மனம் குளிரட்டும்!


மார்ச் 4 – மாசி மகம்

இறந்தன பிறப்பதும், பிறந்தன இறப்பதும்,
இருப்பது மறைவதும், மறைவது தோன்றுவதும்
பரம்பொருளான சிவபெருமானின் படைப்பு
ரகசியம்.

அந்த படைப்பு ரகசியத்தை இறைவன்,
தன் சக்திகளில் ஒன்றான பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
உலகில், தர்மம் குறைந்து அதர்மங்கள் தலை தூக்கும்
போது, எம்பெருமான் சிவபெருமான், உயிர்களின்
நிலையற்ற தன்மையை உணர்த்தவும், தர்மத்தை நிலை
நாட்டவும் உயிர்களை அழிக்கிறார்.

அவ்வாறு இறைவன் உலகை அழிக்கும் போது, உயிர்களை
படைப்பதற்கான மூல வித்துகளான படைப்பு கருவிகளை
ஒரு கும்பத்தில் வைத்து, அதில் அமுதத்தை ஊற்றி,
தண்ணீரில் மிதக்க விடுவார் பிரம்மா.

அமுதத்திற்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இதைக்
குடித்தவர்களுக்கு மரணமில்லை; இது, ஒரு பொருளின் மீது
பட்டால், அந்தப் பொருளுக்கும் அழிவில்லை.

ஒரு முறை, உலகில் அதர்மங்கள் எல்லை மீறியதால்,
இறைவன் கோபம் கொண்டு, உலகை அழித்த போது,
பிரம்மா படைப்பு கருவிகளை அமுதம் நிரப்பப்பட்ட
கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டார்.

அக்கும்பம் பூமியின் பல்வேறு பகுதிகளிலும் அலைந்து
திரிந்து, கடைசியாக ஓரிடத்தில் ஒதுங்கியது. அந்த
இடத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. உலகம் அழிந்த போது
எல்லா ஊர்களும் அழிந்தாலும், அந்த ஒரு ஊர் மட்டும்
அழியவில்லை. அந்த புனிதமான ஊர் தான், கும்பகோணம்.

கும்பம் அவ்விடத்தில் ஒதுங்கிய போது, சிவன் ஒரு
பாணத்தை எடுத்து அக்கும்பத்தின் மீது எய்தார்.
கும்பத்திலிருந்த அமுதம் சிதறி நான்கு புறமும் பரவியது.
அந்த அமுதம் மணலுடன் கலந்து ஒரு லிங்கமாக உருவானது.
அந்த லிங்கம், ‘கும்பேஸ்வரர்’ எனப் பெயர் பெற்றது. சிதறிய
அமுதத்தின் ஒரு பகுதி, குளம் போல் தேங்கியது. அதுவே,
மகாமகக்குளம்.

அதன் கரையில், 16 லிங்கங்கள் தோன்றின.
இந்த மகாமக குளத்திற்கு கங்கை உள்ளிட்ட ஒன்பது புனித
நதிகளும் மாசிமகத்தன்று வந்து நீராடுவதாக ஐதீகம்.
இதனால், இந்நாளில் இக்குளத்தில் நீராடுவதை மக்கள்
பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அதிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம்,
இன்னும் விசேஷம். அடுத்த ஆண்டு மகாமகம் கொண்டாடப்
படுகிறது. மகாமகக்குளத்தில் நீராடுவோர் பிறவாநிலை பெறுவர்.

இம்மாசிமகத்தை, உலகம் தோன்றிய நாள் என்று சொல்லலாம்.
கடவுள் நம்மைப் படைத்தது ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு
நன்மை செய்து வாழ்வதற்காக! அதை மீறும்போது அவரது
கோபத்திற்கு ஆளாகிறோம்.

அவர் சாந்தமாக இருக்க வேண்டுமென்றால்,
அவரது படைப்புகளை பாதுகாக்க வேண்டும். இயற்கையை
அழிக்கக்கூடாது. மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும்.
மாசிமகத்தன்று, இப்படியெல்லாம் வாழ உறுதியெடுத்தால்,
எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமானின் மனம்
மட்டுமல்ல, நெற்றிக்கண் கூட குளிர்ந்து, நம் சந்ததியினரின்
சந்தோஷம் தழைத்தோங்கும்.

————————————————-

தி.செல்லப்பா- வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: