பிரதி உபகாரம் எதிர்பாராத மனப்பக்குவம் வேண்டும்!


ஒரு கடமையை நிறைவேற்றும் பொறுப்பை
மேற்கொள்பவருக்கு அதன் பலனை அனுபவிக்கும் எண்ணமோ
அல்லது பலனை எதிர்பார்க்கவோ உரிமை உண்டுதானே?

அப்படியிருக்க கிருஷ்ணன் எதிர்பார்க்காதே என்று சொல்வதில்
என்ன நியாயம் இருக்கிறது? எதிர்பார்ப்பது என்பது உலகியல்
யதார்த்தம்.

அதைக் கடந்தவன்தான் ஞானி. தான் ஆற்றும் கடமையால்
விளையும் நற்பலன்கள் பலரையும் சென்றடையுமானால்
அதற்காக எந்தப் பெருமையும் கொள்ளாமல் அடக்கமாக
அமைந்துவிடுபவன்தான் ஞானி.

எதிர்பார்த்தல் இல்லாமல் ஒரு செயலை முழு ஈடுபாட்டுடன்
செய்ய முடியுமா? முடியும், செய்யவேண்டும், அதுதான் ஞானியின்
இயல்பு என்பது கிருஷ்ணனின் வாதம்.

வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் செயல்படும்போது அதில்
கர்வம் தலைதூக்கும், ஆணவம் கூடவே வரும், மெத்தனம் மிகும்,
அதனால் அந்தச் செயலில் முழுமை இருக்காது.

அதேபோல வெற்றி கிட்டாது என்ற அவநம்பிக்கையுடன் செயல்
படும்போது மனதில் சோர்வு மண்டும், ‘இதைப் போய்ச்
செய்வானேன்,’ என்ற அயர்ச்சி தோன்றும், ஊக்கம் குறையும்,
தன்னம்பிக்கை மறையும்,

இதனாலும் அந்தச் செயலில் முழுமை இருக்காது. இறங்கியிருக்கும்
நோக்கம் நேர்மையானது; செல்லும் பாதை தர்மம் வகுத்துத் தந்த
பாதை. தொலைதூரத்தில் இலக்கு தெரிகிறது, அதை நோக்கி
உறுதியாக, தீர்மானமாக, விளைவைப் பற்றி எண்ணாமல்
பயணிப்பதுதான் உண்மையான செயலாற்றல்.

யோகஸ்த குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ ஸமோ பூத்வா ஸமத்வம் ஓக உச்யதே

‘‘தனஞ்ஜயா நீ யோகத்தில் நிலைபெற்றவனாக இருக்க
வேண்டும். எதிலும் பற்றில்லாதவனாக இருத்தல் வேண்டும்.
வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பாவிப்பவனாக
இருத்தல் வேண்டும். இதுவே நடுநிலை யோகம் என்று
சொல்லப்படுகிறது. இந்த யோகத்தை நீ கைக்கொள்ள
வேண்டும்.’’

———————————————

யோகநிலை என்பது என்ன? எந்தச் செயலும் தன்னால் செய்யப்
படுவதில்லை; அதெல்லாம் பகவானின் திருவுள்ளப்படி நடை
பெறுவதுதான் என்ற நம்பிக்கையே யோகநிலை.

உலகமே ஒரு நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள் என்று
ஷேக்ஸ்பியர் சொன்னார். ஆனால் ‘ஆட்டுவித்தால் யாரொருவன்
ஆடாதாரோ கண்ணா’ என்று நாம் நம் ‘நடிப்பை’ எல்லாம்
நம்மை ஆட்டுவிக்கும் பரம்பொருளுக்கு அர்ப்பணிக்கிறோம்.

இதுதான் யோகநிலை. பகவானால் இடப்படும் பணியை
நிறைவேற்ற வேண்டியது நம் பொறுப்பு. அதை விடுத்து நான்
செய்தது, என்னால் முடிந்தது, அதனால் இந்தப் பலன் விளைந்தது
என்று நினைத்துக் கொண்டிருப்பதும், சொல்லிக் கொண்டிருப்பதும்
எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! இந்தப் பிரபஞ்சம் பரந்தாமனின்
வீடு.

அதில் சிலநாட்கள் நாம் வாழ நம்மை அவன் அனுமதித்திருக்கிறான்.
ஆகவே இந்த பிரபஞ்சத்தில் எனது, எனக்குரியது என்று சொந்தம்
கொண்டாட நமக்கு உரிமையில்லை. இது எப்படி என்றால்,
நம் வீட்டில் மூட்டைப்பூச்சி இருக்கும், பல்லி இருக்கும், கரப்பான் பூச்சி
இருக்கும், எலி இருக்கும்.

இவையெல்லாம், அந்த வீடு தங்களுக்குதான் சொந்தம் என்று
நினைக்கலாகுமா, அதுபோலதான்! ஒரு வீட்டின் வேலைக்காரன்,
தன்னுடைய எஜமானர் தன்மீது மிகுந்த அன்பு பாராட்டுவதைப்
பார்த்து தான் அவருக்குச் சமமானவன் என்று நினைத்துக்
கொள்ளலாமா? எஜமானரின் செல்வங்கள், சொத்துகளில் அவன்
உரிமை கொண்டாட முடியுமா?

அவர் இடும் கட்டளையை நிறைவேற்றுவதுதான் அவனுடைய
வேலையே தவிர வேறு எந்த சொந்தமும் அவன் கொண்டாட
முடியாது. அப்படி கொண்டாட அவன் முயற்சித்தானானால்,
அவன் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டியிருக்கும்!

————————————————

இரண்டு நண்பர்கள். ஒருவன் ஒரு நிறுவனத்தின் முதலாளி.
இன்னொருத்தன் ஒரு தொழிற்சாலையில் உயர் அதிகாரி.
ஒரு கட்டத்தில் அதிகாரிக்கு வேலை போய்விடுகிறது.

முதலாளி நண்பனிடம் வெகு தயக்கத்துடன், பல நாட்கள் கழித்து
தான் வேலையிழந்த செய்தியைத் தெரிவிக்கிறான். உடனே
முதலாளி கோபித்துக்கொள்கிறான்: ‘‘இத்தனை நாட்களை
வீணாக்கிவிட்டாயே. வேலை போனவுடனேயே என்னை வந்துப்
பார்த்திருக்க வேண்டாமா? சரி, இப்போதும் ஒன்றும் கெட்டுப்
போய்விடவில்லை; என் நிறுவனத்தில் உனக்கு ஒரு வேலை
போட்டுத் தருகிறேன், நிம்மதியாக இரு.’’

நட்பிற்குப் பெருமை சேர்க்கும்வகையில் பெருந்தன்மையுடன்
முதலாளி நண்பன் சொன்னதற்குப் பெரிதும் நன்றி தெரிவித்தான்
அதிகாரி நண்பன். ‘‘வெளியே என் செயலர் இருப்பார், அவரிடம்
நான் இண்டர்காமில் பேசுகிறேன். அவர் உனக்கு பணி உத்தரவுக்
கடிதத்தைக் கொடுப்பார், போய்ப் பெற்றுக்கொள்,’’ என்று,
நண்பனின் கண்களில் பளபளத்த நன்றிக்கு நெகிழாமல்
திடமான குரலில் சொன்னான் முதலாளி நண்பன்.

அதிகாரி நண்பன் நன்றி தெரிவிக்க வார்த்தைகள் கிடைக்காமல்
தடுமாறி, சற்றே உடல் நடுங்க, முதலாளி நண்பனின் அறைக்
கதவைத் திறந்து வெளியே செல்ல முற்பட்டபோது, அந்த நண்பன்
சொன்னான்: ‘‘இதோ பார், இப்போதுவரை நீயும், நானும்
நண்பர்கள். நட்புப் பழக்கத்தில் நமக்குள் எந்த வேற்றுமையும்
இல்லை.

ஆனால், நாளை முதல் நான் உன் முதலாளி, நீ என் பணியாளன்.
இதை நினைவில் வைத்துக்கொள். நம் நட்புக்கு, அது சார்ந்த
உரிமைக்கு இன்றோடு காலக்கெடு முடிந்துவிட்டது.

‘‘ இதுதான் வாழ்க்கை. பற்று கொள்வது என்பது, சலுகை பெறுவது
என்பது, உரிமை கோருதலாக மாறிவிடக்கூடும் என்பதற்காகவே
பகவான் பற்றை அறவே விடு என்று உபதேசிக்கிறான்.

இவ்வாறு பற்றற்ற வாழ்வை மேற்கொண்ட ஒரு சிறந்த மனித
உதாரணம் – குசேலன். துவாரகாபுரி மன்னன் கிருஷ்ணன்

தன்னோடு குருகுலத்தில் ஒன்றாகப் படித்தவன்தான். காலப்
போக்கில் அவன் மன்னனானான்; தான் வறுமைக்கு வாரிசானான்.

அப்போதும் குசேலன் மனத்தளவில் மன்னனாகவே இருந்தான்.
வறுமை அவன் உடலை வதைத்தாலும் மனதை உறுத்தவில்லை.
பஞ்சம், பட்டினி என்று மனைவியும், குழந்தைகளும் பரிதவித்த
போதும் அவன் தன் கடமையை மட்டுமே செய்துகொண்டிருந்தான்;
பலனைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனைவி சுசீலை மட்டும்
ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் கணவனை உதவி
பெற்று வரும்படி கிருஷ்ணனிடம் விரட்டினாள்.

கிருஷ்ணனை சந்தித்தபோதுகூட அவனது உபசரணைகளை
ஏற்றுக்கொண்டானே தவிர, தனக்குப் பொருள் வேண்டும் என்று
யாசிக்கவில்லை. ‘எனக்கு எப்போது தரவேண்டும், என்ன
தரவேண்டும் என்பது பகவானுக்குத் தெரியும்; நான் கோருவதற்கு
என்ன இருக்கிறது?’ என்று மனைவியிடம் பேசியதையே
இப்போதும் நினைத்துக்கொண்டான்.

கிருஷ்ணனாக அவனுடைய நிலையை உணர்ந்து அவனுக்கு
சகல ஐஸ்வர்யங்களையும் அளித்தான்.
ஆனால், தன் இருப்பிடத்திற்குத் திரும்பிய குசேலன், தன் வீடு
செல்வச் செழிப்பால் நிறைந்திருந்ததைப் பார்த்துப்
பரவசமடையவில்லை; ஆனந்தத்தில் குதிக்கவில்லை.

‘இதுவும் அவன் விருப்பமே’ என்று கிருஷ்ணனுடைய செயலாகத்தான்
கருதினான். அதோடு அந்த செல்வத்தை வறுமையில் வாடிய வேறு
பலருக்கு மனமுவந்து பகிர்ந்தளித்தான். அதாவது, செல்வம் வந்த
போதும் அவன் ஆர்ப்பரிக்கவில்லை, பிறருக்குக் கொடுத்துக்
கொடுத்துக் குறைந்த போதும் குறைபட்டுக்கொள்ளவில்லை.

நடுநிலை மனசு என்பது தராசு முள் போன்றது. அது நிலையானது.
ஆசாபாச தட்டுகளில் எடை சேரும்போதுதான் அது தடுமாறுகிறது.
எடை ஏதுமின்றி இருந்துவிட்டாலோ அல்லது சம எடை இரு தட்டுகளிலும்
இருந்துவிட்டாலோ நேராக, கம்பீரமாக அதன் முனை மேல்நோக்கிப்
பார்த்தபடி நிற்கிறது.

அதாவது, மனது நிர்மால்யமாக இருத்தல் வேண்டும்;
பரிசுத்தக் கண்ணாடியாகத் திகழவேண்டும். ஆனால், நடைமுறை
வாழ்க்கையில் அது சாத்தியமில்லை. சுகமும், துக்கமும் காணாமல்
எந்த மனித வாழ்க்கையும் கழிந்ததில்லை.

அப்படி ஒரு தட்டு சுகத்தைச் சுமக்குமானால் அந்த எடையால்
அது கீழ்நோக்கி இறங்கும்போது தராசு முள் அதன் பக்கம் சாயும்;
அதேபோல அடுத்தத் தட்டில் துக்கம் சேருமானால் அதன் எடை
அளவைப் பொறுத்து முள் அந்தப் பக்கம் சாயும். ஆனால்,
சுகத்தையோ, துக்கத்தையோ அது வந்தாலும் அதைப் பொருட்
படுத்தாமல், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இதெல்லாமும்
பரந்தாமனின் அருட்கொடை என்ற உணர்வில் எதிர்
கொண்டோமானால் அந்த சுகத்துக்கும் சரி, துக்கத்துக்கும் சரி
எடையே இருக்காது.

அது ஒரு சம்பவ பாரமாகவே நிகழ்ந்தாலும், உணர்வுபூர்வமாக
அதற்கு எடை கூடாது. ஆகவே தராசு முள் தடுமாறாது; நிமிர்ந்து நிற்கும்.

தூரேண ஹ்யவரம்கர்ம புத்தியோகாத் தனஞ்சய புத்தௌ சரணமன்விச்ச
க்ருபணா பலஹேதவ

‘‘சலனமற்ற, எதிர்பார்த்தலில்லாத செயலே மேன்மையானது.
மாறாக சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விளைவுகளை
எதிர்பார்த்துச் செயலைச் செய்பவன் கடைநிலை மனிதனாவான்.
அர்ஜுனா நீ மேன்மையானவனாகத் திகழவேண்டும்;
கடையனாக மாறிவிடாதே.

’’நாம் இந்த உதவி செய்தால் அவர் நமக்குப் பிரதியுபகாரமாக என்ன
செய்வார் என்ற எதிர்பார்த்தலினால் நாம் செய்யும் உதவிக்கே
மதிப்பில்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்லாமல், எதிர்பார்த்த
அளவுக்கு அந்தப் பிரதியுபகாரம் இல்லாதுபோய்விட்டால் அந்த நபர்
மேல் கோபமும் வருகிறது! அல்லது எதிர்பார்த்த அளவுக்கே அது
இருக்குமானால், ‘இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்,
இவ்வளவு கஞ்சத்தனமாக இவர் இருக்க வேண்டாம்’ என்று அந்த
நபரை மனசுக்குள்ளாவது வதைக்கும் வன்மமும் பெருகும்!

—————————————————-

ஒரு பிரயாணத்துக்காக நாம் பெட்டி, பைகளுடன் ரயில் நிலையத்துக்கு
வருகிறோம். போர்ட்டர் ஓடோடி வருகிறார். அன்புடன் நம்மிடம் நாம்
எந்த ரயிலில் போகவேண்டும் என்று கேட்கிறார்.

எந்தப் பெட்டி, எந்த எண் இருக்கை என்றெல்லாமும் விசாரிக்கிறார்.
நாம் பதில் சொல்வதற்கு முன்னாலேயே நம்மிடமிருந்து நம்
பொருட்களை வாங்கிக்கொள்கிறார். எல்லா சுமைகளையும் தன்
தலை, தோள்கள் மீது ஏற்றிக்கொண்டு மிச்சமிருக்கக்கூடிய பைகளைக்
கைகளில் பற்றியபடி வேகமாக நாம் குறிப்பிட்ட ரயில் பெட்டியை
நோக்கிச் செல்கிறார்.

இதற்கிடையில் நாம் அவரிடம் அவருடைய இந்த சேவைக்கான
கட்டணத்தைக் கேட்கிறோம், பேரம் பேசுகிறோம். இருவருக்கும்
உடன்பாடான ஒரு தொகை சம்மதமாகிறது. அப்போதும், ‘இன்னும்
கூட கேட்டிருக்கலாம்,’ என்று போர்ட்டரும், ‘இன்னும் குறைச்சுப்
பேசியிருக்கலாம்’என்று நாமும் மனச்சுளிப்போடு ரயில்பெட்டியை
நோக்கிப் போவோம்.

நம் இருக்கைக்கு அடியிலோ மேலேயோ நம் பொருட்களை வைக்கும்
போர்ட்டர் பேசியபடி ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு போவார்.
இருவரும் பரஸ்பரம் ‘நன்றி’ சொல்லிக்கொள்ள வேண்டிய
அவசியமும் இங்கே எழாது! இதேபோன்ற இன்னொரு பயண
சந்தர்ப்பத்தில் நாம் கொண்டுசெல்லும் பெட்டிகளை நமக்கு முன்பின்
தெரியாத ஒருவர் ஓடோடிவந்து வாங்கிக்கொள்கிறார்.

‘‘நானும் இந்த ரயிலுக்குதான் போகிறேன். எனக்கு லக்கேஜ் எதுவும்
இல்லை, உங்க பெட்டியைக் கொடுங்க, நான் எடுத்துக்கொண்டு
வருகிறேன்,’’ என்று சொல்லி நம் பெட்டியைத் தான் வாங்கிக்
கொண்டு நம் பாரத்தைக் கொஞ்சம் குறைக்கிறார்.

இந்த நண்பர், தான் செய்யும் இந்த உதவிக்குப் பிரதிஉபகாரமாக
நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. நம் இருப்பிடத்துக்கு
வந்து நம் பெட்டியை வைக்கும் நண்பருக்கு நாம் உளமாற நன்றி
சொல்கிறோம். அந்த வார்த்தையளவிலான பலனையும் எதிர்பார்க்காத
நண்பர் புன்முறுவலுடன் நம்மை விட்டுச் சென்றுவிடுகிறார்.

இங்கே பலனை எதிர்பார்த்து வினையாற்றுகிறவர் போர்ட்டர்.
எந்தப் பலனையும் எதிர்பாராமல் பிறருக்கு உதவுவது தம் பணி
என்ற கொள்கையில் செயல்பட்டவர் நண்பர்!

தன் சேவைக்காக, அதன் மதிப்பையும் விஞ்சிய அளவுக்கு நம்மிடம்
போர்ட்டர் சேவைத்தொகை வாங்கியிருந்தாலும் அதற்காக அவர்
வருத்தப்படப் போவதில்லை. அது அவருடைய மனோபாவம்.

அதேபோல நமக்காக பாரம் சுமந்துவந்த நண்பரும், நாம் நன்றி
சொல்லாவிட்டாலும், அதற்காக வருத்தப்படப்போவதில்லை.
இது இவர் மனப்பக்குவம்.

சேவைக்காகப் பணம் பெறுவதோடு அந்தச் சம்பவம் உடனடியாக
மறக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், பிரதிபலன் எதையும் எதிர்பாராதவர்
மேன்மேலும் ஊக்கம் கொண்டு அறிமுகமில்லாத பிற அநேகம்
பேருக்கும் தன் சேவையைத் தொடர்வார்.

ஏனென்றால் இவரிடம் சுயநலம் இல்லை; பாரம் சுமந்ததனால்
ஏற்பட்ட உடல் நலிவை இவர் பொருட்படுத்தவில்லை; அதனால்,
தான் உதவியவர் அடையும் நிம்மதியும், சந்தோஷமுமே இவருடைய
சேவைக்கான கட்டணம்!

இப்படி பலன் எதிர்பாரா சேவையை மேற்கொள்பவர் இந்த
மனப்பக்குவத்தை மேலும் வளர்த்துக்கொள்வதில்தான் ஆர்வம்
கொண்டிருப்பாரே தவிர, எத்தனை பேருக்கு உதவினோம்,
எப்படியெல்லாம் உதவினோம் என்று கணக்கு எதுவும் வைத்துக்
கொள்ள மாட்டார்.

இத்தகைய, பலன் நோக்காத நிஷ்காமிய கர்மாவை அர்ஜுனன்
புரியவேண்டும் என்று அறிவுறுத்துகிறான் கிருஷ்ணன்.

—————————————————-

ஸ்வாமி ஸ்ரீதேஜானந்த மகராஜ்

நன்றி ஆன்மீக பலன்
பகவத் கீதை – 14
தினகரன் – ஆன்மிகம்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: