கோளறு திருப்பதிகம் பாடிய திருஞான சம்பந்தப்பெருமான் அப்பதிகத்தின் முதற்பாடலில் விடம் உண்ட கண்டனாகிய அந்த ஆலங்குடியான் ஒருவர் தம் உள்ளத்தில் புகுந்தானானால் நவகோள் சாரத்தால் ஏற்படக்கூடிய கொடிய தீங்குகள் அனைத்தும் அகன்று அவை நல்லவையாகவே மாறும் என்று கூறியுள்ளார்.
–
‘‘ஞாயிறு திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பு இரண்டும் உடனே ஆசுஅறும், நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே’’ – என்பதே அந்த ஞானக் குழந்தையாரின் திருவாக்கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் தம் இரு கண்களின் பார்வையை இழந்தபோது ‘‘மகத்திற் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் எனக் குறிப்பிட்டு முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்வேன்’’ என்று புலம்புகிறார்.
–
மக நட்சத்திரத்தை சனி தீண்டும்போது ஒருவர் பெறும் தீங்கினை சுந்தரர்போல் இனியாரால் கூறிட முடியும். அதுபோன்றே சனியுடன் ராகு-கேது என்ற பாம்புகளுள் எது சேர்ந்தாலும் ஒருவர் அடையும் அல்லலைத்தான் திருஞானசம்பந்தர் எடுத்துக்காட்டி சிவபெருமானை உள்ளத்தால் பற்றுகின்ற அடியார்களுக்கு அவை நல்லதையே செய்யும் என்று நான்கு முறை ஆணையிட்டு உரைத்துள்ளார். ராகு- கேது என்ற பாம்புகளுடன் ஈசனார் முன்பு நின்றவாறு சனீஸ்வரன் பரமனை வழிபடும் அடியார்களின் கோள் சார்ந்த துயரங்களைப் போக்குகின்ற ஒரு திருத்தலமே திரு இரும்பூனை எனப்பெறும் ஆலங்குடியாகும்.
–
-ஆன்மிகம் – குங்குமம்
மறுமொழியொன்றை இடுங்கள்