நேருவின் பொக்கிஷம்!

நவம்பர்-14 நேருவின் பிறந்த தினம். அதுவே குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அவர் வாழ்ந்த இல்லம் இன்றும் அவரின் நினைவை போற்றும் இல்லமாக, அருங்காட்சியமாகவும், நூலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

நம்ம வெள்ளை மாளிகை!

டில்லியின் முக்கிய சாலைகளுள் ஒன்றான தீன் மூர்த்தி மார்க்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்புகள் நிறைந்த தெற்கு அவென்யூ சாலையும் சந்திக்கும் அடர்ந்த பசுமையுடன் கூடிய பரந்த புல்வெளியின் பின்னணியில் வீற்றிருக்கிறது, அந்த வெள்ளை நிற மாளிகை.
ஜவஹர்லால் நேரு வாழ்ந்த, ‘தீன் மூர்த்தி பவன்’ என்ற இல்லம் தான் அது.
அவர் பிரதமராக இருந்தபோது வாழ்ந்த இல்லம். அவரது மறைவுக்கு பின், நேரு நினைவு அருங்காட்சியகமாகவும், நூலகமாகவும் செயல் பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தை பார்வையிட உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
பாரதத்தின் விடுதலை போராட்ட வேள்வியில், தன்னை மெழுகாக உருக்கி கொண்ட தலைவர்கள், நாட்டின் வளர்ச்சியில் பண்டித நேருவின் பங்களிப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் பல தகவல்கள் அடங்கிய பெட்டகமாக அந்த அருங்காட்சியகம் விளங்கிறது.
நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றது முதல், அவர் மறைந்த, மே 24, 1964 வரை நேரு வாழ்ந்த இடம் தான், தீன் மூர்த்தி பவன்.

அழகான ஸ்டில்!
தீன் மூர்த்தி பவனின் கீழ்தளத்தில் நுழைவோருக்கு, கன்னத்தில் கையை வைத்து, ஒரு புறமாக பார்வையை செலுத்தும் பண்டித நேருவின் திருவுருவப் படம் காட்சி தருகிறது.

அமர் ஜோதி!

இந்த பவனின் பின்புறம் சென்றால், தோட்டம் இருக்கிறது. அதன் இடப்புறத்திலுள்ள ஒரு சிறிய இடத்தில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர் தாங்கிய, ‘அமர் ஜோதி’ ஒளிர்கிறது.

குட்டி வயசு சுட்டி படங்கள்!

கீழ்தளத்தின் இடப்புறம் வழியாக சென்றால். எதிரே உள்ள அறையின் சுவரில் தொங்கி கொண்டிருக்கும் பாலகன் நேருவின் படம், பார்வையாளரை அப்படியே மயக்கிவிடும்.
குழந்தை பருவத்தில் நேரு வாழ்ந்த அலகாபாத் ஆனந்தபவன் வீடு, லண்டனில் நேரு பயின்ற ஹாரோ பள்ளி, கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரி வாழ்க்கை ஆகியவற்றை நினைவுபடுத்தும் படங்கள் என, நேருவின் இளமை கால படங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.

‘புத்த’ ப்ரியர்!

அகிம்சை, அமைதியை போதித்த புத்த பெருமானை மிகவும் நேசித்தவர் நேரு. தன் அலுவலகத்து அறை, வாசிப்பு அறை, படுக்கை அறை, ஆகிய இடங்களில் எல்லாம், பல்வேறு வடிவிலான புத்தரின் சிலைகளை வைத்து அழகு பார்த்துள்ளார்.அறைகளில் ஆங்காங்கே வைக்கப் பட்டிருக்கும் பல்வேறு வகையான புத்தர் சிலைகள் பார்வையாளர்களின் மனதை கவர்கின்றன.

நள்ளிரவு வரை படிப்பு!

புத்தக வாசிப்பில் மிகவும் விருப்பம் கொண்டவர் ஜவஹர்லால் நேரு. இதற்கு சாட்சியாக அவரது நூலக அறை காணப்படுகிறது.
பல்வேறு நாட்டு அறிஞர்களின் நூல்கள், பல்துறை நூல்கள், நூலக அறை கண்ணாடி அலமாரியில் பொக்கிஷம் போல் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
நள்ளிரவு வரை புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட நேரு புத்தகங்களை வாசிப்பதுடன், அதை பொன் நகை போல் பாதுகாக்கவும் செய்தார் என்பதை நினைவுப்படுத்துவதாக உள்ளது அந்த நூலக அறை.

நேருவின் நிகழ்ச்சிகள்!

இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற நிகழ்ச்சியின் புகைப்படங்கள், கலை, இலக்கியம், நாட்டுக்கான நலத்திட்டங்கள், தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஆகியவை தொடர்பான புகைப்படங்கள், முதல் மாடியின் வராந்தாவை அலங்கரிக்கின்றன.

ஐந்து லட்சம் புத்தகங்கள்!

நினைவில்லம் அருகே உள்ள கட்டடத்தில் பிரம்மாண்ட நூலகம் இயங்குகிறது. சுதந்திர போராட்ட காலம் தொடர்பான அரிய பல புகைப்படங்கள், செய்தித்தாள்கள், நவீன இந்தியா தொடர்பான தகவல்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
சுமார், ஐந்து லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளன. தவிர, அருங்காட்சி யகத்தின் ஒருபுறம் நேரு கோளரங்களும் உள்ளது.

ஒரு விஷயம்!

‘நேரு போன்றவர்கள் ஜனநாயகத்தில் ஆபத்தானவர்கள். ஒரு சிறு திருப்பமும் இவரை சர்வாதிக்காரி ஆக்கிவிடலாம். ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய புகழ், மன உறுதி, செயல்திறன், கர்வம் எல்லாமே அவரிடம் இருக்கின்றன. இவருடைய தற்பெருமை ஏற்கனவே பயங்கரமானது. அதை அடக்க வேண்டும்!’
நேருஜியைப் பத்தி இவ்வளவு கடுமையாக விமர்ச்சித்தது யார் தெரியுங்களா?
அவருடைய எதிரியோ, அவரைப் பிடிக்காத பத்திரிகைகாரங்களோ இல்லை; அவரேதான்!
இப்படி தன்னைத்தானே விமர்சிக்கிற துணிவும், நேர்மையும் பக்குவமும் இருந்தது நேருஜிக்கு.
ஒரு மனிதன் பெரிய நிலையை வாழ்வில் அடைய, பல குணங்கள், திறமைகள், முயற்சிகள் மற்றும் உழைப்பு தேவை.
ஒரு மனிதன் தன்னைத்தானே விமர்சிக்கிற தன்மை கொண்டிருந்தால், அவனிடம் நேர்மை நிரம்பி வழியும். நேருவும் அப்படித்தான் இருந்தார். குழந்தைகளின் ராஜாவாக ஆனார்.

சுதந்திர தேசத்தின் சிற்பிகள்

இது பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவிடம்.
அவரோடு சுதந்திர போராட்டத்தில் தேசத்திற்காக
பாடுபட்ட மாபெரும் தலைவர்களின் படங்களும்
இங்கு இடம் பெற்று, நமக்கு பெருமையும், கர்வமும்
அளிக்கிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தி குறித்த முக்கிய குறிப்புகள்,
புகைப்படங்கள், ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்த
லோக்மான்ய திலகர், அன்னி பெசன்ட் அம்மையார்
ஆகியோரது படங்கள், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை
ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், படங்கள்,
சரித்திர குறியீடுகளாய் இருக்கின்றன.

ராணி லட்சுமிபாய் குதிரையில் போர் புரிந்த காட்சி,
பெண்மையின் வீரம் பேசுகிறது.

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, சமூக சீர்திருந்தவாதிகளான
கேசப் சந்திர சென், தேவேந்திர நாத் தாகூர்,
பண்டிட் ராமாபாய், பாபா ராம்சிங், சையது அகமது கான்,
மகாதேவ் கோவிந்த ரானடே, ஜோதி ராவ், கோவிந்தராவ் பூலே
என சுதந்திர போராட்ட காலத்தை கண் முன் நிறுத்தும்,
பல தலைவர்களின் படங்கள் அறைகளை அலங்கரிக்கின்றன.

இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த, சென்னை
மாகாணத்தின் முக்கிய தலைவர்களான, ஜி.சுப்பிரமணிய ஐயர்,
சி.விஜயராகவாச்சாரியார், எஸ்.ஆர்.முதலியார், காங்கிரஸ் தலைவர்,
டபிள்யூ.சி.பானர்ஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களும்,
மும்பையில் நடைபெற்ற முதல் இந்திய தேசிய காங்கிரஸ்
கூட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்களும் காட்சிப்
படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மவுலானா முகமது அலி,
ஹக்கீம் அஜ்மல்கான், டாக்டர் எம்.ஏ.அன்சாரி, எம்.ஏ.ஜின்னா,
அமீர் அலி, சையது அலி, ஆகிய பல்வேறு தலைவர்களின்
திருவுருவப் படங்களும் உள்ளன.

இல்லத்தின் மாடியில் நேரு பயன்படுத்திய வாசிப்பு அறை,
குடும்பத்தினர் அமரும் அறை, அலுவலக அறை, படுக்கை
அறை ஆகியவை உள்ளன.

————————————-
சிறுவர் மலர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: