காத்திருக்கிறான் கமலக்கண்ணன்!


கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஸ்ரீகேசன்,
பத்மநாபன், தாமோதரன் என்பவைகள் திருமாலின் பன்னிரு
நாமாக்களாகும். இவைகள் நாம் நித்யகர்மாக்கள்
புரிவதற்காக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள “துவாதச நாமாக்கள்’
என அழைக்கப்படும்.

இவைகளிலோ அல்லது வேறு திருநாமங்களிலோ திருமால்
அர்ச்சாவதாரரூபியாய் கோயில் கொண்டிருந்தாலும்,
ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் திருமால் கோயில்
கொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகின்றது.

இந்த திருநாமம் திருமால் மனித வடிவில் அவதரித்து தன்
உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய “செளலப்பியம்’
எனச் சொல்லப்படும் எளிமை குணத்தின் அடையாளமாக
உண்டாகியது.

கலியுகம் காக்க வேண்டி வைகுண்டத்திலிருந்து பூவுலகம்
மேவி அடையாளம் ஏதுமின்றி திரிந்தவர்க்கு அவருடைய
வளர்ப்புத் தாயாகிய வகுளாதேவியால் சூட்டப்பட்ட பெயரே
“ஸ்ரீநிவாஸன்’ என்கின்றது வேங்கடேச புராணம்.

அந்த ஸ்ரீநிவாஸனே பின் திருவேங்கடவனாக திருமலையில்
கோயில் கொண்டு அருளுகின்றார். எனவே ஸ்ரீநிவாஸன்
என்ற திருநாமத்துடன் திருமால் கோயில் கொண்டுள்ள
அனைத்து தலங்களுமே சிறப்பானவை.

ஏனென்றால் திருவேங்கடவனின் சாந்நித்யம் அத்தலங்களுக்கும்
உண்டு. திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தினால்
அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும்.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி
வட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் உள்ளது பழைமையான
ஸ்ரீநிவாஸப்பெருமாள் ஆலயம். இந்த கிராமம் முன்பு
“பிரம்மபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கிருதயுகத்தில், படைப்புக் கடவுளான நான்முகன்
இத்திருத்தலத்திற்கு வந்து பெரியவேள்வி ஒன்று நடத்தியதால்
பிரும்மபுரம் எனப்பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது
கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டு வரும் தலவரலாற்றுத்
தகவல்.

————————————–

கல்வெட்டுத் தகவல்களின்படி, இப்பகுதியை ஆண்டு வந்த
சம்புவராய மன்னர் இத்தலத்திற்கு வந்து பெருமாளின்
அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத்
தானமளித்து நித்ய பூஜைகள் குறைவர நடந்திட உதவியதாகத்
தெரிய வருகிறது.

இவ்வூரில் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில்
பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காலிங்கராயன் என்பவர்
இக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக
தானம் அளித்த செய்தி குறிப்பிடப்படுகின்றது.

இக்கல்வெட்டு 17, 18- ஆம்நூற்றாண்டைச் சேர்ந்ததாக
விளங்குகின்றது. விஜயநகர காலத்து ஆலய கட்டட அமைப்பு,
சந்நிதி, தெருவீதிகளின் தோற்றம், நடைபெற்று வந்த
பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை
பறைசாற்றுகின்றன.

பார்வைத் திறனுடன் கண்களுக்கு சில சமயம் பருகும் திறனும்
உண்டு என்பதை நிரூபிப்பதுபோல் இத்தலத்து பெருமாளின்
திருமேனி அழகை பார்த்து பார்த்து ரசித்து கண்களால் பருக
வேண்டும். அபய, வரத ஹஸ்தத்துடன் சங்கு சக்ரதாரியாய்
ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின்
திருமேனி அவ்வளவு செளந்தர்யம் வாய்ந்தது! நினைவில்
வைத்தால் கனவில் காட்சி தருவது இந்த பங்கஜ நயனனின்
(கமலக்கண்ணன்) அற்புதக்கோலம்.

அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்கள் பாடியது
போல் இத்திருக்கோயிலில் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார்
மூலவரின் அருகிலேயே அமர்ந்து இருப்பதும் இத்திருத்தலத்திற்கு
சிறப்பம்சமாகும்.

மூலவருக்கு இணையாக உற்சவ விக்ரகங்களும் அழகுற
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதர்ஸன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார்
உற்சவமூர்த்தி அருமையாகவும், நுட்பமாகவும் வேலைப்பாடுகளுடன்
அமைந்துள்ளது. வைணவ ஆசார்யர் சுவாமிதேசிகர், பக்த ஆஞ்சநேயர்,
மூலவ மூர்த்திகளாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் இத்தலத்திற்கு
அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. பலி

பீடம், விளக்குத்தூண், முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை
என ஒரு பெருமாள் ஆலயத்திற்கு உரிய அனைத்து அம்சங்களுடன்
மிகவும் சிறப்பாக ஒரு காலத்தில் அமைந்து, மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்டு, விழாக்கோலம் கொண்டிருந்த இவ்வாலயம், காலப்
போக்கில் சிதிலமடைந்துவிட்டது. வழிபாடுகளில் தொய்வு நிலை
ஏற்பட்டது.

கடைசி பிரம்மோற்சவம் பத்து நாள்களுக்கு 1947-இல் நடந்ததையும்,
1994-ஆம் வருடம் அகோபில மடத்து 45-ஆவது பட்டத்து ஜீயர் இங்கு
விஜயம் செய்து ஸ்ரீமாலோல நரசிம்மருக்கு ஊஞ்சல் உற்சவத்தை
நடத்தியதையும் ஊர்மக்கள் நினைவு கூறுகின்றனர்.

திருவரங்கத்தில் நடைபெற்று வருவதுபோல் மட்டையடி உற்சவம்
ஒரு காலத்தில் இங்கு நடைபெற்று வந்ததாம்.

ஆலயம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாலும் பெருமாளின்
சாந்நித்யம் சிறிதும் குறையவில்லை. நலிவுற்ற ஆலயத்தை
பழைமை பொலிவுடன் மாற்றுவதற்கு ஊர்மக்கள்
ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் டெம்பிள் டிரஸ்ட், என்ற அமைப்பை
ஏற்படுத்தி திருப்பணி வேலைகளை துவக்கியுள்ளனர்.

தற்போது கொடிமரம் அமைத்துக் கொடுக்க ஓர் அன்பர்
முன்வந்துள்ளார். இதர பணிகள் நடைபெற்று ஒப்பற்ற ஓசூர் திருப்பணி
முழுவதும் நிறைவு பெறுவதற்கு திருமால் பக்தர்களின் உதவி அவசியம்
தேவையாக உள்ளது.

எதிர்வரும் நவம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பணி
வேலைகள் விரைவில் நடைபெற வேண்டி உற்சவமூர்த்திகளுக்கு
சிறப்பு திருமஞ்சனமும், கூட்டுப் பிரார்த்தனை, பஜனை, பாராயண
நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.

பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் திருவருள்
பெறலாம்.
இத்திருத்தலம் காஞ்சிக்கு தெற்கே 40 கி.மீ. தொலைவிலும்
வந்தவாசியிலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொடர்புக்கு: 98844 47570 / 74185 21400.

——————————————-

– எஸ்.வெங்கட்ராமன்
தினமணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: