மோட்டுவளைச் சிந்தனை – விக்னேஸ்வரி சுரேஷ்


‘அம்மா, அம்மா அக்கா அழறா’ என்றவாறு பையன்
ஓடி வருகிறான்.‘அச்சோ ஏண்டா?’‘நான்தாம்மா அடிச்சேன்…’
எப்படி பார்த்தாலும் விளங்கிக்கொள்ள முடியாத நிகழ்வுகள்
நம்மை சுற்றி நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஏன், எப்படி, எதனால் என்று யோசிக்க அவசியமில்லாமலும்
நேரமில்லாமலும் பலவற்றை கடந்துதான் போகிறோம்.
என்றாவது நின்று கவனித்தால் புன்னகை தருவிக்கும்
நிகழ்வுகளால் நிரம்பி இருக்கிறது வாழ்க்கை!

என் கணவர் கிரிக்கெட் பிரியர். ஒரு நாள் உச்சகட்ட சோகத்தில்
‘உச்’ கொட்டிக் கொண்டிருந்தார். நான் என்னாச்சு என்று
பார்த்தால், பிரபல கிரிக்கெட் வீரர் மைக் குவியலுக்கு முன்
அமர்ந்து கண்ணீர் சிந்தி, ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக
அறிவிக்கிறார்.

அவர்தான் கிரிக்கெட்டின் சுவர், சுற்றுச்சுவர், சுண்ணாம்பு,
பெயின்ட், செங்கல் என என்னவர் அடுக்க, நான் ‘அப்டினா,
ஃபீல் பண்ண வேண்டியதுதான். பண்ணுங்க பண்ணுங்க!’
என்று இடத்தை காலி செய்கிறேன்.

சில நாட்கள் கழித்து பார்த்தால், திரும்ப அதே வீரர் மைக்
குவியலுக்கு முன் அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்.
நான் ‘என்னாச்சுங்க? சாக போறாராமா? என்ன வியாதியாம்?’
தலைவர், பௌலிங் போடும் முரளிதரன் போலப் பார்த்து,
பின் சொன்னது அந்த நடமாடும் கிரிக்கெட் கட்டிடச் சாமான்
ஒரு நாள் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறார்.

‘உச்’ ‘உச்’!! இப்போதும் அந்த வீரர் டி.வி.யில் வந்து பந்து
துரத்துகிறார், ஐபிஎலுக்காக. இப்போது ‘உச்’ என் முறை!

இருபத்து மூணே முக்கால் மணி நேரம் அருகிலேயே இருந்தாலும்,
அம்மா குளிக்கும் போது பாத்ரூம் கதவை இடித்துச் சொல்ல
குழந்தைகளுக்கு ஏதோ அவசரமான விஷயம் இருக்கிறது.

அதிகம் போனால் 60 வினாடிகள். அதற்குள் கதவு திறக்கப்
படாவிட்டால், தன்னளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும்
நோக்கத்தில் வெளியே காத்திருக்கிறது.

நண்பர்கள் என்னும் இம்சைகள்… எனக்கு அஜித்விஜய் எல்லாரும்
ஒன்றுதான். நண்பர்கள் அஜித் ரசிகர்கள் என்றால் நான்
விஜய் ரசிகை. இல்லையென்றால், மாற்றி. நான் சினிமாவே
பார்ப்பதில்லை, அதனால் யாவர்க்கு வேண்டுமானாலும் ரசிகை
ஆவேன்.
என் ஆர்வம் நண்பர்களோடு போடும் செல்லச் சண்டையில்தான்.

‘அஜித்தை விட நல்ல நடிகர் தனுஷ்’ என்ற என் விவாதம்
கொஞ்சம் நீண்டாலும், ‘அவர் எவ்வளவு நல்ல மனிதர் தெரியுமா?’
என்கிறார்கள், தடாலடியாக. அவர் பத்திரிகையாளர்களை
மரியாதையோடு நடத்துகிறார், தானம் செய்கிறார், ரசிகர்
மன்றங்கள் தேவையில்லை என்கிறார்.

இன்னும் நடப்பது பேசுவது உட்கார்வது, பல் தேய்ப்பது
எல்லாவற்றிலும் நேர்மையை கடைபிடிக்கிறார் இன்னும் பல
‘கிறார்’ சொல்லி, அவர் நல்ல நடிகர் என்பதாக முடிக்கிறார்கள்.
இது கமல் ரசிகர்கள்…

நான் கமலுக்கு பிறந்தநாள் பரிசாக முற்றுப்புள்ளி ‘.’தருகிறேன்
என்றேன். தொலைக்காட்சிப் பேட்டி களில் வாக்கியங்களை கமா
கொண்டு பிரித்து, முடிவில்லாமல் பேசி நம்மை முடிக்கிறார்
எனப் போக… பிலுபிலுவென சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

‘அவர் நடிப்பை மட்டும் பார்! அது உலகத் தரம் வாய்ந்தது!
நடிப்புக்கே நடிப்பு கற்றுத்தரும் கலைஞன்’ என்றெல்லாம்
எமோஷனாகிறார்கள். எனக்கு எப்போதும் போல தலை சுற்றுகிறது.

‘உலகத் தரம் வாய்ந்த கல்வி’ தரும் மாநகரத்து பள்ளிகள்,
அம்மா டிகிரி வாங்கியிரா விட்டால் எல்.கே.ஜி. அட்மிஷன் தர
மறுக்கின்றன. ஏ, பி, சி, டி சொல்லி, ரைம்ஸ் பாடிக்காட்டி, 1, 2, 3
எழுதினால், குழந்தை அதையே பள்ளியில் படிக்க தேர்வாகிறது.

இந்த காலர் ட்யூன் கான்செப்ட் புரிவதேயில்லை. என் உடைகளை
வைத்து என்னை எடை போடுவதா என்று பொங்கும் அதே
இளைஞர் கூட்டம்தான், என் காலர் ட்யூனை கவனி, என்னை ரசி
என்கிறது.

அதிலும் ரசனையான மெலடி பாடல்கள் என்றால் கூட
பரவாயில்லை.
நமக்கும் நேரம் போவது தெரியாது. ஆனால், துயர் ததும்பும்
பாடல்கள்? இவற்றை காலர் ட்யூனாக வைக்கும் ஆசாமிகள்
பிடிவாதமாக 5, 6 ரிங் போன பிறகே எடுத்துப் பேசுகிறார்கள்.

அதற்குள் நாம் பேச வந்தது மறந்து, துக்கம் தொண்டையை
அடைக்கிறது.

பல லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்குகிறார்கள்.
உள்ளே அசல் லெதர் சீட் போடாவிட்டால் எப்படி? அதற்கு சில
ஆயிரங்கள் செலவழிப்பதும், கார் கலருக்கு ஏற்ற
பொருத்தமெல்லாம் பார்த்து வாங்குவதும் எப்படி தவறாகும்?

புரியாதது என்னவென்றால், இத்தனை மெனக்கெடலுக்கு
பிறகு ஏன் பிளாஸ்டிக் கவர் மேல் உட்கார்ந்து ஓட்டிப்
போகிறார்கள் என்பதுதான். குடும்ப உறுப்பினர்களுக்கும்
அதே கவர் அரியணைதான்.

அது தானாக கிழிந்து போனால்தான் அந்த லெதர் சீட்டின் வசதி
எப்படி என்று அவர்களுக்கு தெரிய வரும்.

கார் தூரத்தில் வரும் போது ஓட்டமும் நடையுமாக சாலையை
கடக்க முயலும் பாதசாரிகள், அருகில் வந்ததும் நிதானமாக
நடந்து போகிறார்கள்.

‘தமிழகத்தின் புதிய குரலுக்கான தேடல்’ தமிழகத்திலும்
இல்லாமல், புதிய குரலுக்கும் இல்லாமல், ஆனால், தேடி
கண்டுபிடிக்கப்படுகிறது.

குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொண்டுவர
கொடுக்கப்படும் ஸ்கூல் புராஜெக்ட்டுகள், குழந்தைகளால்
மட்டுமில்லாமல், அவர்கள் பெற்றோராலும் செய்ய
முடியாதவாறு இருக்கிறது.

லிஃப்டின் பொத்தானை பல முறை அழுத்தினால் சீக்கிரம்
வந்துவிடும் என்று நம்பும் பல மனிதர்களை மாநகர பெருங்
கடைகள் அடையாளம் காட்டுகின்றன.

ஐயப்ப சாமிகளுக்காக பல டாஸ்மாக் பார்களில் தனி டம்ளர்கள்
ஒதுக்கப்படுகின்றன.

ஒரு மாமி ‘நான் அவதி அவதின்னு இட்லிக்கு மாவு அரைச்சா,
இன்னிக்கின்னு பார்த்து கரென்ட்டே போய் தொலையல,
சனியன்!’ என்கிறார்.

மற்றொரு உறவினர் ‘மாஸ்டர் செக் அப்! ஐயாயிரம் ரூபா தண்டம்…
உங்களுக்கு ஒண்ணுமே பிரச்னை இல்ல, போங்கனுட்டான்!’
என்று அலுத்துக்கொள்கிறார்.

சாதாரண தலைவலி மருந்தின் பக்கவிளைவாக கல்லீரல்
பாதிப்பிலிருந்து, மரணம் சம்பவிப்பது வரை பொடி எழுத்தில்
எழுதியிருக்கிறது.

டி.வி. ரிப்பேர் செய்பவர், ‘எங்கக் கடை ரொம்ப ராசியானதுமா.
அடிக்கடி வருவீங்க பாருங்க’ என்று உறுதி தருகிறார்.

வருடக்கணக்காக சும்மாவே இருக்கும் ஒரு பொருளை தூக்கி
எறிந்த நொடியே வீட்டில் உள்ள யாருக்காவது அதற்கான தேவை
வருகிறது.

‘ஜெயமோகனா, அவர் எழுத்துன்னா எனக்கு ஒரு இது. நிறைய
வாங்கி வச்சிருக்கேன். என்ன, இன்னும் படிக்கதான் நேரமில்ல’
என்று வித்தியாசமான வாசகர்கள் திகிலூட்டுகிறார்கள்.

வாழ்க்கை பல சமயங்களில் ராமநாராயணன் படம் போல,
லாஜிக் பார்க்காமல் ரசிக்க சொல்கிறது. ரெண்டும் ரெண்டும்
ஐந்துதான் என்று யாராவது தீர்மானமாகச் சொன்னால்,
‘இருந்துட்டு போகட்டுமே’ என்கிறேன். சிரிப்போம்!

இன்னும், சின்னச் சின்னதாக ‘கட்டில் கீழ ஒளிஞ்சுக்கறேன்.
தேடறியாம்மா?’

——————————————
-நன்றி குங்குமம் தோழி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: