வெங்கட் பிரபுவின் ‘சென்னை-600 028 – II’ – சினிமா விமரிசனம்

chennai28-2-2

வருடம் 2007. தமிழ் சினிமாக்களின் மீது பொதுவான அவநம்பிக்கை
கொண்டு நான் சலிப்புற்றிருந்த காலம். நண்பர்கள் சந்திப்பொன்றில்
ஒருவர் கேட்டார். ‘சென்னை -600 028′-ன்னு ஒரு படம் வந்திருக்குதே,
பார்த்தீங்களா?’. அவருடைய ரசனை பொதுவாக என் அலைவரிசையுடன்
ஒத்துப் போகும் என்பதால் மறுநாளே சென்று பார்த்தேன்.

தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை
புத்துணர்ச்சியுடன் கையாண்டிருந்த வெங்கட் பிரபுவின் அந்த முயற்சி
எனக்குப் பிடித்திருந்தது.

அத்திரைப்படத்தில் கதை என்று பெரிதாக ஏதும் இருக்காது.
சமகால இளைஞர்களின் கலாய்ப்பு மனநிலையைக் கச்சிதமாக
எதிரொலிக்கும் சம்பவங்கள், வசனங்கள். இதனுடன் சற்று
சென்ட்டிமென்டைக் கலந்து ரகளையான பாடல்கள், சுவாரசியமான
காட்சிப்படுத்துதல்கள், இளமைப் பாய்ச்சலுடன் கூடிய எடிட்டிங் என்று
ஒரு கொண்டாட்ட மனநிலையைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்தியது
அந்தத் திரைப்படம்.

சென்னையின் பிரத்யேகமான வழக்குச் சொற்களும் பின்னணியும்
சுவாரசியத்தை ஏற்படுத்தின. ‘Cult’ அந்தஸ்தை எட்டும் படமாகவும்
அமைந்தது.

Sports drama-வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்
என்றால் எளிய பின்னணியிலிருந்து கிளம்பும் ஒரு திறமையான
விளையாட்டு வீரன், அத்துறையில் உயரிய அங்கீகாரத்தை
அடைவதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் தங்களை
வருங்கால சச்சின்களாக நினைத்துக் கொண்டு சாலையோரங்களில்
ஆடப்படும் Street Cricket-ஐ மையமாக வைத்துக்கொண்டு
அமெச்சூரான கிரிக்கெட் குழுவின் பின்னணியோடு ஒரு ஜாலியான
திரைப்படத்தை வெங்கட் பிரபுவால் தர முடிந்தது ஆச்சர்யமான விஷயம்.

ஆனால் ‘மங்காத்தா’ என்கிற பெரிய வெற்றியைத் தவிர
வெங்கட் பிரபுவின் இதர திரைப்படங்கள் பிற்பாடு சுவாரசியமாக
அமையவில்லை. அதிலும் கடந்த திரைப்படமான ‘மாசு என்கிற
மாசிலாமணி’ பயங்கரமான தோல்விப்படமாக அமைந்தது.

இந்த நிலையில்தான் தன்னுடைய பழைய ஆயுதமான ‘சென்னை-28’-ன்
திரைக்கதையைக் காலத்திற்கேற்றவாறு இன்னமும் மெருகேற்றித்
தந்திருக்கிறார் வெங்கட் பிரபு. இறங்கி அடித்து ஆடிய அவரது
தன்னம்பிக்கையான முயற்சியும் நோக்கமும் வீண் போகவில்லை.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ஏறத்தாழ ரகளையான
சுவாரசியத்துடனும் இளமையான, சரி.. ஒகே.. சற்று வயதான இளமைக்
கொண்டாட்டத்துடனும் அமைந்துள்ள படமாக உருவாகியுள்ளது.
ஒரு Sequel -ஐ முந்தைய திரைப்படத்தின் ஒத்திசைவுடன் எப்படி
சுவாரசியப்படுத்த முடியும் என்பதற்கு வெங்கட் பிரபுவின் இந்த முயற்சி
சிறந்த உதாரணம்.

***

முதல் பாகத்தில் திருமணமாகாத இளைஞர்களாக வந்த அதே டீம்,
இதில் இளம் அங்கிள்களாக களம் இறங்கியிருக்கிறது. கிரிக்கெட்
பேட்டை பிடித்த கைகளில் இப்போது காய்கறிப் பையும் ரேஷன்
கார்டும். வாழ்க்கை எனும் பயணத்தில் விதி செலுத்தியவாறு
அவரவர்களின் பயணங்களில் மிதந்து செல்கிறார்கள்.

மனைவிகளின் பிடுங்கல்களினால் கிரிக்கெட்டையும் நண்பர்களையும்
பெரும்பாலும் மறக்க முயல்கின்ற ஒரு வாழ்க்கை.

இந்த நிலையில், சில பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக
சாத்தியமாகும் நண்பன் ரகுவின் காதல்திருமணத்துக்காக நண்பர்கள்
அனைவரும் தேனிக்குச் செல்கிறார்கள். அங்கு ஏற்படும் ஒரு சிக்கலினால்
நண்பனின் திருமணத்தில் தடையேற்படும் சூழல் ஏற்படுகிறது.

அதிலிருந்து வெளிவர வேண்டுமென்றால் அவர்கள் மறுபடியும் கிரிக்கெட்
ஆடியே தீர வேண்டுமென்கிற நிலைமை.

அது என்ன சிக்கல், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள், ரகுவின்
திருமணம் நடந்ததா என்பதைச் சிரிப்பும் கும்மாளமுமாக சில லாஜிக்
மீறல்களுடன் ரகளையான நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பாகம் உங்களுக்கு பிடித்தது என்றால் இரண்டாம் பாகமும் நிச்சயம்
பிடிக்கும் என்பது மாதிரியான திரைக்கதை. முதல் பாகத்தின் சென்னையின்
பின்னணியையே உபயோகிக்காமல் இரண்டாவதில் தேனியாக
மாற்றியிருப்பது புத்திசாலித்தனம்.

***
எஸ்.பி.பியின் வாய்ஸ்ஓவரோடு தொடங்கும் முதல் பாகத்தின் அதே
பாணியில் இரண்டாவது பாகமானது வெங்கட் பிரபுவின் குரல்
விளக்கத்தோடு தொடங்குகிறது. இந்தியாவை ஒன்றிணைக்கும்
விஷயமாக முதல் பாகத்தில் கிரிக்கெட்டை சுட்டிக் காட்டிய விஷயம்,
இரண்டாவதில் கடந்த வருட வெள்ளத்தில் மக்களிடம் தன்னிச்சையாக
வெளிப்பட்ட மனித நேயமாக மாறியிருக்கிறது. இப்படிப் படமெங்கிலும்
சுவாரசியமான தீற்றல்கள். இரண்டாம் பாகத்தில் இல்லாதவர்களை
சுவாரசியமான விளக்கத்துடன் கழற்றி விட்டிருப்பது சிறப்பு.

வெங்கட் பிரபுவின் உருவாக்க பாணி ஒருவகையில் பின்நவீனத்துவ
காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் முயற்சியாக சொல்லலாம். சுயபகடி
முதற்கொண்டு பல பிம்பங்களை சரமாரியாகக் கிண்டலடிக்கிறார்;
கலைத்துப் போடுகிறார். ‘உன் தங்கச்சியை உசார் பண்ணா இப்படி
சும்மா இருப்பியாடா’என்று முதல் பாகத்தில் ஏழுமலையிடம் வெடிக்கும்
பழனி, இரண்டாம் பாகத்தில் உண்மையிலேயே அப்படிச் செய்திருப்பதாக
இயக்குநர் விளக்கும்போது, உணர்ச்சிமயமான காட்சியை, அதிலிருந்து
எழும் தீவிரமான உணர்வுகளை, அடுத்த திரைப்படத்தில் தானே
கலைத்துப் போடும் விதத்தை ரசிக்க முடிகிறது.

படம் முழுவதும் வெறுமனே நகைச்சுவைச் சம்பவங்களின்
கோர்வையாக இருந்தால் சலிப்புத்தன்மை ஏற்பட்டுவிடும்
என வெங்கட் பிரபுவுக்குத் தெரிந்திருக்கிறது. இனிப்புகளின்
நடுவே சிறிது காரத்தை வைப்பதைப் போல நகைச்சுவைக்
காட்சிகளின் இடையே தீவிரமான உணர்ச்சிகள் வெளிப்படும்
சம்பவங்களை இணைப்பதின் மூலம் சமன் செய்கிறார்.

முதல் பாகத்தில் பழனியின் சகோதரியை கார்த்திக்
காதலிப்பதால் நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்னை போன்று,
இரண்டாவது பாகத்தில் ரகுவின் திருமணம் நடக்குமா, நடக்காதா
என்கிற சிக்கலை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

***

பொதுவாக நம் அனைவருக்குமே நண்பர்களினால் இணைந்த குழு
ஒன்றின் உறவு இருக்கும். அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி
குணாதிசயங்கள், மனோபாவங்கள், பழக்கங்கள் இருக்கும். அந்தக்
குழுவில் இவையெல்லாம் பயங்கரமாக கலாட்டா செய்யப்படும்.

தீவிரமான விஷயங்கள் முதற்கொண்டு அனைத்துமே நகைச்
சுவையாக்கப்படும். இதுபோன்றதொரு குழுவின் இயக்கத்தை மிக
இயல்பாகக் காட்சிப்படுத்துவதின் மூலம் ஒவ்வொரு பார்வையாளரும்
தங்கள் நண்பர்களை அவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதை
வெங்கட் பிரபு திறமையாக உருவாக்குகிறார்.

பொதுவாக திருமணமான பிறகு இடம்பெயர்வதால் பெண்கள் தங்களின்
இளம்வயது நட்புகளை இழக்க நேர்வது ஒரு கலாசார சோகம்.
ஆனால் இது பெண்களுக்கானது மட்டுமல்ல. பொருளாதார தேடல் சார்ந்த
சிக்கல்கள், மனைவி ஏற்படுத்தும் கட்டுப்பாட்டு எல்லைகள் உள்ளிட்ட
பலகாரணங்களால் ஆண்களுக்கும் இந்தச் சிக்கல் நேர்கிறது. இந்த நடை
முறை விஷயத்தை நகைச்சுவை கலந்த தீவிரமான காட்சிகளுடன்
இரண்டாவது பாகத்தில் சொல்கிறார் வெங்கட் பிரபு.

விஜய் வசந்த் தன்னுடைய சென்ட்டிமென்ட் கிரிக்கெட் பேட்டை
சிறுவர்களிடம் இழந்து சோக கீதம் வாசிக்கும் முதல் பாகத்தின்
தொடர்ச்சியை இரண்டாம் பாகத்திலும் சுவாரசியமாக
இணைத்திருப்பது அதிர வைக்கும் நகைச்சுவை. இரண்டு கிரிக்கெட்
போட்டிகள் முதல் பாகத்தின் அதே சுவாரசியத்தோடு காட்சிப்படுத்தப்
பட்டுள்ளன.

ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தும் (சமகால ரூபாய் நோட்டு பிரச்னையை
ஒருவரியில் சாமர்த்தியமாக இணைத்திருப்பது சுவாரசியம்) சிவாவின்
உபதொழில், சமீபத்திய தமிழ் திரைப்படங்களை இணைய வீடியோவின்
வழியாக விமரிசனம் செய்தல், இண்டர்நேஷனல் ‘அவதார்’
திரைப்படத்தை உள்ளூர் ‘வியட்நாம் காலனி’ திரைப்படத்தோடு ஒப்பிட்டு
ஜேம்ஸ் கேமரூனுக்கே அவர் சவால் விடும் காட்சிகள் போன்றவை நல்ல
அலப்பறை. ஓர் அயல் திரைப்படத்தின் சாயல் லேசாக வந்தாலே
‘அது காப்பி’ என்று உற்சாகமாக கூவும் அரைகுறை விமரிசகர்களை
ஜாலியாக பழிதீர்த்துள்ளார் வெங்கட் பிரபு.

ஆனால் இதைப் பதில் வன்மமாக அல்லாமல் காமெடி கலாட்டாவாகச்
செய்திருப்பதால் ரசிக்க முடிகிறது.
‘டாஸ்மாக் பார்’ காட்சிகளை தம் திரைப்படங்களில் தொடர்ந்து
வைக்கிறார் என்று குற்றச்சாட்டை எதிர்கொண்ட எம்.ராஜேஷே, தம்
சமீபத்திய திரைப்படத்தில் அவற்றைத் தவிர்த்திருப்பதின் மூலம் திருந்தி
விட்டபோது, வெங்கட் பிரபு அடங்குவதாயில்லை. படத்தில்
எதற்கெடுத்தாலும் எவராவது ‘மச்சி.. ஓப்பன் தி பாட்டில்’ என்று
உற்சாகமாக கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். அதிலும் பிரேம்ஜி
குடிவெறியராக இருக்கிறார். சந்தானபாரதி, கங்கைஅமரன்
போன்றவர்களையெல்லாம் இந்த குடி விளையாட்டில் இழுத்துப்
போட்டிருப்பது அராஜகம்.

கிராமத்து வில்லனாக வரும் ‘வைபவ்’வின் நடிப்பு கச்சிதம்.
முதல் பாகத்தின் சிறப்புக்கு யுவனின் பாடல்கள் முக்கியமான
காரணமாக இருந்தன. அந்த மாயாஜாலம் இரண்டாம் பாகத்தில்
நிகழவில்லை. ‘சொப்பன சுந்தரி.. யாரு வச்சிருக்கா’ என்பது மட்டுமே
அதிரடியாக கவர்கிறது. ஆனால் அந்தக் குறையை பின்னணி இசையில்
சமன் செய்திருப்பது ஆறுதல்.

முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி
தொடங்கும்போது சில சறுக்கல்கள் நிகழ்ந்து சலிப்பூட்டுகின்றன.
ஆனால் உடனே சுதாரித்துக்கொண்டு அந்த சுவாரசியம் தக்க
வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் end credits முடிவதற்குள்ளாக
திரையரங்கம் காலியாகி விடுவதுதான் பொதுவான வாடிக்கை. ஆனால்
ஜாக்கிசான் திரைப்படங்களுக்குப் பிறகு bloopers-ஐ பார்வையாளர்கள்
பொறுமையாக நின்று ரசிப்பது வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில்
தான் நிகழ முடியும் என்று தோன்றுகிறது.

மூன்றாம் பாகமும் வரக்கூடிய சாத்தியத்துடன் இதன் முடிவு
அமைந்திருப்பது மகிழ்ச்சி. இளைய மனதினருக்கான ஒரு நல்ல
கேளிக்கைத் திரைப்படம் இது.

——————————————By சுரேஷ் கண்ணன்
தினமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: