அனைத்து தோஷமும் போக்கும் ஆமணக்கு எண்ணெய் தீபம்!

காவிரிக் கரை தேவாரத் தலங்களுள் ஒன்று, திருக்கொட்டையூர்.
தற்காலத்தில் ‘கொட்டையூர்’ என்று குறிப்பிடப்படும் இத்தலம்
திருநாவுக்கரசரால் பாடித் தொழப்பட்ட தொன்மை மிக்கது.

‘நீர் கரை புரண்டு ஓடும் காவிரியின் கரையோரம் குடிகொண்ட
கோமானே!’ என்று இத்தலத்து ஈசனைப் போற்றுகின்றார், நாவுக்கரசர்.

‘மடவார் திரை புரளும் காவிரிவாய் வலஞ்சுழியின்
மேவிய மைந்தன் கண்டால்
கொடியாடு நெடுமாடக் கொட்டையூர்
கோடீச்சரத்து உறையும் கோமான் தானே’
என்பது திருநாவுக்கரசரின் பதிகப் பாடல்.

இத்தலத்திற்கு ‘கொட்டையூர்’ எனப் பெயர் வரக் காரணம்?
சத்திய ரதி என்ற மன்னன் வடதேசத்தில் இருந்தான். அவன் மகன் கருசி.
ஒரு சாபம் காரணமாக பேய் உருவம் பெற்ற அவனது உருவத்தைக் கண்டு
எல்லோரும் அஞ்சினர்.

அவன் தனதுபேய் உருவம் மாறி மனித உருவம் பெற வேண்டி,
சிவபெருமானை வழிபட்டு வந்தான். சிவபிரானின் கட்டளைப்படி
இத்தலத்திற்கு வந்து, இங்கு ஏரண்ட முனிவர் என்பவரால் உருவாக்கப்பட்ட
தீர்த்தத்தில் முழுகி, எழுந்து, இத்தலத்தில் ஆமணக்குச் செடியின் கீழ்
சுயம்புவாக எழுந்தருளியிருந்த கோடீஸ்வரப் பெருமானை ஆமணக்கு
எண்ணெயில் தீபம் ஏற்றி வைத்து, தொழுது வந்தான்.

அவனது பக்தியின் பயனாக, அவனது பேய் உருவம் மறைந்து, மனித உருவம்
பெற்றான்.

‘கொட்டை முத்து’ என வழங்கப்படும் ஆமணக்குச் செடியே இங்கு தல
விருட்சமாக இருப்பதாலும், ஆமணக்கு எண்ணெயால் மட்டுமே இங்கு
தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுவதாலும் இத்தலம் ஆமணக்கின்
பெயரால் கொட்டையூர் எனப் பெயர் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

ஏரண்ட முனிவரின் திருஉருவம் இக்கோயில் மூலவர் சன்னதிக்குச் செல்லும்
முன்பாக வடக்கு நோக்கிய நிலையில் உள்ளது. ஏரண்டம் என்றால்
ஆமணக்குச் செடி. அந்தச் செடியின் அடியில் அமர்ந்து தவம் செய்ததால்
இவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. ஆத்ரேய மகரிஷி என்பதே இவரது
இயற்பெயர்.

இன்றும் இவ்வாலயத்துள் ஆமணக்குச் செடிகள் நெடிது உயர்ந்து வளர்ந்து
நிற்கின்றன.பெரிய, பெரிய அகல் விளக்குகளில் ஆமணக்கு எண்ணெய்
வார்த்து தீபம் ஏற்றுவதை இன்றும் இக்கோயிலில் பார்க்கிறோம்.

எல்லாம் பக்தர்களின் கைங்கர்யம், இப்படி தீபம் ஏற்றுவதால் பூர்வ ஜன்மப்
பாவங்கள், பித்ரு தோஷ சாபங்கள் உள்பட அனைத்து தோஷங்களும் நீங்கும்
என்பது காலங்காலமாய்த் தொடர்ந்து வரும் நம்பிக்கை.

இந்த முனிவரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இன்று அமுதக் கிணறு எனும்
பெயரால் வழங்கப்படுகிறது. இந்த நீரில் புனிதத் தன்மை கருதி பக்தர்கள்
இதைத் தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். இந்தக் கிணற்றுநீரின்
மகிமையால் அழகிய வடிவம் பெறலாம் என்றும் நம்புகின்றனர்.

கிழக்குப் பார்த்த கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் நுழைவாயிலின்
தென்புறத்தில் கோடி விநாயகப் பெருமான் கருணை வடிவமாகக் காட்சி
தருகிறார். பிராகாரத்தில் முருகனுக்கு தனிச்சந்நதி உள்ளது. இத்தலத்து
முருகப் பெருமானை கொட்டை பெருமானே என்று போற்றிப் பாடியுள்ளார்
அருணகிரிநாதர்

இங்குள்ள நவகிரகங்கள் அவரவர்களுக்குரிய வாகனங்களில் ஆரோகணித்து
இருக்கிறார்கள். இதுவும் ஓர் அரிய காட்சி.

கருவறையில் மூலவர் கோடீஸ்வரர் அருள்பாலிக்கிறார். சோழமன்னனுக்கும்
ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சியளித்ததால் இந்த திருநாமமாம்.
ஆதியில் ஆமணக்குச் செடியின் கீழ் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால்
இவரது பாணம் முழுவதும் ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி
கொட்டை கொட்டையாகக் காணப்படுகிறது. இந்த லிங்கத்தை பத்ரயோகி
முனிவர் வழிபட்டு பேறு பெற்றதாக புராணச் செய்தி உள்ளது.

அதென்னவோ தெரியவில்லை. இந்த ஆலயத்துள் எல்லாமே கோடிதான்.
இங்குள்ள ஈசனின் பெயர் கோடீஸ்வரர். அம்பிகை பெயர் – கோடீஸ்வரி
மற்றும் பந்தாடு நாயகி. அருணகிரிநாதரால் போற்றி வழிபடப்பட்டவர்.
இங்குள்ள முருகப்பிரான் அவர் பெயர் – கோடி முருகன். சண்டிகேசுரர் ௦-
கோடி சண்டிகேசுரர். இந்த ஆலயத்திற்கும் கோடீச்சுரம் என்ற பெயருண்டாம்.

ஈசன் மட்டுமல்லாது இங்குள்ள அம்பிகையும் பிரார்த்தனைப் பலிதம்
செய்யும் சக்தி மிக்கவளாம். தெற்குநோக்கிய தனிச் சந்நதியில் அம்பாள்
எழுந்தருளியள்ளார். காண்பவர்க்கு பரவசம் அளிக்கும் அருட்கோலம்.
அதிலும் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத விநோதத் தோற்றத்தில்
இந்த அம்பிகை காட்சியளிக்கிறார். எப்படி? காலால் பந்தை உதைப்பது
போன்ற தோற்றம்! அதனாலேயே இந்த அம்பிகைக்கு பந்தாடும் நாயகி
என்று பெயர்.

பந்து என்பது இங்கே நமது பாவங்களைக் குறிக்கும் என்றும் அதனால்
விளைந்த துன்பவங்களை இந்த அம்பிகையை வழிபட்டால், அவள்
உதைத்து விரட்டி பக்தர்களுக்கு அருள் செய்வாள் என்பதும் உட்பொருளாம்.
விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கம் பெறுவதற்காக இந்த
அம்மனை வழிபட்டுச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

சிவாலயத்திற்குரிய அனைத்து விழாக்களும் இங்கு கடைப்பிடிக்கப்
படுகின்றன. குறிப்பாக திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசியில் அம்பு
போடும் உற்சவம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழா நாட்கள்
விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

இங்குள்ள ஈசனையும், அம்பாளையும் நம்பிக்கையுடன் வழிபடுவோர்க்கு
தொழில், வியாபாரம், தானம் – புண்ணியம் ஆகியவை பன்மடங்காக
பெருகும் என்பது நம்பிக்கை!

எங்கே இருக்கு: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கொட்டையூர்
உள்ளது.

தரிசன நேரம்: காலை 8-12; மாலை 4-8

———————————————————–

– ஆர்.சி. சம்பத்
குமுதம் பக்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: