கண் நலம் காப்போம்!

ண்கள், நம் உடலின் ஜன்னல்கள். நாம் இந்த உலகைக் காணவும், இயற்கையின் அழகை, அற்புதத்தை அனுபவமாக்கிக்கொள்ளவும் உதவும் கண்களை, பஞ்சபூதங்களில் நெருப்புக்கு இணையாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில், நீண்டநேரம் கணிப்பொறி மற்றும் டி.வியைப் பார்ப்பது, விளக்கை அணைத்துவிட்டு நள்ளிரவு வரை மொபைல் பார்ப்பது என்று கண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். மறுபுறம் ஆரோக்கியமற்ற உணவுகள் நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும்  பாதிக்கும்போது, கண்களும் பாதிப்பு அடைகின்றன.  இயற்கையான முறையில் கண்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் எப்படி எனக் காண்போம்.

கண்ணும் சித்தாவும்… 

நமது உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். பித்தம் சிறிது அதிகரித்தாலும் கண்பார்வையைப் பாதிக்கும். உதாரணமாக, பித்தம் அதிகரிப்பதால் காமாலை வருகிறது. இதனால், பார்வை பாதிப்படைகிறது. நாம் அன்றாடம் பருகும் காபி, தேநீரில் உள்ள காஃபின் ரசாயனம் முதல் சமைக்கப் பயன்படுத்தும் புளி வரை பல உணவுகளில் பித்தம் உள்ளது. சிலருக்கு, சைனஸ் பிரச்னையால் முன் நெற்றியிலும் கண்களுக்குக் கீழேயும் நீர் கோத்து, பார்வைக் கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நெடுங்கால மலச்சிக்கலால் ஏற்படும் உடல் அழுத்தத்தால் சிலருக்குப் பார்வைக் கோளாறு ஏற்படலாம். அதீத உடல் சூட்டினால் கண் சிவப்பாகுதல், ஒவ்வாமை ஏற்படும்.

பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்

கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இளநீர், நுங்கு, நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

வைட்டமின் ஏ அதிகமாக உள்ள பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.

கண்ணில் ஏற்படும் புரை மற்றும் இதர கண் நோய்களுக்கு பொன்னாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து.

கண்ணைக் காக்கும் திரிபலா

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் கலவையே திரிபலா சூரணம். இந்தச் சூரணம் ‘கர்ப்ப மாத்திரை’ என்ற பெயரில் சித்த மருந்துக் கடைகளில் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்கூட இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை, தினமும் தேன் அல்லது நெய்யில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவருவதால் கண் நரம்புகள் வலுவடைகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் நீங்கும். குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சிய நெய்யில் திரிபலா சூரணத்தைக் குழைத்துக் கொடுப்பது நல்லது. இதனால், தசைகளுக்குள் மருந்து சுலபமாக ஊடுருவிச்செல்கிறது.

எண்ணெய்க் குளியல்

தட்பவெப்பம் மற்றும் காலநிலை மாறும்போது மெட்ராஸ் ஐ போன்ற காற்று மூலம் பரவும் நோய்தொற்றுகள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் கண்ணில் உள்ள நீர் வற்றிப்போகிறது. ஆடிமாதக் காற்றில் பல கிருமிகள் கண்களைப் பாதிக்கின்றன. குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு, அடுக்குத்தும்மல், கண்களைச் சுற்றி நீர்கோத்தலால் கண்கள்  கன்ஜங்ட்டிவிடிஸ்  (Conjunctivitis) பாதிப்புக்கு உள்ளாகின்றன. சனிக்கிழமை  நல்லெண்ணைக் குளியல்  இதற்கு நல்ல தீர்வு. கடுக்காய்த்தூள், நெல்லிக்காய், மிளகு, வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சளை நன்கு பொடியாக அரைத்து, பாலில் கலந்தால் கிடைப்பதுதான் பஞ்சகல்பம். இதை, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளித்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

சித்தா சிகிச்சைகள்

மரமஞ்சள், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலவையை ‘இளநீர்க்குழம்பு’ என்பார்கள். இது, கண்புரையைத் தடுக்கிறது. `அதிமதுரம்’ என்ற பசைபோன்ற சித்த மருந்தை வெயில் காலங்களில் கண்ணுக்கு மையிட்டுக்கொள்வதைப்போல கீழ் இமைகளின் அடியில் பூசிக்கொள்வதன் மூலம், கண் சூட்டைத் தணிக்கலாம். இந்த முறைகளை சித்தமருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.

– வி.மோ.பிரசன்ன வெங்கடே

டாக்டர் விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: