ஆனந்த ரங்கம் பிள்ளை 10

-ஆனந்த ரங்கம் பிள்ளை – மார்ச் 30, 1709 -ஜனவரி 16, 1761- (அகவை 51)
—————-

நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) – அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 சென்னை பெரம்பூரில் (1709) பிறந்தவர். பாண்டிச்சேரியில் குடியேறிய தந்தை, அரசுப் பணியில் சேர்ந்து, திவானாகப் பதவி உயர்வு பெற்றார். எம்பார் என்பவரிடம் கல்வி பயின்ற ஆனந்த ரங்க பிள்ளை, அரசுப் பணிகளில் அப்பாவுக்கு உதவி யாக இருந்தார். பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளக்ஸின் மொழி பெயர்ப்பாளராக 1747-ல் நியமிக்கப்பட்டார்.

பல தொழில்கள் செய்தார். சொந்தமாக கப்பல் வைத்திருந்தார். தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளைக் குறிப்புகளாக எழுதிவைக்கும் பழக்கம் கொண்டவர்.

 பன்மொழிப் புலமை படைத்த இவர் இந்திய மன்னர்கள் பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார். முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாக, ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார்.

 மக்கள் மத்தியில் மன்னருக்கு நிகரான செல்வாக்கு பெற்றிருந்தார். 1749-ல் ‘துபாஷி’ பட்டத்தை ஆளுநர் இவருக்கு வழங்கினார்.

 ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.

 மன்னர்களின் குணங்கள், ஆங்கிலேயரின் போக்கு, மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

 இவை அனைத்தும் எளிய தமிழில் உள்ளன. இவரது நாட்குறிப்புகளின் பெரும் பகுதி வணிகச் செய்திகளை உள்ளடக்கியவை. பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளையும் இவரது குறிப்புகள் எடுத்துக்கூறுகின்றன.

 உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (Samuel Pepys) இவரை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் பெப்பீஸ்’ எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகிறார்.

 இவரைப் பற்றி பல பாடல்கள், புத்தகங்கள் எழுதப்பட்டுள் ளன. இவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே இவரது நாட்குறிப்புகள் கிடைத்தன. பிரெஞ்சு அரசாங்கம் இவற்றை பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து 8 தொகுதிகளாக வெளியிட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

 1736 முதல் 1753 ஆண்டு காலம் வரையிலான நாட்குறிப்புகள், தமிழில் 8 தொகுதிகளாக வந்தன. அதன் பிறகு அவர் எழுதிய நாட்குறிப்புகள் இன்னமும் தமிழில் வெளிவரவில்லை. தமிழ் எழுத்துலகின் ஒரு புது இலக்கிய வடிவத்துக்கு முன்னோடியான ஆனந்த ரங்கம் பிள்ளை 51 வயதில் (1761) மறைந்தார்.

ராஜலட்சுமி சிவலிங்கம்
தமிழ் தி இந்து காம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: