ஒன் ஸ் மோர்

புத்தகப் பிரியர்களை நாமெல்லாம் புத்தகப் புழுக்கள் என்று
கூறுவதுண்டு. அதுவும் ஒருவகையில் சரிதான்.
மண்புழுக்கள் எப்படி மண்ணைப் புரட்டிப் போட்டு நிலத்தைப்
பண்படுத்துகின்றனவோ அப்படிப் புத்தகப் புழுக்களும் நம்மைப்
புரட்டிப் போட்டு தம் மனத்தைப் பண்படுத்திக் கொள்வதோடு
சமூகத்தையும் பண்படுத்த உதவுகின்றனர்.

பெட்ரண்ட் ரஸ்ஸல் தன்னுடைய கல்லறையில் தன்னை ஒரு
புத்தகப் புழுவென்று எழுதி வைக்க வேண்டியதாய் கூறுவார்கள்.
நல்ல நூல்கள் நம் எல்லாரையும் “”படி படி” என்று படிக்கத்
தூண்டுகின்றன.

ஒருமுறை உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக
அரங்கத்தின் படிகளில் மெல்ல ஏறிக் கொண்டிருந்தபோது
உதவிக்கு வந்த சிறுவன் ஒருவன் அவர் கவனமாகப் படியேற
வேண்டும் என்ற நோக்கில், “”தாத்தா… படி… தாத்தா படி…” என்று
நினைவூட்டிக் கொண்டிருந்தான்.

“”நிறைய படித்துக் கொண்டிருக்கிற நான் படிப்பதை நிறுத்தி
விடக்கூடாது என்ற நோக்கில் அந்தச் சிறுவன் என்னை “”தாத்தா
படி, தாத்தா படி” என்று படிக்க நினைவூட்டிக் கொண்டு வந்தான்
என்று விளையாட்டாகச் சொல்லி மகிழ்ந்த செய்தி ஒன்று உண்டு.

நம்மைச் சிலிர்க்கச் செய்யும் ஒரு வரலாற்றுச் செய்தி.
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் அரிய புத்தகங்கள் பலவற்றோடு
ஹுப்ளி நதியில் படகில் பயணிக்கிறார். படகில் எடை அதிகமாய்
இருப்பதால் மூழ்கும் அபாயம். படகோட்டி பாரத்தைக் குறைப்பதற்குச்
சில புத்தகங்களை நதியில் வீச வேண்டியபோது, “”புத்தகங்களை
வெளியே வீச வேண்டாம்” என்று தடுத்து விட்டுத் தாமே
படகிலிருந்து குதித்து நதியில் நீந்தி வந்திருக்கிறார் யுவான் சுவாங்.

புத்தகங்களைக் காப்பதில் அவருக்கிருந்த இந்த அக்கறையும்
நிகழ்ச்சியும் உலகறிந்த வரலாற்றுச் செய்தியாகும்.

கேரளத்துப் பெரியார் என்று அழைக்கப்படும் ஆன்மிகப் புரட்சியாளர்
நாராயண குரு அவர்கள்கூட திருப்புகழ், திருமந்திரம், திருக்குறள்
போன்ற நூல்களை வாங்குவதற்காகக் கூலி வேலை செய்தார்
என்று கேள்விப்படுகிறோம்.

உவமைக் கவிஞர் சுரதா அவர்களும் புத்தகங்கள் திரட்டுவது,
படிப்பது என்று தன் பெரும்பகுதி வாழ்வைக் கழித்தவர்.
அவர் வீடு முழுக்கப் புத்தகங்கள்தாம். அவருடைய அறைக்
கட்டிலைப் புத்தகங்களும் செய்தித்தாள்களுமே ஆக்கிரமித்திருக்கும்.
அவர் கீழே தரையில் படுத்திருப்பார். புத்தகங்கள் கட்டிலில்
படுத்திருக்கும்!

ரஷ்ய அதிபர் லெனின் தன் பிறந்த நாளின்போது புத்தகங்களைத்தான்
பரிசளிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும்
அன்பு வேண்டுகோள் விடுத்ததாய்க் கூறுவதுண்டு. அப்படிச் சேகரித்த
புத்தகங்கள்தாம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகத்தை
நிரப்பியிருக்கிறதாம்!

பெர்னாட்ஷா தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை லண்டன்
நூலகத்தில் கழித்ததாகக் கூறுவர். தொடக்க காலங்களில் வறுமை
காரணமாக நல்ல ஆடைகள் அவருக்குக் கிடையாது.

பொது இடங்களில் காணப்படுவதைவிட நூலகங்களில் அடைபட்டுக்
கிடத்தல் நல்லதெனச் சொல்லத் தொடங்கியவர் நாளடைவில் படிப்பு
ருசியில் படித்ததன் விளைவாக எழுதும் உந்துதலைப் பெற்றாராம்.

அதேபோன்று அறிஞர் இங்கர்சாலை வீட்டை விட்டு ஒருநாள்
துரத்தியிருக்கிறார்கள். ஒரு நூலகம்தான் அவருக்கு அடைக்கலம்
கொடுத்துள்ளது.

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன்
சென்றபோது, “”எங்கே தங்க வேண்டும்?” என்று நண்பர்கள் கேட்ட
போது, “”எங்கு தங்கினாலும் தங்குகிற இடத்துக்கு அருகே ஒரு
நூலகம் இருக்க வேண்டும்” என்று வேண்டியிருக்கிறார்!

கோகலே தம்முடைய திருமணத்தின்போது, “”வரதட்சிணை வேண்டாம்.
உங்கள் திருப்திக்காகக் கொடுக்க விரும்பினால் நூல்களாகவே
கொடுத்து விடுங்கள்” என்று வேண்டியதாகச் சொல்வதுண்டு.

எம்.ஜி.ஆர். நூல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
அவருடைய வீட்டில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்தது.
தன்னம்பிக்கை எழுத்தாளர் அப்துற் ரஹீம் நூலகம் திறக்கும்போது
முதல் ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியே
வருவார்!

இப்படிப் புகழ் வாய்ந்த பெருமக்கள் வாழ்வில் நூல்களும், நூலகங்களும்
பெரிதும் தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. கொடுங்கோலனாக
விளங்கிய ஹிட்லர்கூட லண்டன் மீது படையெடுத்தபோது,
“”லண்டன் நூலகத்தை அழித்து விடாதீர்கள்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
நூலகங்களைக் கவியரசர் கண்ணதாசன் “ஞானவான்கள் வாழும் ஆலயம்’
என்பார்.

“”அட்டையிட்ட அமுதமல்லவா புத்தகம்” என்பார் கவிஞர் வைரமுத்து.
புத்தகங்களைப் பாதுகாப்பதென்பது ஒரு புதையலைக் காப்பதற்கு ஒப்பானது.

———————————————-

கேசி
தினமணி கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: