–
–
‘ஃபோர்ப்ஸ்’ எனும் உலக அளவில் பிரபலமான வணிக இதழ், அமெரிக்காவில் 40 வயதுக்குள் உள்ள தொழில்முனைவோர் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தமிழர்!
இந்தப் பட்டியலில் 40வது இடத்தில் அபூர்வா மேத்தா 40 கோடி டாலர் மதிப்புடன் உள்ளார். 29 வயதான அபூர்வா மேத்தா ‘இன்ஸ்டாகார்ட்’ என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.
தமிழர்கள் தங்களின் ‘காலரை’ தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஆம்! 33வது இடத்தில் 30 வயதான விவேக் ராமசுவாமி உள்ளார்.
விவேக் ராமசுவாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. வேலைக்காக ‘திரை கடல் ஓடியும் திரவியம்’ தேடச் சென்ற இவரின் தந்தை சென்ற இடம் அமெரிக்கா. அங்கு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்தார். விவேக்கின் அம்மா மனநல மருத்துவர்.
உலகின் முன்னணி பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் இளநிலைப் பட்டம் படித்த விவேக், 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத் தலைவராக இருந்திருக்கிறார். இவர் ஒரு டென்னிஸ் வீரரும் கூட.
‘ஆக்ஸோவான்ட் சயின்ஸஸ்’ என்ற பயோடெக்னாலாஜி நிறுவனத்தை நிறுவிய இவர், இதுவரை 33 மருந்துகளுக்குக் காப்புரிமையைப் பெற்றிருக்கிறார். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 11 மாதங்களிலேயே பயோடெக்னாலஜி துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
ரூ.33 கோடி முதலீட்டோடு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம். குறுகிய காலத்திலேயே பொதுப் பங்கு வெளியீடு(ஐ.பி.ஓ.) மூலம் 360 மில்லியன் டாலர் திரட்டியிருக்கிறது. இதற்கு முன்னதாக ரோவியண்ட் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி அதிலிருந்து வெளியேறினார்.
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்களுக்கு மருந்து கண்டுப்பிடிப்பதே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஆக்ஸோவான்ட் நிறுவனம்.
பல்வேறு நிறுவனங்களில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த விவேக் ராமசுவாமியின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 3318.75 கோடி. ஆனால் இவரை ‘பிஸினஸ் மேக்னட்’ என்று சொன்னால் ‘அப்படி எல்லாம் இல்லை. நான் ஒரு ‘ஆக்ஸிடென்டல் ஆன்ட்ரப்ரெனுவர் (தற்செயலான தொழில்முனைவோர்)’ என்று கூறுகிறார்.
=
தமிழ் தி இந்து காம்
மறுமொழியொன்றை இடுங்கள்