சூடான இட்லி சாம்பார்

புரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, ‘அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்’ என்று பதிலளித்தான்.

மலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக உணவாக உபயோகிக்கும் காளான்களை இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் மிகச்சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருளாக சிபாரிசு செய்கிறார்கள். இப்போது இந்தக் காளான்களை திருமண வீடுகளில்கூடப் பரிமாறுகிறார்கள். இதில் நீர்ச் சத்தும் முழுமையான புரதச் சத்தும் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என்று எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம்.

நம் உணவில் பருப்பு வகைகள் முக்கிய அளவு புரதத்தைத் தருகின்றது. ‘ஏழையின் இறைச்சி’ என்று மேல் நாட்டினரால் அழைக்கப்படும் பருப்பு வகைகள், நம் உணவு முறையில் முக்கியத்துவம் வகிக்கிறது. பருப்பு வகையில் இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவைவிட புரதத்தின் தரம் குறைவாக இருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு தேவையான அளவு மற்ற உணவுகளில் பருப்பு வகைகளில் இல்லாத அமினோ அமிலங்களைப் படைத்திருக்கிறது. இயற்கைக்குத்தான் நம் மீது எத்தனை கருணை. பருப்பு மற்றும் அரிசியின் கலவையில் நாம் சமைக்கும் உணவுகள், புரத அளவிலும் தரத்திலும் முழுத்தன்மை அடைகிறது. நாம் இந்த நுணுக்கங்களை பெரிதாக ஆராயாமல் இருக்கலாம்.

அன்றாடம், சராசரி குடும்பங்களில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் உட்கொள்கிறார்கள். காலை உணவாக பிரசித்தி பெற்ற இட்லி மற்றும் தோசையின் கலவையைக் கவனிப்போம். அரிசியில் லைசீன் (lysine) குறைவாக உள்ளது. உளுந்து வகையில் மிதியோநைன் (methonine) என்ற அமிலோ அமிலம் குறைவாக உள்ளது. இவை இரண்டும் 4:1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து, இட்லி, தோசை என்று உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப புரத அளவு முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.

1980-களில் அரிசிக்கும் கோதுமைக்கும் போட்டி. 90-களில் சீரியல்ஸ் என்று பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் பிரசித்தி பெற்றது. 2000-ல் காலை உணவாக வெறும் பழங்களோ அல்லது ஓட்ஸ் கஞ்சிக்கு மாறியது. இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.

இந்த ‘சுடச்சுட இட்லி சாம்பார்’, இவ்வளவு நல்லதை தருகிறதா என்று ஆச்சரியமாக உள்ளதா? எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.

பருப்பு வகைகள் மட்டுமின்றி பால், தயிர், இறைச்சி, மீன் வகைகள், கொட்டை வகைகள் போன்ற உணவுகளிலிருந்தும் நமக்குத் தரமான புரதம் கிடைக்கிறது. மனித வாழ்க்கையில் வளர்ச்சி அதிகம் இருக்கும் பருவம் குழந்தைப் பருவம், விடலைப் பருவம், பெண்கள் கருவுறும்போது மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் நேரம். இக்காலகட்டங்களில், உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கவும் புரதம் மிக முக்கிய ஒரு பங்கை ஏற்கிறது.

பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள இயலாதவர்கள் முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முளை கட்டிய பயிறு வகைகளைச் சாப்பிடுவதால், வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். புரதச் சத்து எளிமையாக செரிக்கக்கூடிய சத்தாக மாற்றப்படுகிறது.

=By அருணா ஷ்யாம்

நன்றி- தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: