நட்பை வளர்ப்போம்!

ஜூலை 9, கலிக்காமர் குருபூஜை

மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது
சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து,
உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும்
விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்.

தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில்,
ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு
புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை
செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப்
பெண்கள் மீது காதல் கொண்டார்.
அந்தப் பெண்களும் சுந்தரரை விரும்பினர்.

சிவலோகம் என்பது வழிபாட்டுக்குரியது; அங்கே
காதலுக்கு இடமில்லை என்பதால், அவர்கள்
பூலோகத்தில் பிறந்து, உலக வாழ்வை அனுபவித்த
பின், கைலாயம் வரும்படி அருள்புரிந்தார் சிவன்.

அப்பெண்களே பரவை மற்றும் சங்கிலி என்ற
பெயருடன் பூலோகத்தில் பிறந்தனர்.
ஆலால சுந்தரரும், திருநாவலூரில் பிறந்தார்.

பரவையை திருமணம் செய்த சுந்தரர்,
சிவ தலங்களுக்கு யாத்திரை செல்வதாக கூறிக்
கிளம்பினார். வழியில், திருவொற்றியூரில்
சங்கிலியாரைக் கண்டார். விதிப்பயனால்,
அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் அவருக்கு
தோன்றி, திருமணமும் முடிந்தது.

இந்த தகவல் பரவைக்கு தெரியவே, அவர் சுந்தரருடன்
வாழ மறுத்து விட்டார்.

பக்தியில் பலவகை உண்டு. சுந்தரர், இறைவனை
தன் நண்பனாகக் கருதி, தன் பாடல்கள் மூலம்
சிவனின் அன்பைப் பெற்றிருந்தார். அதனால்,
தனக்காக, முதல் மனைவியிடம் தூது சென்று
சமாதானம் செய்யும்படி இறைவனை வேண்டினார்.
சிவனும், அவர்களைச் சமாதானம் செய்து சேர்த்து
வைத்தார்.

இந்நிகழ்வு, சோழ நாட்டிலுள்ள பெருமங்கலம்
கிராமத்தில் வசித்த சிவபக்தரான கலிக்காமருக்கு
தெரிய வந்தது. இவர் மானக்கஞ்சாற நாயனாரின்
மகளைத் திருமணம் செய்தவர்.

‘இரண்டாவது மனைவிக்காக, முதல் மனைவியிடம்
இறைவனையே தூது போகச் செய்து விட்டாரே சுந்தரர்…
அவரைப் பழி வாங்க வேண்டும்…’ என்று நினைத்தார்
கலிக்காமர்.

சிவபக்தர்களான அவர்களை, நண்பர்கள் ஆக்குவதற்காக,
திருவிளையாடல் புரிந்தார் சிவன்.

கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக்
கொடுத்தார். வலியால் துடித்த கலிக்காமரின் கனவில்
தோன்றி, ‘இந்நோயை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியும்;
அவரை வரவழை…’ என்று சொல்லி மறைந்தார்.

அதுபோல், சுந்தரர் கனவில் தோன்றிய சிவன், கலிக்காமரின்
மன வருத்தங்களை கூறினார். இதனால், ‘சிவபக்தரின்
மனதை புண்படுத்திய பாவத்திற்கு ஆளானோமே…
அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது நோயையும்
குணப்படுத்த வேண்டும்…’ என நினைத்து, பெருமங்கலம்
புறப்பட்டார் சுந்தரர்.

காதலுக்காக, தன் அன்பிற்குரிய இறைவனையே தூது
செல்ல வைத்தவரின் உதவி, தனக்கு தேவையில்லை
என்று நினைத்த கலிக்காமர், கத்தியால் வயிற்றில் குத்தி
இறந்து போனார்.

கலிக்காமர் வீட்டுக்கு வந்த சுந்தரர், நடந்ததை எண்ணி
வருந்தினார். அப்போது, அங்கே தோன்றிய சிவன்,
கலிக்காமருக்கு உயிர் கொடுத்து, முன்வினையை
எல்லாருமே அனுபவித்தாக வேண்டும் என்பதை விளக்கி,
இருவரும் நட்புடன் திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சுந்தரரால், சிவதரிசனத்தை நேரடியாகப் பெற்ற கலிக்காமர்
மகிழ்ந்தார். தவறு செய்வது மனித இயற்கை; அதை,
பெரிதுபடுத்தாமல் நட்பு கொள்வதே உயர்ந்த பண்பு
என்பதற்கு உதாரணம் கலிக்காமரின் வாழ்க்கை.

இவரது குருபூஜை, ஆனி ரேவதி நட்சத்திரத்தில் நடக்கிறது.

————————————————–

தி.செல்லப்பா
வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: