தவமும், திருநீறும்!

E_1491901895.jpg
விபூதி என்ற சொல்லுக்கு, ஐஸ்வர்யம் என்று பொருள்;
அதனால் தான் விபூதியை, திருநீறு என்கிறோம்.

விபூதியின் பெருமை குறித்து, ‘மந்திரமாவது நீறு…’ என,
பதிகமே பாடியிருக்கிறார், திருஞான சம்பந்தர்.
தமிழில் உள்ள சதக நூல்கள் பலவும், திருநீற்றின்
மகிமையை விரிவாக பேசுகின்றன.

ஒருசமயம், சிவபெருமானிடம், பார்வதி தேவி, ‘பெருமானே…
விபூதி பூசுவதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்க
காரணம் என்ன?’ என்று கேட்க, தேவிக்கு, சிவபெருமான்
கூறிய கதை இது:

பிருகு வம்சத்தில் பிறந்த வேதியர் ஒருவர், கோடை காலத்தில்,
பஞ்சாக்கினி மத்தியிலும், பனிக்காலத்தில், குளிர்ந்த நீரிலும்
மற்றும் மழைக்காலத்தில் ஆகாயத்தை நோக்கி நின்றபடியும்
கடும் தவம் செய்தார்.

பசி எடுத்தால், அதுவும், மாலைப் பொழுதில் மட்டும்
சிறிதளவே உணவு உண்டு வந்தார். அவருடைய கடுந்தவத்தை
கண்டு, பறவைகள் எல்லாம் பரிவோடு, பழங்களை கொண்டு
வந்து, அவர் முன் வைத்தன; சிங்கம் மற்றும் புலி போன்ற
கொடிய விலங்குகள் கூட, எவ்விதமான அச்சமுமின்றி, அவர்
முன் சஞ்சரித்தன.

நாளாக நாளாக, பழங்களைக் கூட தவிர்த்து, இலைகளை
மட்டுமே உண்டார். அதனால், அவருக்கு, பர்ணாதர் என்ற
பெயர் உண்டானது. பர்ணம் என்றால், இலை.

ஒருநாள், பர்ணாதர், தர்பை புல்லை பறிக்கும் போது,
அவருடைய கையிலிருந்து, ரத்தம் ஒழுகத் துவங்கியது.
அதைப் பார்த்த பர்ணாதர், ‘ஆஹா… என் தவம் கை கூடியது…’
என்று ஆனந்தக் கூத்தாடினார்.

அதைக்கண்டு, பறவைகளும், விலங்குகளும் பயந்து ஓடின.

சிவபெருமான் ஒரு அந்தணரைப் போன்று அவர் முன் சென்று,
‘பர்ணாதா… ஏன் இப்படி குதிக்கிறாய்; தவம் கைகூடிவிட்ட
அகங்காரமா… அடக்கத்தினாலேயே பிரம்மா, தவசீலர்களான
முனிவர்கள் எல்லாம், பெரும்பேறு பெற்றிருக்கின்றனர்
என்பது உனக்கு தெரியாதா…’ என்றார்.

சிவன் வாக்கை, செவியிலேயே வாங்கவில்லை, பர்ணாதர்.
அதைக்கண்ட சிவபெருமான், தன் திருக்கரங்களால்,
பர்ணாதரின் கையை தீண்டினார். அடுத்த வினாடி,
பர்ணாதரின் கையில் வழிந்த ரத்தம் நின்று, அமிர்தம் வழியத்
துவங்கியது; சில வினாடிகளில், அதுவும் நிற்க, அமிர்தத்திற்கு
பதிலாக, திருநீறு வழியத் துவங்கியது.

அந்த அற்புதத்தை கண்டு வியந்து, அந்தணரின் திருவடிகளில்
சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, ‘சுவாமி… தாங்கள் யார்;
தயவுசெய்து உண்மையை கூறுங்கள்…’ என, வேண்டினார்.

அவருக்கு காட்சியளித்த சிவபெருமான், ‘பர்ணாதா…
உன் தவம் கண்டு மகிழ்ந்தேன்; அதன் காரணமாகவே,
இவ்வாறு விபூதியை உருவாக்கினேன்; நீ, கணாதிபர்களில்
ஒருவனாக ஆவாய்…’ என, வரம் கொடுத்தார்.

இவ்வரலாற்றை, பார்வதிதேவியிடம் விவரித்த சிவபெருமான்,
‘தேவி… தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே
மேன்மை பெறுகின்றனர்…’ என, விபூதியின் மகிமையை,
விரிவாக கூறினார்.

தவம் செய்பவர்களை தேடி, தெய்வம் வந்து அருள் புரியும்
என்பதை விளக்கும் வரலாறு இது!

——————————
பி.என்.பரசுராமன்
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: