புத்திசாலி மனைவி!

ஓர் ஊரில் செல்வா என்ற உழவன் இருந்தான்.
முட்டாளான அவனுக்கு வாய்த்திருந்த மனைவி
அறிவுள்ளவளாக விளங்கினாள்.

ஒருநாள் செல்வாவும், அவன் நண்பனும் வயலில் ஏற்றம்
இறைத்துக் கொண்டு இருந்தனர். மதிய உணவு நேரம்
வந்தது. இருவரும் வேலையை நிறுத்திவிட்டு, தங்கள்
சாப்பாட்டுக் கூடையை எடுத்து உண்ணத் தொடங்கினர்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் நண்பனுக்கு
புரையேறிவிட்டது. தன் தலையில் தானே தட்டிக் கொண்டு,
இருமிக் கொண்டிருந்தான்.

“”ஏன் இப்படி இருமுகிறாய்?” என்று கேட்டான் செல்வா.

“”என் மனைவி என்னை நினைக்கிறாள். அதுதான்
எனக்குப் புரையேறிவிட்டது. வேறொன்றும் இல்லை,”
என்றான் அவன்.

சாப்பிட்டு முடிப்பதற்குள் மீண்டும், மீண்டும் அவனுக்கு
நான்கைந்து முறை புரையேறி விட்டது.

இதைக் கண்ட செல்வா, “இவன் மனைவி எப்போதும்
இவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அதனால்
தான் இவனுக்கு அடிக்கடி புரையேறுகிறது. என் மனைவி
என்னை ஒருமுறை கூட நினைப்பதில்லை. அதனால்தான்
எனக்குப் புரையேறவில்லை. வீட்டிற்கு போய் அவளை
என்ன செய்கிறேன்’ பார் என்று மனதிற்குள் கறுவினான்.

மாலை நேரம் வந்தது. வேலை முடிந்து வீடு திரும்பிய
செல்வாவால், கோபத்தை அடக்க முடியவில்லை.

முரடனான அவன் தன் மனைவியை, ஓங்கி ஓர் அடி
அடித்தான்.

“”எதற்காக என்னை அடிக்கிறீர்கள்?” என்றாள்.

“”அடியே உனக்கு நான் என்ன குறை வைத்தேன். உன்னை
அன்பாகத்தானே பார்த்துக் கொண்டேன். நீயோ நான்
வீட்டை விட்டுச் சென்றால், என்னை மறந்துவிடுகிறாய்,”
என்று கத்தினான்.

“”நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரிய
வில்லையே?” என்றாள்.

மதியம் சாப்பிடும்போது நடந்த விஷயத்தை விவரித்தான்.

முட்டாளான தன் கணவனுக்கு, புத்தி புகட்ட திட்டமிட்டாள்.

மறுநாள் வழக்கம் போல செல்வாவும், நண்பனும் மதியம்
உண்பதற்காக அமர்ந்தனர். செல்வா சாப்பாட்டுக் கூடையை
அவிழ்த்தான். அதனுள் மிளகு சாதம் இருந்தது.

அதனுள்ளிருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போட்டான். மிகக்
காரமாக இருந்தபடியால் கண்ணிலும், மூக்கிலும் நீர் வரத்
தொடங்கியது. சிறிது நேரத்தில் புரையேறி அடுக்கடுக்காக,
தும்மத் தொடங்கினான்.

உடனே நண்பனைப் பார்த்து, ” என் மனைவி என்னை
நினைக்கிறாள். அதனால் தான் இப்படி…’ என்று சொல்லிவிட்டு,
அடுத்த ஒரு பிடி உண்டான்.

மீண்டும் அடுக்கடுக்காக பலமான தும்மல் ஒன்றன்பின்
ஒன்றாக வந்து கொண்டு இருந்தது.

“ஐயோ என்னை நினைக்கச் சொன்னதற்காக இப்படியா
ஓயாமல் நினைப்பது. என்னால் தும்மலை அடக்க முடிய
வில்லையே. நேற்று என்னை நினைக்காத தற்காக அடி
வாங்கினாய். இன்று அதிகம் நினைத்ததற்காக உதை
வாங்கப் போகிறாய்’ என்று புலம்பினான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நண்பன்,
செல்வாவின் அறியாமையைக் கண்டு உள்ளுக்குள்
சிரித்துக் கொண்டான்.

மாலை வீடு திரும்பிய செல்வா தன் மனைவியைப் பார்த்து,
“நீ வழக்கம் போலவே இரு. இன்று நினைத்துக் கொண்டிருந்தது
போலச் செய்யாதே. அந்தத் தொல்லையை என்னால் தாங்க
முடியாது,” என்றான்.

தன் சூழ்ச்சி வெற்றி பெற்றதை நினைத்து மனைவி மகிழ்ந்தாள்.

———————————
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: