ஒரு புதிய சிந்தனை – அர்த்தமுள்ள இந்து மதம் – பகுதி 3


ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியான் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடுஎன் றாரே!

– என்றொரு பாடல்.

ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது! கற்பனைதான்!
ஆனால், ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப்
பாருங்கள். பசு மாடு கன்று போட்டதாம். அடாத மழை பெய்ததாம்.
வீடு விழுந்து விட்டதாம். மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.
வேலைக்காரன் இறந்து போனானாம் வயலில் ஈரம் இருக்கிறது,
விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.

வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.
‘‘உன் மகள் இறந்து போனாள்’’ என்று சாவுச் செய்தியோடு ஒருவன்
வந்தானாம். இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து
சேர்ந்தார்களாம். பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.
நிலவரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார் களாம். குருக்களும்
தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.

– ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா
வரும்? இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம்
மரத்துப் போகும்.

மரத்துப் போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல்
அலட்சியப்படுத்தத் தோன்றும். ‘‘நாமார்க்கும் குடியல்லோம்,
நமனை அஞ்சோம்’’ என்ற தைரியம் வந்துவிடும்.

சிறிதளவு இன்பமும் பெரியதாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப்
போகும். பல ஆண்டுகள் தவம் செய்து பெறுகிற ஞானத்தை விட
இந்த ஞானம் அழுத்தமானது; உண்மையானது; உறுதியானது.
ஆகவே, லெளகீக வாழ்க்கைதான் – அதில் ஏற்படும் இன்ப
துன்பங்கள்தான் – ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற
ஞானியாக்குகின்றன.

எனக்கு இதிலும் அனுபவம் உண்டு. என் ஞானம் என்பது என் வாழ்க்கை
அனுபவங்களிலிருந்து திரட்டப் பெற்ற தொகுப்பு நூல்.

பூனையின் மலமே புனுகு ஆவது போல, மோசமான அனுபவங்களே
உண்மையான அறிவை உண்டாக்குகின்றன.

அனுபவங்களே இல்லாமல், இருபது வயதிலேயே ஒருவன் பற்றற்ற
வாழ்க்கையைத் தொடங்கினால், அடுத்துச் சில ஆண்டுகளிலேயே
அவன் லெளகீக வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவான்!

இல்லையேல் கள்ளத்தனமான உறவுகளில் இறங்குவான்.


அந்தத் துறவு போலித்தனமானது. அண்ணா ஒரு முறை சொன்னது
போல் ‘‘படுக்கையில் படுக்க வேண்டும், பாம்பு வர வேண்டும்;
கடிக்க வேண்டும்; உயிர் துடிக்க வேண்டும், ஆனால் சாவு வரக்கூடாது’’

– இப்படித் தினமும் ஒருவனுக்கு நேர்ந்தால், பாம்பே அவனுக்கு
வேடிக்கையான ஜந்து ஆகிவிடும்! பிறகு அது வருமென்று தெரிந்தே
அவன் படுப்பான். கடிக்கும் என்று தெரிந்தே தயாராயிருப்பான்.
கவலைப்பட மாட்டான்.

ஸ்ரீராம்சந்த்ரஜி கூறும் ‘லெளகீக வாழ்க்கையில் தவம்’ என்பது
இதுதான். யார் யாருக்கு நான் சோறு போட்டேனோ, அவர்கள்
எல்லோரும் என் கையைக் கடித்திருக்கிறார்கள்.

அதிலிருந்து யாருக்குப் போடலாம், யாருக்குப் போடக்கூடாது என்ற
புத்தி எனக்கு வந்துவிட்டது. என் படுக்கையிலும் பாம்பு வந்து
என்னைக் கடித்திருக்கிறது. இப்போதெல்லாம் பாம்பைப் பற்றிய
பயமே எனக்கு இல்லாது போய்விட்டது.

துன்பம் துன்பம் என்று ஒவ்வொருவரும் தலையிலடித்துக்
கொள்கிறார்களே! அவர்கள் அந்தத் துன்பந்தான் தங்களுடைய
குரு என்பதை மறந்து போகிறார்கள். கிராமங்களிலே
‘பட்டறி, கெட்டறி’ என்பார்கள். பட்டால்தான் அறிவு வரும்.
கெட்டால்தான் தெளிவு வரும். அறிவும் தெளிவும் வந்த பின்பு
ஞானம் வரும்.

அந்த ஞானத்திலே அமைதி வரும். அந்த அமைதியில் பேராசை,
கெட்ட எண்ணங்கள் எல்லாம் அடிபட்டுப் போகும். பற்று அளவோடு
நிற்கும். உள்ளம் வெள்ளையடிக்கப்பட்டு நிர்மலமாக இருக்கும்.
அதுவே ஸ்ரீராம்சந்த்ரஜி கூறும், ‘லெளகீகத்தில் நாம் செய்யும் தவம்’.

‘‘எனக்கு என்ன சீர் கொடுத்தீர்கள்!’’ என்று சகோதரி ஒரு பக்கம்
கண்ணீர் வடிப்பாள்.

‘‘ஒரு நகையுண்டா நட்டுண்டா?’’ என்று மனைவி உயிரை
வாங்குவாள். பந்துமித்திரர்கள், நாம் வாழ்ந்தாலும் ஏசுவார்கள்;
கெட்டாலும் ஏசுவார்கள். வறுமை ஒரு பக்கம் உடலை வாட்டும்.
அமைதியோடும், நிதானத்தோடும் இவற்றைச் சமாளித்து
உள்ளத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டால், இந்தத் தவம் பலித்து
விடும்.

எனக்கு வரும் கடிதங்களில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைத்
துயரத்தால் விம்முவதை நான் காணுகிறேன். அந்தத் துயரங்களை
அவர்கள் அலட்சியப் படுத்தியோ ஜீரணித்தோதான் அமைதி
அடைய வேண்டும்.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போக – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

– என்றொரு வெண்பா.

நீ வருந்தி வருந்தி அழைத்தாலும் வரமுடியாதவை வரமாட்டா!
உன்னோடு ஒட்டிக் கொள்பவை போகச் சொன்னாலும் போகா!
நினைத்து நினைத்து அழுவதேன்?

ஸ்ரீராமசந்தரஜி சொல்வதுபோல், துயரங்களை ஒரு தவம்
என்றெண்ணு. லெளகீக வாழ்க்கையிலே கிடந்து உழலு.
துயரங்களின் மூலம் அனுபவங்களைச் சேகரி.

இதுதான் உலகம் என்று முடிவு கொள். இதுதான் நமக்கு
விதிக்கப்பட்ட பாதை என்று அறிந்து கொள். இறைவனை வழிபடு!
காலை முதல் மாலை வரை நடந்தவற்றையெல்லாம் இரவிலே
மறந்துவிடு.

மறுநாள் பொழுது மயானத்தில் விடியாது -அமைதியில் விடியும்.
அளந்து வாழும் மனத்தின் சமநிலை திருடனுக்குக்கூடக் கிடைத்து
விடும்! பரிதாபத்துக்குரிய கிரகஸ்தனுக்கு அது ஏன் கிடைக்காது?

———————————————
-கவிஞர் கண்ணதாசன்

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை – 600 017.
நன்றி- தினகரன்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: