தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!2016-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகின.
இதில் கமல், அஜித் நடித்த படங்களைத் தவிர எல்லா முக்கிய
நடிகர்களின் படங்களும் வெளியாகின.

மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், மிஷ்கின், செல்வராகவன் படங்கள்
வெளியாகவில்லை. வெளியான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்
பட்ட நடிகர்கள், இயக்குநர்களில் நம்பிக்கையை தகர்த்தவர்கள் குறித்து
பார்க்கலாம்.

பாலா

‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர்.
ஆனால், ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக்
கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார்.

ரத்தம் தெறித்தல், குரல்வளை நெறித்தல், வினோதமான பழிவாங்கும்
படலம்தான் பாலாவின் படம் என்று காலப்போக்கில் மாறிப்போனது.

தாரை தப்பட்டை, கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை உண்மையும்
உருக்கமுமாக சொல்வார் என நம்பி தியேட்டருக்குள் போனால் இந்த
முறையும் ரசிகர்களின் குரல்வளையைக் கடித்து துப்பிதான் பாலா
அனுப்பினார்.

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவை இருக்கிறதோ இல்லையோ
அதைக் காட்டிலும் அதிகமான குரூரம், வன்முறை, குரோதம்
போன்றவற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க
வேண்டும் என்பதில் பாலா உறுதியாக இருப்பது எதனால் என்பதை
இன்னமும் ரசிகர்களால் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ
முடியவில்லை.

‘தாரை தப்பட்டை’ பாலாவுக்கு ஏழாவது படம். ஆனால், எண்ணிக்கையை
மனதில் கொள்ளாமல் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக
பாலாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின்
முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கிய
சினிமா படைப்பாளி காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை
உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

——————————————
ஜீவா

2014-ம் ஆண்டு ஜீவா நடித்த ‘யான்’ திரைப்படம் சரியாகப் போகாததால்,
2015-ம் ஆண்டு ஓய்வெடுத்துக் கொண்டார். 2016-ம் ஆண்டில் ஜீவா
நடிப்பில் ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ என்று மூன்று
படங்கள் வெளியாகின.

பொழுதுபோக்கு அம்சம் என்ற பெயரில் மூன்று படங்களில் ஜீவா
நடித்தாலும் அந்தப் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
‘போக்கிரி ராஜா’ படத்தின் ஐடியா சரியாக இருந்தாலும் அதற்கான
மெனக்கெடல், மேக்கிங் முழுமையாக இல்லை.

‘திருநாள்’ வழக்கமான மசாலா படம் தான். நயன்தாரா இருந்ததால் கூடுதல்
கவனம் இருந்தது. ஆனால், கமர்ஷியல் படத்துக்கான அம்சங்கள் போதுமான
அளவில் இல்லை.

‘கவலை வேண்டாம்’ படத்தின் இரட்டை அர்த்த வசனங்கள் ஜீவாவின் படமா
இது? என்ற சந்தேகத்தை வரவழைத்தது. படத்தின் நாயகன், நாயகி, நாயகன்
அப்பா, நாயகி அம்மா, துணை கதாபாத்திரங்கள் என ஒட்டுமொத்த நடிகர்கள்
குழுவும் இரட்டை அர்த்த வசனம் பேசிய படம் ‘கவலை வேண்டாம்’ படமாகத்
தான் இருக்கும்.

ஜீவாவிடம் அபரிமிதமான நடிப்பாற்றல் உள்ளது. ‘ராம்’, ‘கற்றது தமிழ்’,
‘ஈ’ படங்கள் மூலம் பக்குவமான நடிப்பை ஜீவா வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் வணிக வெற்றியே தன்னை
கிராமங்களில் கொண்டு சென்றதாகக் கருதுகிறார்.

அதனாலேயே அதுபோன்ற படங்களில் விரும்பி நடிக்க ஆயத்தமானார்.
ஆனால், அது ஒரு நடிகனுக்கான அடையாளத்தை மறக்கடிக்கச் செய்தது
என்பதை ஜீவா புரிந்துகொள்ள வேண்டும்.

‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ என்று சொன்ன வசனம்தான் ரீச் ஆகி இருக்கு.
மற்ற படங்களை டிவியில் பார்த்துதான் பாராட்டுகிறார்கள் என்று ஒரு
பேட்டியில் ஜீவா சொன்னார். உண்மையில் டிவியில் ஒளிபரப்பான ‘ராம்’,
‘கற்றது தமிழ்’, ‘ஈ’ படங்கள் தான் ஜீவா எனும் நடிகனை ரசிகர்கள் மனதில் பதியச்
செய்திருக்கிறது.

அவருக்கான களம் அதுதான் என்பதை ஜீவா உணர்ந்து 2017-ம் ஆண்டில்
வெற்றிவாகை சூடுவார் என நம்புவோமாக. அதற்காகவே ஜீவாவின் 25-வது
படத்துக்காகக் காத்திருப்போம்.

————————————————-

விஷால்

‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ என்று கான்செப்ட் கமர்ஷியல்
படங்களில் நடித்து கவனம் பெற்ற விஷால் ‘மருது’ படத்தில் ஓரளவு
சிராய்ப்புகளுடன் தப்பித்துக் கொண்டார். ஆனால்,
‘கத்தி சண்டை’யில்தான் சிக்கிக் கொண்டார்.

காதலிக்கிறேன் என்று துரத்துவது, இல்லாத பொய் சொல்லி நம்ப வைப்பது,
வில்லன்களைப் பறந்து பறந்து புரட்டியெடுப்பது, டூயட் ஆடுவது என
வழக்கமும் பழக்கமுமான கதா பாத்திரம்தான் விஷாலுக்கு. சாகச
ஹீரோ வுக்கான பிரயத்தனங்களைச் செய்யும் விஷால், ஏன் கற்பனைக்
கதையிலும் கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்?

இதுவும் சாகசத்தில் ஒரு பகுதி என்று நினைத்துவிட்டாரா? பொறுப்பான
பதவியில் இருப்பவர் இனியாவது சறுக்காமல் நடந்து கொள்கிறாரா?
என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

————————————————–

விக்ரம் பிரபு

‘கும்கி’ மூலம் அறிமுகமான சிவாஜியின் பேரன். துவக்க காலத்தில் கதைத்
தேர்வில் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே என்று புருவம் உயர்த்த
வைத்தவர்.

‘கும்கி’, ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களே அதற்குச் சான்று.
ஆனால், அதை இந்த வருடம் ‘வாகா’, ‘வீரசிவாஜி’படங்கள் மூலம் தவிடு
பொடியாக்கி விட்டார் விக்ரம் பிரபு.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர் விக்ரம் பிரபு. அர்ஜூன், விஜயகாந்த்
போன்றவர்களே வி.ஆர்.எஸ். வாங்கிய வீர வசனப் படலத்தில் ஹீரோ விவாதப்
பரீட்சை செய்து, மாபெரும் வில்லனை வார்த்தைகளாலேயே மனம் திருந்தச்
செய்வதுதான் ‘வாகா’.
ஹீரோவின் சாகசங்கள் பார்த்து ரசிகர்கள்தான் சோதனைக்கு ஆளானது
தனிக்கதை.

‘வீரசிவாஜி’ பொதுமக்களிடம் கொள்ளையடித்த பணத்தை அவர்களுக்கே
திருப்பித் தரப் போராடும் இளைஞனின் கதை. திரைக்கதையில் உள்ள
ட்விஸ்ட் பலன் அளிக்காமல் பொறுமை இழக்கச் செய்ததுதான் மிச்சம்.
இனி விக்ரம் பிரபு முழித்துக்கொள்வாரா என்பதை அடுத்தடுத்த படங்களில்
பார்க்கலாம்.

———————————————-

ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஹீரோவாகி வணிக ரீதியான வெற்றியைப் பெறுவது,
நடிப்பில் – நடனத்தில் முன்பை விட முன்னேறி இருப்பது மகிழ்ச்சி
அளிக்கும் செய்தி.

ஆனால், பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ஜி.வி.பிரகாஷும், இரட்டை
அர்த்த வசனங்களும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம்.

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாதிரியார்
ஆவது போன்ற மத நம்பிக்கை சார்ந்த காட்சிகளில் காமெடியைப்
புகுத்தியிருப்பது ரசிக்க வைக்கவில்லை.

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் அப்பம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி
ஜி.வி.பிரகாஷ் செய்யும் சேட்டைகள் அவர் மீதான பிம்பத்தை சுக்குநூறாக
உடைக்கிறது.

ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக டீன் ஏஜ் இளைஞர்களின்
உணர்வுகளைத் தூண்டிவிடுவதும், அதை அப்படியே படத்தின் ரசிகர்களாக
மாற்ற நினைப்பதும், மலினமான ஆபாச நகைச்சுவையை விதைப்பதும்
பேராபத்தை விளைவிக்கும். இதை ஜி.வி.பிரகாஷ் உணர வேண்டும்.

——————————————————-
-உதிரன்
நன்றி- தி இந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: