‘கைதி எண் 150’ இறுதிநாள் படப்பிடிப்பில், இயக்குநர் வி.வி.விநாயக் நடித்த காட்சியை நாயகன் சிரஞ்சீவி இயக்கியிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கத்தி’ தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தின் மூலம் சிரஞ்சீவி மீண்டும் திரையுலகுக்கு திரும்ப இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சிரஞ்சீவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தை வி.வி.விநாயக் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ராம்சரண் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் வி.வி.விநாயக் கவுரவ தோற்றத்தில் நடிக்கும் காட்சியை சிரஞ்சீவி இயக்கினார். ‘கத்தி’ ரீமேக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த காட்சியை அப்படியே வி.வி.விநாயக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன், சிரஞ்சீவி இயக்கிய படப்பிடிப்புதளக் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

தி இந்து