கட்டப்பட்டிருக்கலாம் என்றும்; கோயில் கட்டடக்கலையைப்
பார்த்தோமானால் அது சோழர் காலத்தை நினைவுபடுத்துவது
போலவும் உள்ளது. என்றாலும், இக்கோயில் உருவாக்கப்பட்ட
காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடமுடியவில்லை.
–
———————————–
–
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில்
சாயரட்ச வேளையில் சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்குமாம்.
ஆகையால் பக்தர்கள் அப்பகுதிக்குச் செல்ல மிகவும்
பயப்படுவார்களாம். பிற்காலங்களில் நரசிம்மப் பெருமாளுக்கு
இளநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகே
சுவாமி சாந்தஸ்வரூபியானாராம்.
–
இவரது சன்னதிக்கு எதிரே நரசிம்ம தீர்த்தம் எனப்படும்
மாபெரும் தெப்பக்குளம் அமைந்துள்ளது. நரசிம்மரின்
உக்ரகத்தைத் தணிக்கும் பொருட்டே இத்தீர்த்தம்
உருவாக்கப்பட்டதாம்.
விவசாயம் செழித்துக் காணப்படும் இப்பகுதியில் கோயில்
கொண்டுள்ள பிரசன்ன வேங்கடாசலபதியையும்
நரசிம்மரையும் தரிசித்தால் பதினாறு பேறுகளும் கிட்டுமாம்.
உக்ரகோலத்தில் நரசிம்மர் காணப்படுவதால், மந்திரபூர்வமாக
அவர் இதயத்தில் மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து
ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
தரிசனத்திற்காக காலை 7.30 முதல் 10.30 மணி வரை;
மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்
இவ்வாலயத்தில் சித்திரை மாதம் நரசிம்ம ஜெயந்தி,
புரட்டாசியில் திருவோண நட்சத்திர பூஜை, சனிக்கிழமைகளில்
சிறப்பு பூஜை, ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தில்
நரசிம்மருக்கு மாலை 4.30 முதல் 6.00 மணி வரை சிறப்பு
அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தின்போதும் வேங்கடாசலபதி
பெருமாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகிறது.
மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இந்த ஆலயம்
காலமாற்றத்தால் பழுதடைந்து போக தற்போது பக்தர்களின்
பெரும் முயற்சியால் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன.
இந்த இறைபணியில் நீங்களும் பங்கு கொண்டு பெருமாளின்
பரிபூரண ஆசியைப் பெறலாமே!
தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில்
10-வது கி.மீ.யில் உள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ.
தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.
–
—————————
– மு. வெங்கடேசன்
குமுதம் பக்தி
மறுமொழியொன்றை இடுங்கள்