வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்!

vm2
அரசியல்வாதிகளின் வேண்டுதல்களை நிறைவேற்றும்
அருள்மிகு கந்தசுவாமி முருகன் கோயில் மதுராந்தகம்
தாலுகாவில் உள்ள செய்யூரில் அமைந்துள்ளது.

பிரணவத்தின் பொருள் தெரியாது திகைத்த பிரம்மனை
முருகவேள் விலங்கிட்டுச் சிறையிட்டுத் தாமே சிருஷ்டித்
தொழில் செய்தார். அப்பொழுது திருமால், இந்திரன்,
தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் முருகனிடம் வந்து
பிரம்மனைச் சிறையினின்று விடுவிக்க முறையிட்டனர்.

அவ்வித பெருமை வாய்ந்த முருகவேள் வீற்றிருக்கும்
சிறப்புத்தலம் செய்யூர்.

சூரபத்மனைப் போரில் வெற்றிகொள்ள முருகப்
பெருமானுக்கு உதவிய பைரவரின் பூதவேதாள கணங்கள்,
வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தரும்
திருக்கோலத்தைக் காண விரும்பி பைரவரிடம் கோரிக்கை
வைத்தன.

பைரவர் முருகனிடம் சொல்ல, ஈசன் ஆட்சீஸ்வரராய் அருளும்
அச்சிறுப்பாக்கம் அருகிலுள்ள சேயூரில் அனுதினமும் ஈசனை
ஆராதிக்க உள்ளதாகவும் அங்கு பூதவேதாள கணங்கள்
வந்தால் அவர்களுக்குத் துணைவியருடன் காட்சி
கொடுப்பதாகவும் கூறினார்.

செய்யூரில் அர்த்தஜாமத்தில் இத்தல கந்தசுவாமியும்,
பைரவரும் 27 நட்சத்திர பூதவேதாள கணங்களும்
சோமநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபட்டு
வருகின்றனர். அவர்களது சிவபூசைக்கு இடையூறு நேராமல்
காப்பதற்காகவே பிரம்மாவும் விஷ்ணுவும்
துவாரபாலகர்களாக ஈசனின் கருவறை சந்நிதியில்
உள்ளனர்.

ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ்ந்த செய்யூர்
கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கருவறை,
அந்தராளம், மகாமண்டபம், வெளிப்பிரகாரம் என்று கோயில்
அமைப்பு கொண்டது. வலப்பக்கம் வள்ளி, இடப்பக்கம்
தெய்வானையுடன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற
திருக்கோலத்துடன் கிழக்கு நோக்கி ஸ்ரீ கந்தசுவாமி சேவை
சாதிக்கிறார்.

கருவறையின் வடபுலத்தில் கஜலட்சுமியும் தென்புறத்தில்
விநாயகர் சிலையும் உள்ளன, சூரியனும், பைரவரும்
கருவறைக்கு வெளியில் ஸ்ரீ கந்தசுவாமியை நோக்கியவாறு
உள்ளது சிறப்பு.

கருவறையின் வெளிச் சுவரைச் சுற்றி நிர்த்த ஸ்கந்தரும்,
பிரம்ம சரஸ்தாவும் (பிரம்மாவைச் சிறைப்படுத்திச் சிருஷ்டித்
தொழிலைச் செய்ததால் பிரம்மசாஸ்தா), பால ஸ்கந்தரும்,
சிவகுருநாதரும், புளிந்தரும் (வேடுவர்) என முருகன்
பஞ்சகோஷ்ட மூர்த்தியாக நின்று அருள் புரிகிறார்.

மூலவரின் நேர் எதிரில் வெளிப்பிரகாரத்தில் பெரிய மயில்,
கொடிமரம், பலிபீடமும் இவற்றின் எதிரில் நவக்கிரகங்களும்
விளக்குடன் கூடிய கல் தூணும் உள்ளன. 26 நட்சத்திர பூத
வேதாள கணங்கள் வெளிப்பிரகாரச் சுவர்களிலும்
1 நட்சத்திரப் பூத வேதாள கணம் மயில் மண்டபத்தின் மேற்
புறம் வெளியே மேற்குப்பார்த்த வண்ணமாக மொத்தம்
27 நட்சத்திரப் பூத வேதாள கணங்கள் உள்ளன. கந்தசுவாமி
கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகளில் நவசந்தி (9) விநாயகர்
அமைந்திருப்பது சிறப்பு.

ஸ்தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம் செட்டிகுளம்.
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, வைகாசி விசாகம்,
தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை விசு, சித்ரா
பௌர்ணமி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி சூரசம்ஹாரம்,
பங்குனி உத்திர திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை,
பங்குனி பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் சிறப்பானவை.

இத்திருத்தலத்தில் சத்துரு சம்ஹார திருசதி ஹோமம் அர்ச்சனை
செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.
27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதத்தின் தேய்பிறை
அஷ்டமி நாளில் பைரவர் பூத வேதாள பூசை மாலை
4.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.00 மணிவரை நடைபெறும்
27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 பூதவேதாள கணங்களுக்கும்
மலர்கள் தூவி பூசணிக்காயில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி
வழிபடுவர்.

பொரிகடலை, சாத உருண்டை, எள் மற்றும் பழம் படையலிடுவர்.
இந்த 27 நட்சத்திர வேதாள கணங்கள் வழிபாடு இந்தியாவில்
வேறெங்கும் இல்லாதது. இவ்வாறு, ஆறுமுறை தொடர்ந்து வழி
பட்டால் அரசியல்வாதிகள் தங்கள் எதிராளிகளை வீழ்த்தி
அரசியலில் வெற்றிக் கொடி நாட்டுவர்.

மனநிலைப் பாதிப்பிற்கு உள்ளானோரும், ஆட்டிசக் குறைபாடு
உடையோரும், கல்வியில் பின்தங்கியோரும், திருமணத்
தடையால் தவிப்போரும், செய்வினை தோஷம் உள்ளோரும்,
வாஸ்து தோஷத்தால் அவதிப்படுவோரும், பொருளாதாரச்
சிக்கலில் தவிப்போரும், மகப்பேறு இல்லாதோரும் இங்கு வந்து
வழிபட்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

குரு தோஷம் உள்ளவர்கள், குரு அருள் வேண்டுபவர்
சிவகுருநாதனை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி
வழிபடல் நன்று. பிரம்மசாஸ்தாவைப் புதன்கிழமைகளில் நெய்
தீபம் ஏற்றி வழிபட்டால் தலைவிதியை மாற்றி அமைப்பார்.

பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட செல்வம்
கொழிக்கும். மகப்பேறு வேண்டுவோர் 6 சஷ்டி திதிகளில்
முருகனுக்குப் பாலபிஷேகம் செய்து 6 தேய்பிறை அஷ்டமி
பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு, 48 நாள்கள் காலை மாலை
தொடர்ந்து வீட்டில் நெய் தீபம் ஏற்றி செகமாயைத் திருப்புகழ்
பாடலையும் பாம்பன் சுவாமிகளின் வேற்குழவி வேட்கையையும்
பாராயணம் செய்தால் குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும்
என்கிறார்கள் பக்தர்கள்.
பெரியாண்டவர் பூஜையும் இங்கு சிறப்பானது.

கார்த்திகை தீபத்தின் முந்தைய நாள் பரணி தீபமும்
கார்த்திகை அன்று மகாதீபமும் மறுநாள் நாட்டு தீபமும்
கல்தூண் விளக்கில் ஏற்றுவர். இதனைச் “சிவ தீபம்’ என்பர்.
திருக்கார்த்திகை அன்று மாலையில் மூலவர் கருவறை
விமானத்தின் மேல் ஆறு தீபங்கள் ஏற்றுவர்.
இதனை “முருக தீபம்’ என்பர்.

சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகள் பழைமை கொண்ட
இக்கோயிலுக்கு குலோத்துங்க சோழன் திருப்பணி செய்துள்ளான்.
அந்தகக்கவி வீரராகவ முதலியார், அருணகிரிநாதர்,
சேறை கவிராஜ பிள்ளை, ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகள், சிவப்பிரகாச
சுவாமிகள் சேயூர் முருகனைப் பாடிப் புகழ்ந்துள்ளது சிறப்பாகும்.

காலை 6.30 முதல் பகல் 11.30 வரையும் மாலை 5.00 முதல்
7.30 வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

சென்னை புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில்
100 கி.மீ தொலைவில் உள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்து
5 கி.மீ. தொலைவிலும்; சென்னை -திண்டிவனம் நெடுஞ்சாலையில்
மேல்மருவத்தூரிலிருந்து 22 கி.மீ தொலைவிலும்
செய்யூர் ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 94427 73285/ 94447 29512.

———————————————-
– முனைவர். எஸ். ஸ்ரீகுமார்
தினமணி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: