ஒரு புதிய சிந்தனை – அர்த்தமுள்ள இந்து மதம் – பகுதி 1


ராமகிருஷ்ணா மிஷனைப் போல, உத்தரப் பிரதேசம்
ஷாஜஹான்பூரில் ஸ்ரீராமசந்த்ர மிஷன் என்று ஒன்று
இருக்கிறது. இதனுடைய ஸ்தாபகர் மகாத்மா
ஸ்ரீராம் சந்த்ரஜி ஆவார்கள்.

அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய
‘சத்யோதயம்’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும்,
சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு
அனுப்பியிருந்தார்.

இந்து மதத்தில் அவர் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார்.
எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத
ஒன்றாகும்.

விக்கிரக ஆராதனையை வெறும் ஸ்தூல ஆராதனை என்று
வருணித்து, அது மனத்தின் உள் நோக்கத்தை அதிகமாகப்
பூர்த்தி செய்வதில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

வெறும் ஸ்தூல வழிபாட்டில் சிக்கியவர்கள் பெரும் ஆன்மிகப்
பயிற்சியைப் பெற்றதில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள்.
ஸ்ரீராம் சந்த்ரஜியும் அதைத்தான் கூறுகிறார் என்றாலும்,
மற்றவர்கள் கூறாத புதிய கருத்துகளையும் கூறுகிறார்.

கோஷ்டி பஜனைகளைப் பற்றி அவர் கூறும்போது,
கூட்டமாக உட்கார்ந்து பஜனை செய்வதில், தெய்வத் தியானம்
விருப்பத்தை நிறை வேற்றுவதில்லை என்கிறார்.

விக்கிரக ஆராதனையும், பஜனைகளும் பக்குவமில்லாத தாழ்ந்த
நிலையில் – ஆரம்ப நிலையில் மட்டுமே பயன்படும் என்கிறார்.
சாதாரணமாக, இன்றைய இளைஞர்களின் மனத்தில் இதே
சிந்தனை தோன்றியிருப்பது கவனிக்கத்தக்கது.

‘‘கோயிலுக்குப் போய் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில்
என்ன கிடைக்கிறது?’’

‘‘பஜனைப் பாடல்களை சத்தம் போட்டுப் பாடுவதில் என்ன
பயன் இருக்கிறது?’’ – என்றுதான் இளைஞர்களும் கேட்கிறார்கள்.
ஆத்மாவுக்கு அமைதிப் பயிற்சி அளிப்பது பற்றியும், மனத்தின்
கடிவாளங்களை இழுத்துப் பிடிப்பது பற்றியும், ஸ்ரீராம் சந்த்ரஜியின்
கருத்துகள் சுவையாக இருக்கின்றன.

முழுப் பிரயத்தனத்தோடு தனியாக தியானம் செய்வதை
அவர் வற்புறுத்துகிறார்.

———————————————-

இவை அனைத்தையும்விட, லெளகீக வாழ்க்கையில்
இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பற்றற்ற
வாழ்க்கையையும், துறவி வாழ்க்கையையும் போதிப்பதை
அவர் கண்டிப்பதில் அர்த்தமிருக்கிறது.

குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே பற்றுகளை
சமநிலைப்படுத்தி, அளவற்ற ஆசையின்றி பண்பாடாக
வாழும் வாழ்க்கையிலே மதபோதனைகளை போதிக்க
வேண்டுமென்கிறார்.

நூற்றுக்குத் தொண்ணூறு பேர் லெளகீக வாழ்க்கையின்
இச்சைக்கு ஆட்பட்டு வாழ விரும்புகிறார்கள்.
தொல்லைகளையும், துன்பங்களையும் காணும்போது,
அவர்கள் வேதனை அடைகிறார்கள். அந்த வேதனையை
சாக்காகக் கொண்டு, ‘அவர்களை வீட்டைவிட்டு ஓடு’
என்று போதிப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார்.

அவர் கூறுகிறார், ‘‘உபத் திரவங்களும் இடுக்கண்களும்
ஜீவிதத்தில் பூரணமாக இல்லாமற் போவதென்பது நடக்காத
காரியம்; இயற்கைக்கும் மாறானது.

உண்மையில், அவை நமது மேன்மைக்காகவே ஏற்பட்டவை.
அவை நோயாளிக்கு ஆரோக்கியம் உண்டாவதற்காகக்
கசப்பு மாத்திரைகள் கொடுப்பது போலாகும்.

மிக உயர்ந்த நல்ல வஸ்துவானாலும், சரியான முறையில்
உபயோகப்படுத்தாது போனால், உபத்திரவங்களை
விளைவிக்கும். துன்பங்களின் விஷயமும் இப்படியே
எவற்றையும் சரியான காலத்தில், சரியான முறையில்,
சரியாக உபயோகித்தால், நாளடைவில் அவை நற்பலனை
அளிப்பது திண்ணம்.

உண்மையில் துன்பங்களே நமக்கு மேன்மையான
வழிகாட்டிகள். அவற்றால் நமது மார்க்கம் செம்மைப்படு கிறது.
சாமானிய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மனிதனுக்கு அவனை
சரியான முறையிலிருக்கச் செய்ய துன்பங்கள் மிகவும்
உதவியாயிருக்கும்.

குடும்பக் கஷ்டங்களையும், உலக வாழ்க்கையில் உண்டாகும்
துயரங் களையும் பற்றி எனது குருநாதர் இப்படிச்
சொல்வதுண்டு: ‘நமது இல்லமே அமைதியும் பொறுமையும்
அடைய நாம் பயிலுமிடம். கிருஹஸ்தாச்ரமத்தில் நாம் படும்
வறுமை, இடுக்கண்களைப் பதறாது பொறுப்பது நாம் இயற்றும்
பெருந்தவம். இதனிலும் உயரிய தவம் வேறொன்றுமில்லை.

——————————————-

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய
வேண்டுமென்றால், கோபத்திற்காவது, துக்கத்திற்காவது
இடங்கொடாமல், குறைகூறும் மனப்பான்மையை ஒழித்து
நமது குற்றத்திற்காகவே நாம் அனுபவிக்கிறோம் என்று
நினைத்து, சாந்த மனத்துடன் பொறுமையாய் இருக்க
வேவண்டும். காட்டில் தனித்த வாழ்வும், உலக விஷயங்களில்
கலக்காது விலகி நிற்றலும் சிலருக்குப் பொறுமையையும்,
அமைதியையும் பழகச் சாதனங்களாகும்.

ஆனால், நமக்குப் பந்துமித்திரர்களின் இகழ்ச்சியும்,
சுடுசொற்களும் அரிய பெரிய தவத்திற்கொப்பாகி வெற்றிக்கு
ஒப்பற்ற சாதனங்களாகின்றன.’

‘‘உண்மையில் துன்பங்களையும், சடங்குகளையும் நாம்
அமைதியுடன் பொறுத்தோமேயாகில், அவை நம்மை மேம்
பாட்டடையச் செய்து, மேல்நிலைகளுக்குச் செல்வதற்கு
வேண்டிய முக்கிய சாதனங்களாக ஆகும்.

அங்ஙனம் அல்லாது முரணான வழியில்
உபயோகித்தோமேயாகில், நற்பலன் அழிந்துபோய்
நாமடையவிருக்கும் ஆதாயம் கெட்டுப் போகும்’’

‘‘பரித்தியாகம், அதாவது, பற்றுதலற்ற தன்மை, ஒரு முக்கிய
நிலை என்பதில் சந்தேகமில்லை.

பற்றற்றாலன்றி மாயையின் சிக்கல்களிலிருந்து தப்பமுடியாது.
ஆனால், நாம் மனையை விட்டகன்று, குடும்பம், லெளகீக
விஷயங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்துத் துறவு பூண்டு
சந்நியாசியாக வேண்டியதில்லை.

இல்லறத்தையும், இல்வாழ்க்கையையும் துறந்து உலக
பந்தயங்களை விட்டுவிட்டு ஏகாந்தத்தை நாடி நிற்பதே
பற்றற்றுப் போவதற்கு ஒரே சாதனம் என்னும் கொள்கையை
நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.

பலாத்கார முறையில் சர்வசங்க பரித்தியாகம் செய்வது
நிஜமானதன்று. ஏனெனில் உலகத்தைத் துறந்துவிட்டாற்
போலத் தோன்றினாலும்கூட, உட்கருத்தில் அவர்கள்
உலகத்தைப் பற்றிக்கொண்டே நிற்கக் கூடும்.

இல்லற வாழ்க்கையில் நாம் அநேக விஷயங்களை கவனிக்க
வேண்டுமென்பதில் சந்தேகமில்லை. சம்சாரத்தைத் தாங்க
வேண்டும். மக்களின் கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும். அவர்கள் வேண்டுவனவற்றை அளித்து,
அவர்களை வெப்பம், குளிர், நோய், துன்பங்கள்,
மற்றெல்லாவற்றிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.

இப்படி முக்கியமாக வேண்டியவற்றிற்காக நாம் பணமும்
ஆஸ்தியும் சம்பாதிக்கிறோம்.’’

‘‘இப்படி நாம் சம்பந்தப்பட்டுள்ள விஷயங்களில் அளவு
கடந்து பற்றுதல் கொள்வதே உண்மையில் தீமையாகும்.
இதுவே நமது இடுக்கண்களுக்கு முக்கியக் காரணம்.
ஆனால், விருப்பு, வெறுப்பற்று நமது கடமை என்று நாம்
காரியங்களைச் செய்வோமாகில், உலகப் பற்றுதல்களினின்று
ஒருவாறு விலகியவராகி, அநேக உடைமைகளைப் படைத்து
அவற்றைக் கையாளுபவராயிருப்பினும், உண்மையில்
உலகைத் துறந்தவராகிறோம்.

இத்தன்மையில் உடைமைகள் பலவானால் நமக்கு
ஒப்படைக்கப்பட்டுள்ள தர்மத்தைச் செய்வதற்காகக்
கொடுக்கப்பட்டுள்ளவை என்பதும் தெளிவாகும். சங்க
பரித்தியாகமென்பதற்கு உலகப் பற்றற்றுப் போதல் என்பது
உண்மையான பொருளாம்.

உடைமைகள் இல்லாது போவதென்பது பொருளாகாது.
ஆகையால், இன்றியமையாதவாறு ஆஸ்திகளைப் பெற்று
உலகத்துடன் சம்பந்தம் கொண்டுள்ள இல்லற வாழ்க்கையை,
விஷயங்களில் அளவுக்கு மிஞ்சிய பற்றற்று நடத்தினால்,
பரித்தியாகத்திற்கும், அதன் விளைவான சத்திய நிலை
எய்துவதற்கும் இவை தடையாக மாட்டா.

———————————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: