உதவும் – கரை!

சிறுவயதில் நீ பெரியவன் ஆனவுடன் என்ன ஆகப்போறே?
என்ற கேள்விக்கு, கண்டக்டர் ஆவேன் என்று சிறு குழந்தைகள்
பதில் சொல்லியிருக்கக் கூடும். அவரகளை எல்லாம் அந்தப்
பேருந்துக்குள் நிற்கச் செய்ய வேண்டும்.

அத்தனை பயணிகளுக்கும் நடுவே பிதுங்கிச் சென்றபடி,
வியர்வை பொங்க டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு சில்லறைக்கா
மல்லுக்கட்டும் அந்த நடத்துநரைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.
உடனடியாகப் பதிலை மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

பேருந்து அடிக்கடி நிறுத்தப்பட்டது. முன்பக்கம் ஏறினவங்க
எல்லாம் மறக்காம டிக்கெட் வாங்குங்க. அடுத்த ஸ்டாப்பிங்கிலே
செக்கிங் வாராங்களாம் என்று எச்சரித்த ஓட்டுநரின் கண்களை
தனக்குச் சற்று தள்ளியிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த
இளைஞனைப் பார்த்தன.

கல்லூரி படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்க வேண்டும் அல்லது
புதிதாக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்க வேண்டும். வேறு
எதிலும் கவனம் செலுத்தாமல் தன் செல்ஃபோனில் மாறி மாறி
எதையோ நோக்கிக் கொண்டிருந்தான்.

தம்பி உன்னைத்தான்… என்று ஓட்டுநர் மூன்றாவது முறையாகச்
சற்று உரத்தக் குரல் கொடுத்தபோதுதான் திரும்பினான்.

என்னையா அண்ணே கூப்பிட்டீங்க? என்றான்.

ஓட்டுநர் தம் சட்டைப் பையிலிருந்து தமது செல்ஃபோனை எடுத்து
அவனிடம் நீட்டினார்.

என் பையன் நேத்து இதை வச்சு விளையாடிக்கிட்டிருந்தான்.
திடீர்னு பார்த்தா செல்ஃபோன் ஆஃப் ஆயிடுச்சு. ஆன் பண்ணினா
வரமாட்டேங்குது. கொஞ்சம் என்னன்னு பாருப்பா என்றான்.

அந்த இளைஞனின் முகத்தில் கொஞ்சம் பெருமிதம்.
தாம் விவரம் அறிந்தவன் என்பது ஓட்டுநருக்குப் புரிந்திருக்கிறதே
என்று.

ஓட்டுநரின் செல்ஃபோனை வாங்கி அதைப் பலவிதங்களில்
சோதித்தான். பிறகு, அண்ணே அதை சர்வீஸ் சென்டரிலேதான்
கொடுக்கணும் என்றபடி அந்த செல்போனை மீண்டும் ஓட்டுநரிடம்
கொடுத்தான்.

ஓட்டுநரின் முகம் பதற்றத்தை வெளிக்காட்டியது, ஐயோ
தாளிச்சுடுவாங்களே என்றார்.

அதெல்லாம் இருக்காது. சின்ன பிரச்னைதான் இந்த ஃபோனை
எப்ப வாங்கினீங்க?

நாலு மாசத்துக்கு முன்னாடி…

அப்படின்னா வாரண்டி முடிஞ்சிருக்காது. இலவசமாகவே
சரி செய்துடுவாங்க. ஆனா ஒண்ணு. உங்க பைன் இதை
நோண்டினதையெல்லாம் சொல்லாதீங்க. திடீர்னு ஆன் ஆக
மாட்டேங்குது என்று மட்டும் சொல்லுங்க என்று அவன் ஓட்டுநர்
தலையசைத்தார்.

பிறகு கொஞ்சம் உரிமையுடன், இதோட சர்வீஸ் சென்டர் எங்கே
இருக்குனனு கொஞ்சம் பார்த்துச் சொல்லு தம்பி என்றார்.

அந்த இளைஞன் தன் விலையுயர்ந்த செல்ஃபோனில் அந்த
விலாசத்தை கூகுளில் தேடினான். பிறகு ஆழ்வார்பேட்டையில்
டி.டி.கே சாலையில் இருக்கு என்றான்.

அது வேணாம்பா. நுங்கம்பாக்கத்தில் இருக்குதான்னு பாரு
என்றார் ஓட்டுநர்.

மேலும் சில நிமிடங்கள் தேடிய பிறகு இருக்குங்க. கோடம்பாக்கம்
சாலையில் இருக்கு எனறார்.
கோடம்பாக்கம் இல்ல. நுங்கம்பாக்கத்திலே பாரு.
கோடம்பாக்கம் சாலைன்றது நுஙகம்பாக்கத்திலேதான் இருக்கு.
பாஞ்சாலியம்மன் கோவில்கிட்ட இருக்கு.
பாஞ்சாலியம்மன் கோயிலா? அது எங்கே இருக்கு?

ஓட்டுநரின் கேள்வியைத் தொடர்ந்து அந்த இளைஞன்
யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்தான். பின்பக்கம்
சற்று திரும்பி உரத்த குரலில் நுங்கம்பாக்கத்திலே
இருக்கும் பாஞ்சாலியம்மன் கோவில் யாருக்காவது தெரியுமா?
என்றான்.

வயதான ஒரு அம்மாளுக்கு இது தெரிந்திருந்தது.
விளக்கமாகவே அவர் விவரித்தார்.

தமது கடமையைச் செவ்வனே முடித்துவிட்டதாக அந்த
இளைஞன் நினைத்திருக்க ஓட்டுநர், தம்பி ந்த சர்வீஸ்
ஸ்டேஷனின் ஃபோன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதிக்
கொடுத்திடு என்றார்.

அந்த இளைஞனிடம் பேப்பர் எதுவும் இல்லை. பக்கத்தில்
உட்கார்ந்திருந்தவரின் டைரியிலிருந்து அரைதாளை வேண்டிக்
கேட்டுப் பெற்றான். பின் தன் செல்ஃபோனில் வலைதளத்தில்
காணப்பட்ட தொலைபேசி எண்ணை அந்தத் தாளில் எழுதி
ஓட்டுநரிடம் நீட்டினான்.

அவர் அதை வாங்கிக் கொண்டு, தாங்ஸ் என்ற கூறினார்.
இதற்குள் கண்டக்டரின் விசில் ஒலி கேட்க வண்டி கிளம்பியது.

அந்த இளைஞன் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது, உள்ளேயிருந்து
அவன் அப்பாவின் குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது.

பொறுப்பற்ற பிள்ளை என் மொபெட் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.
என்னன்னு கொஞ்சம் பாருடான்னேன். தெரியலேன்னா
பக்கத்துத் தெருவிலே இருக்கிற மெக்கானிக் கடையிலே
கொடுடான்னு நாலு தடவை சொல்லியாச்சு.
அப்பவும் சொன்னதைச் செய்யலே. அவ்வளவு அலட்சியம்
இவனுக்கு.

இளைஞனின் முகம் எரிச்சலைக் காட்டியது. இவரே கொண்டு
போய் கொடுக்கக்கூடாது? என்றவனுக்குச் சிறு வியப்பு.
மொபைட்டை காணோம். அப்பாவே மெக்கானிக் கடையில்
கொடுத்துவிட்டாரா?

இதற்குள் அப்பாவே கூடத்துக்கு வந்துவிட்டார். என்னாட
மொபெட்டை காணோமேன்னு பார்க்கிறியா? நீ இல்லாட்டா
என்ன பக்கத்து வீட்டிலே இருக்கானே அந்த ரங்கநாதன் மகன்
எனக்குக் கைகொடுத்தான்.

தானாகவே வந்து ஏன் அங்கிள் நேத்து ஆபீசுக்கு நீங்க
மொபைட்டிலே போகலையா? என்று கேட்டான். சொன்னவுடன்
அவனே அதைச் சரிபண்ணப் பார்த்தான். முடியலேன்னதும் தானே
மொபெட்டை தள்ளிக் கொண்டு மெக்கானிக் கடையிலே விட்டு
விட்டு வந்திருக்கான்.

சாயந்திரமும், அவனே போய் எடுத்துட்டு வரேன்னு
சொல்லியிருக்கான். பிள்ளைன்னா அவன் மாதிரிதான் இருக்கணும்.
நீயும் இருக்கியே பொறுப்பில்லாமல் என்று கத்தினார் அவன்
அப்பா தாமோதரன்.

அதே நேரம் பக்கத்து வீட்டிலிருந்து ரங்கநாதனும்
தன் மனைவியிடம் கோபத்தி்ல் வெடித்துக் கொண்டிருந்தார்.
உன் மகன் என்ன வெட்டி முறிக்கிறான்? என் வாட்ச நின்னுபோயிடுச்சு.
செல் மாத்தணும். இந்த துரைக்கு அந்த வேலையைக் கூட பண்ண
முடியாதோ? அவனைச் சொல்லிக் குத்தமில்லை. நல்லா வேளா
வேளைக்கு சோறு போட்டு செல்லம் கொடுத்து வளர்க்கிறோம்
இல்லையா நம்மைச் சொல்லணும்.

யாருடைய மொபட்டையோ தெருவிலே தள்ளிக்கிட்டுப் போறான்.
உதவாக்கரைக் கழுதை என்றார்.

விடுங்க அவன் அப்படித்தான்னு தெரிஞ்சதுதானே.
உங்களுக்கென்ன வாட்ச்க்கு செல் மாத்தணும். அவ்வளவுதானே.
எதிர்வீட்டுப் பையன் கேசவனிடம் சொன்னா உடனே செஞ்சிடுவான்.
ரொம்ப நல்ல குணம் அவனுக்கு. பிறருக்கு உதவுவதிலே முன்னே
நி்ப்பான் என்று கூறிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி.

அப்போது கேசவனின் வீட்டுத் தொலைக் காட்சியில்
ஒரு பழைய பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. தம்பி நன்றி
கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா என்றது அதன் ஒரு வரி.
நூத்துல ஒரு வாக்கியம் என்று ஆற்றாமையுடன் கேசவனின்
அப்பா கூறிக் கொண்டிருந்தார்.

நான்கு நாட்களாக வீட்டில் கரண்ட் பில்லைக் கட்டாமல் தள்ளிப்
போட்டுக் கொண்டிருந்த தங்கள் பிள்ளையை எண்ணியதும்
உதவாக்கரை என்ற வார்த்தையை அவர்கள் உதடுகள் உச்சரித்தன.

அதே சமயம் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து கொண்டிருந்த அந்தக்
கேசவன், எட்டு நாளாகவே இந்த ஃபோன் சரியா வேலை செய்யலே.
எங்கே நேரமிருக்கு சொல்லுப்பா? டிரைவர் வேலை உடம்பை
முறுக்கிப் பிழியுது. இந்த ஃபோன் திடீர்னு தானாகவே இப்படி ரிப்பேர்
ஆயிடுச்சு என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த
வாடிக்கையாளரைப் பார்த்து,
கவலைப்படாதீங்க, சரி பண்ணிடலாம். சரியானதும் நாளைக்கு
நானே உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து தரேன் என்று கனிவுடன்
கூறிக் கொண்டிருந்தான்.

——————————————-

– அருண் சரண்யா

நன்றி- கல்கி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: