ஒரு அமாவாசை நாள்!


வௌ்ளிக்கிழமை அமாவாசை தெரியுமில்ல மறக்காம
தர்ப்பணம் பண்ணிடுங்க மனைவி சொன்னதும் திக் என்றிருந்தது.

வியாழன், வௌ்ளி இரண்டு நாட்களும் மதுரையில் வேலை.
தயாரிப்பாளர் நிறுவனம் நடத்தும் பயிற்சி. ரெசிடென்ஷியல்
புரோகிராம் என்பதால் தங்கப்போவது அவர்களே ஏற்பாடு
செய்திருக்கும் ஹோட்டலில். கோயில் எங்கிருக்கோ, குளம்
எங்கிருக்கோ!

பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, வாழைக்காய், தேங்காய்,
வெற்றிலை பாக்கு, பழம் வாங்கிப்போய் அய்யக்கு தானம்
கொடுக்கணும். காலையில டிபன் வேண்டாம். தர்ப்பணம்
செய்தபின் ரோ சாப்பாடுதான் சாப்பிடணும் இலை போட்டு
தெளிவாக சொல்லிவிட்டாள்.

வியாழன் அன்று மதுரை போயாயிற்று. பெரிய ஹோட்டலில்
தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டு நாட்கள் முக்கியமான
பயிற்சி. நேரத்துக்கு ஆரம்பிப்பதில் குறியாக இருப்பார்கள்.

முதல்நாள் மாலை பயிற்சி முடியும்போது மறுநாள் ஆயத்தம் செய்து
எடுத்துவந்து பேசவேண்டிய வேலை ஒன்றை ஹோம்ஒர்க் ஆகக்
கொடுப்பார்கள். நாங்கள் டீலராக இருக்கும் அந்த தயாரிப்பாளர்
நிறுவனத்தில் பயிற்சிகள் அப்படித்தான் நடக்கும்.

இது வருஷத்துக்கு ஒருமுறை வருகிற மாளய அமாவாசை. வருஷம்
முழுக்கக் கொடுத்த பலன் கிடைக்கும். அப்பா, அம்மாவை,
முன்னோர்களை நினைச்சுக்க, அவர்கள் ஆசிர்வாதம் பெற அவசியம்
செய்யணும். வேலை இருந்திச்சு, நேரமில்லை அப்படி இப்படி என்று
விட்டுவிடாதீர்கள்.

பயிற்சி எப்போதும்போல டைட்டாகத்தான் இருந்தது. ஆறு மணிக்கு
முடியும் என்று பார்த்தால் ஏழரைக்குத்தான் முடித்தார்கள். காலையில்
ஆறு, ஆறரைக்குக் கிளம்பிப் போனால் பக்கத்தில் ஏதாவது ஒரு
கோயில் வாசலில் தர்ப்பணம் கொடுத்துவிடலாம்.
அது ஒன்றும் சிரமமாக இருக்காது. மதுரையில் இல்லாத கோயிலா!

முன்னதாகவே பொருட்கள் வாங்கி வைப்பதுதான் கடினமான வேலை
என்று அதற்காக ஹோட்டலில் டியூட்டி முடித்துக் கிளம்பிய ஒரு
பையனிடம் கூடுதலாகவே பணம் கொடுத்து, சுமதி சொல்லிய தானம்
கொடுக்கவேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கிவரச் சொன்னேன்.

அவன் இரவு ஏழு மணிக்கெல்லாம் வாங்கி வந்து விட்டான்.
முடிந்தது வேலை. அதன்பின் நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு, ஹோம்
ஒர்க்கும் முடித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு மொபைல் ஃபோனில்
அலாரம் வைத்துவிட்டு படுத்தாயிற்று.

இரண்டாம் நாள் பயிற்சி காலையில் 9 மணிக்கு ஆரம்பிக்கும்.
எட்டரைக்குள் தர்ப்பண வேலையை முடித்துக் கொண்டு வந்துவிட்டால்
பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு கிளாசுக்குப் போகச் சரியாக இருக்கும்.


—————————————————

சென்னையில் மாதாமாதம் மைலாப்பூர் போய் விடுவது வழக்கம்.
கபாலீஸ்வரர் கோயில் குளத்தங்கரையில் தர்ப்பணம் செய்து
வைக்கும் அய்யர்கள் பலர் குளத்தின் உள்படிக்கட்டுகளில் தள்ளித்
தள்ளி உட்கார்ந்திருப்பார்கள். சிலரிடம் செய்து கொள்ள வரிசைகூட
உண்டு.

குறிப்பாக லட்சுமிகாந்தம் அய்யர். தெலுங்குக்காரர்.
இரண்டு மகன்களும் வசதியாக ஹைதராபாத்தில் இருக்கிறார்கள்.
இவர் சென்னை வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றன என்று
சொல்லுவார். என் அப்பா வீட்டில் எல்லா ஹோமங்களுக்கும்
அவரைத்தான் அழைப்பார்கள்.

என்ன முதலியார், கொஞ்சநாளா ஏதும் ஹோமம் பண்ணலை?
என்று அப்பாவிடம் உரிமையோடு கேட்பார். அம்மாவிடமும் அம்மா
அம்மா என்று சகஜமாக பேசுவார். சகோதர, சகோதரிகள் எங்கள்
எங்லோரையும் அவருக்கு நன்றாகவே பழக்கம். நாங்கள் செய்யும்
வேலைகளும் அவருக்கு தெரியும். எங்களை எல்லாம் வா போன்னு
தான் அழைப்பார்.

நான் எப்போதும் காத்திருந்து அவரிடம்தான் மாதாந்திர தர்ப்பணம்,
வருடாந்திர திதி கொடுப்பேன். அவர் சொல்லுவதுதான் பணம்.
முந்நூறு கொடு, ஐந்நூறு கொடு என்பார். அப்பாவுக்கே கொடுப்பது
போல இருக்கும்.

இந்த அமாவாசைக்கு மதுரையில், அதுவும் மாளய அமாவாசையாமே.

ஹோட்டல் ரிசப்ஷன் கவுண்டரில் கேட்டதற்கு சரியான தகவல்
கிடைக்காதது மட்டுமல்ல, தர்ப்பணம் என்றால் என்னவென்றே
தெரியவில்லை.

ஆட்டோ ஏறி கோயில் குளத்துக்குப் போகலாம் என முடிவு செய்தேன்.
ஆட்டோக்காரர் மாரியம்மன் கோயில் குளத்தருகில் நிறுத்தினார்.
இறங்கிப் போனால் அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.
குளத்தைச் சுற்றிச் சிலர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

சற்று நகர்ந்து குளத்தின் உள்படிக்கட்டுகளில் பார்க்கலாம்
என்று போனேன். குளத்தில் சொட்டுத் தண்ணீர் இல்லாதது
மட்டுமல்ல, பல ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய சதுர வடிவிலான
குளம் முழுக்க பச்சைப் பசேல் என்று இருந்தது.

இளைஞர்கள் பலர் டீம்களாக ரப்பர் பந்து கிரிக்கெட் ஆடிக்
கொண்டிருந்தார்கள்.

மைலாப்பூரில் இந்நேரம் தெற்கு மாடவீதி மற்றும் கோவில்
கோபுர வாசல் பக்கம் எக்கச்சக்க கூட்டம் இருக்கும். இரு சக்கர
வாகனங்களும், பூ, பழம், அகத்திக்கீரை போன்றவற்றை
விற்பவர்களுமாக விசேஷ அமாவாசைகள் அன்று கூட்டம்
மொய்க்கும்.

மதுரையில் யாருக்கும் தெரியவில்லையே என்ற வியப்புடன்
கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழேகால். கையில் கணக்கும்பை,
பைக்குள் அரிசி முதலியன. மனத்தில் 9 மணி பயிற்சி நினைப்பு.

ஆட்டோ ஏறுமுன் நினைவு வநது மதுரையில் இருக்கும் உறவினர்
ஒருவரிடம் மொபைல் போனில் எங்கே கொடுக்கமுடியும் என்று
கேட்க அவர் தம்பி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போங்க,
சரபேஸ்வரர் சந்நதிக்கு பக்கத்தில் செய்வாங்க என்றார்.
நன்றி சொல்லிவிட்டு மீண்டும் ஆட்டோ ஏறினேன்.

மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் கம்பித் தடுப்பு பக்கவாட்டில்
போய், போலீசாரின் செக்அப் முடித்து வேக வேகமாக சரபேஸ்வரர்
சந்நிதியை விசாரித்துக் கொண்டு அங்கே போனால், திருவிழா
கூட்டம் போல பெரிய கூட்டம்.

பெரி தென்னங்கீற்றுப் பந்தல், அதனடியில் கல்யாணப் பந்தியில்
சாப்பிட உட்கார்ந்திருப்பவர்கள் போல் வரிசையாக ஆண்கள்,
சட்டையில்லாமல், அவர்கள் எல்லோர் முன்பும் ஒரு எவர்சில்வர்
தட்டு, அதில் மஞ்சள் கலந்த அரிசி, உடன் பூ, பழம், இத்யாதி.

அந்த வரிசைகளுக்கு நடுவில் நாமம் போட்ட ஒரு கறுப்பு குருக்கள்.
கையில் மைக் வைத்துக் கொண்டு மேலும் கீழுமாக நடந்தபடி
வாக்கியம் வாக்கியமாகச் சொல்ல, அமர்ந்திருப்பவர்கள் கண்களை
மூடியபடி அவர் சொன்னதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவர் பின்பும் மூன்று நான்கு பேர் என,
அவர்கள் முடித்ததும் அடுத்த பந்திக்கு அமரத் தயாராகப் பலர்
காத்திருந்தார்கள். அவர்கள் பக்கத்தில் சில பெண்கள்,
சிலர் கைகளில் கணவன் அல்லது மகன் கழற்றிக் கொடுத்த சட்டை,
பனியன் போன்றவை.

நானும், அமர்ந்திருக்கும் ஒருவர்பின் நெருங்கியடித்து நின்று
கொண்டு, எப்படி நடக்கும், எவ்வளவு நேரம் ஆகலாம் என்று
கேட்டேன்.

சீக்கிரம் முடிச்சுடுவாங்க என்றார். அவரே நீங்க புதுசா போய்
டோக்கன் வாங்கிடுங்க என்றார்.

டோக்கன் 20 ரூபாய். மணி பார்த்தேன். எட்டு பயிற்சி எடுப்பவரின்
முகம் நினைவுக்க வந்தது. தாமதமாக வரக்கூடாது என்றுதான்
ஹோட்டலில் தினம் 3000 ரூபாய்க்கு ரூம் எடுத்து தருகிறார்கள்.
தவிர எவர் தாமதமாக வந்தார் என்கிற விவரமெல்லாம் எங்கள்
அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள்.

அடுத்து என்ன நடக்கும்? என்று கேட்டேன். எள்ளும் தண்ணீயும்
இரைத்தபின், கற்பூரம் காட்டச் சொல்லுவார்கள். பின்பு எழுநது
நின்று, நிற்கும் இடத்திலேயே மூன்று முறை சுற்ற சொல்லுவார்.

பின்பு நாம் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு விடலாமில்லையா?

உட்காரலாம். அதற்குமுன் அவர் தர்ப்பணம் செய்து வைத்த
ஒவ்வொருவரிடமாக வருவார். வந்து நெற்றியில் மஞ்சளும்
அரிசியிலுமான திலகம் வைப்பார். அதன்பின் அவர்கள் விரும்பும்
தட்சணையை அவருடன் வரும் அந்த அம்மா நீட்டும் துணிப்பைக்குள்
போடவேண்டும். அதன்பின் அடுத்த பேட்ச் உட்காரவேண்டியதுதான்.

நமக்கு ஆரம்பிக்க இன்னும் எவ்வளவு நேரமாகும்.
ஒன்பதுக்கெல்லாம் முடிச்சிடலாம்.
என்னது ஒன்பதுக்குத்தான் முடியுமா?

கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டேன் போல, சிலர் திரும்பிப்
பார்த்தார்கள்.

யோசனையாக இருந்தது. இங்கிருந்து ஹோட்டல் போயச் சேரவே
அரைமணி நேரம் ஆகிவிடும் ஒன்பதுக்கு முடித்து, ஆட்டோ பிடித்து
கிளம்பி, டிபன் சாப்பிடாமல் போனால்கூட பத்து மணிக்கு
முன்பாகச் செல்ல முடியாது. ஒன் அவர் லேட்டா போச்சு.

முடிவெடுத்தேன். மனசில்லாமல்தான் வாசலை நோக்கி வந்தேன்.
கையில் அரிசியும் தேங்காயும் பழமும் கனத்தன.

வரும் வழியில் முன்னங்கால்களில் ஒன்றையும் பின்னங்கால்களில்
ஒன்றையும் லேசாக மாற்றி மாற்றி உயர்த்தியபடி யானை ஒன்று
நின்றிருந்தது. அருகில் தரையில் அமரந்திருந்த பாகன், கையில்
பிடித்திருந்த அங்குசத்தால் யானையின் துதிக்கையை மடக்கிப்
பிடித்துக் கொண்டிருந்தான்.

சில சிறுமிகள் பயம் கலந்த ஆர்வத்துடன் அருகே நின்றிருந்தார்கள்.
நான் அருகில் போனதும் என்னைநோக்கி அதன் தும்பிக்கை நீண்டது.
வாழைப்பழத்தை எடுத்து நீட்டினேன். வேகமாக வாங்கி வாய்க்குள்
போட்டுக் கொண்டுது.

அடுத்து முழு தேங்காயை எடுத்தேன்.

தேங்காயை இப்படி சாப்பிடாது தம்பி.
அங்கின வன்னிப் பிள்ளையா இருக்கார். அவருக்கு உடைச்சிடுங்க
என்றார் யானைப் பாகன்.

ஓட்டமும் நடையுமாக வன்னிப் பிள்ளையாரிடம் போய் தேங்காயைச்
சிதறு அடித்துவிட்டு, ஊதுபத்தியை ஏற்றிவைத்துவிட்டு நடந்தேன்.
பையின் இன்னமும் பொருட்கள் இருந்தன.

குருக்கள் யாராவது தென்பட்டால், அரிசி, பருப்பு, வெல்லம்,
வாழைக்காயைக் கொடுக்கலாம் என்றால் யாரையும் காணோமே.
கோயிலை சுத்தம் செய்யும் அம்மணி ஒருவரிடம் விரவம் சொல்லி
அவற்றைக் கொடுத்துவிட்டு வேகமாக வெளியேறினேன்.
அப்போது அவன் கையை யாரோ பிடித்து இழுத்தார்கள்.

இந்தாங்க தம்பி பிரசாதம் வாங்கிட்டுப் போங்க
ஒருவர் தொன்னையில் சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார்.

கையில் தொன்னையுடன் ஆட்டோ பிடிக்கும் வேகத்தில் கடிகாரத்தைப்
பார்த்தபடி வெளியே வந்தேன். வெயில் சுள் என்று அடித்தது.
வாசலில் ஒரு பெரியவர். அழுக்குச் சட்டை, அதைவிட அழுக்காக
பேன்ட், கனத்த கண்ணாடி, முகமெல்லாம் அரை குறையாக நரைத்த
தாடி, ஆனால் தலையும் தாடியும் படிய வாரப்பட்டிருந்தன.

தமக்குத்தாமே சத்தமாக ஏதோ பேசியபடி வந்த அவரைக் கண்டு
வேகமாக ஒதுங்கினார்கள் சிலர்.

சர்க்கரை பொங்கலை அவரிடம் கொடுத்துவிடலாம் என்றுபோனேன்.
தவிர, அமாவாசை அன்று யாருக்கேனும் சாப்பாடு போட வேண்டும்
என்பாள் சுமதி. இவருக்குப் பணம் கொடுக்கலாம் என்று முடிவுசெய்து,
அருகில் போய் தொன்னையையும் 50 ரூபாய் தாள் ஒன்றையும்
நீட்டினேன். அவர் வாங்குவாரா மாட்டாரா என்று சந்தேகமாக இருந்தது.

என்ன? என்றார் சத்தமாக.
பிரசாதம் என்றேன் தயங்கியபடி.

அடுத்து, இது என்ன? என்றார் ரூபாய் நோட்டைப் பார்த்து,
ரூபாய் என்றேன் மெல்ல. அவர் கிட்டப் போகாதீங்க என்றார் சைக்கிளில்
சென்ற ஒருவர்.

இரண்டையும் வாங்கிக் கொண்டு மௌனமாக இருந்தார்.
வாங்கிக் கொண்டதுவரை சரி என்று அருகில் நின்ற ஆட்டோ நோக்கி
வேகமாக நகரும்போது அவர் ஏதோ சத்தம் போடுவது போல தெரிந்தது.
அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

நின்ற இடத்தில் இருந்தபடியே என்னைப் பார்த்து நீடூழி வாழ்க
என்று சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார். அதன்பின்னர் ஹோட்டல்
போகும்வரை கடிகாரமே பார்க்கவில்லை.

—————————————————–

– சோம. வள்ளியப்பன்
கல்கி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: