ஜூனியர் கேள்வி-பதில் – லேனா தமிழ்வாணன்
என்.நரேந்திரன், கூடுவாஞ்சேரி.
பலரும் உங்களை விரும்புகிறார்களே, எப்படி?
சிரிப்பினால் என்ன செலவு என்று சும்மா சிரித்து வைப்பேன். அது பல நேரங்களில் கை கொடுக்கிறது.
**********************************************************
எம்.பாலமுருகன், கோவை.
நல்லது சொன்னால் ஏற்காதவர்கள் கெட்டது சொன்னால் ஏற்கிறார்களே, ஏன்?
நல்லது, பாகற்காய் மாதிரி விலை அதிகம். பலர் வாங்க யோசிப்பார்கள். கெட்டது, கத்தரிக்காய் மாதிரி! விலை சகாயம். பூச்சி பிடித்திருந்தாலும் வாங்கி பையில் போடுவார்கள்.
**********************************************************
டி.தனராஜ், மன்னார்குடி.
தங்களுக்குப் பிடிக்காதது எழுத்தாளர் கருணாநிதியா? அல்லது அரசியல்வாதி கருணாநிதியா?
எழுத்தாளர் கருணாநிதியை அப்பட்டமாயப் பிடிக்கும். அதுவும் அப்பழுக்கில்லாமல் பிடிக்கும். அரசியல் கருணாநிதியை.
**********************************************************
பி.வசந்தன், சென்னை.
எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டா?
இதற்கெல்லாம் ஒரு சாமர்த்தியம் வேண்டும். அப்படியொரு நிலைமை இல்லாததால் இப்படியொரு சாமர்த்தியம் எனக்குத் தேவைப்படலை. சினனக்குழந்தைகள் மாதிரி யாரோடும் நான் காய் போடுவதில்லை. இந்த விஷயத்தில் வள்ளுவர்தான் எனக்கு வாத்தியார்.
*****************************************************************
ஜி.பாஸ்கர், மாதவரம்.
எதுவொன்றுக்கும் சகுனம் பார்ப்பது நல்லதா?
ஒன்றேயொன்று சொல்லட்டுமா? நீங்கள் முன்னுக்கு வரவேண்டுமானால் சகுனத்தைப் பின்னுக்குத் தள்ளுங்கள்.
****************************************************************
சி.ராஜேந்திரன், சிதம்பரம்.
மனைவியின் தொண தொணப்பில் இருந்து எப்படித் தப்பிப்பது?
ஒரு கணைப்புக் கணைத்து அவர் பல்லவியைத் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் சரணத்திற்குப் போய்விடுங்கள்.
*************************************************************
வி.எழிலன், திருவான்மியூர்.
அரசியலில் இன்று சாணக்கியர் யார்?
ஒருவரும் இல்லை. தனது சபதப்படி சந்திரகுப்தனை அரியணையில் ஏற்றிவிட்டு, எங்கோ ஒரு குடிசையில் ஓரங்கட்டிக்கொண்ட சாணக்கியன் எங்கே? எல்லா குடிசைகளையும் தனது மாளிகையாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே?
**************************************************************
கே.சேதுபதி, நாகப்பட்டினம்.
தமிழ் இலக்கியங்கள் படிக்கப் படிக்க நீண்டு கொண்டே போகிறதே?
இத்தனைக்கும் கடல் கொண்டு போனவை போக மிகுந்தவைதான் இப்போதுள்ள இலக்கியங்கள். கடல் மட்டும் அபாரக்காதல் கொண்டு தமிழ் இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டு போகாமல் இருந்தால் அடா அடா!
***************************************************************
எஸ்.கங்காதரன், சென்னை-60.
இன்று குடும்பப் பாசம் எப்படியிருக்கிறது?
சொந்தத்தை இன்று நாம் எல்லோருமாகச் சேர்ந்து மந்தமாக்கி வருகிறோம்!
***************************************************************
ஏ.ஜார்ஜ், நெமிலி.
எந்த மாதிரி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம்?
இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஒரு பெண்ணுக்குள் சீதையும் இருக்கிறாள; சூர்ப்பனகையும் இருக்கிறாள். எனவே கவனம்!
***********************************************************
பா.வளனரசு, புவனகிரி.
அன்புமணி புகைபிடிப்போர் விஷயத்தில் பாறைபோல் உறுதி காட்டுகிறாரே?
அப்பா மதுவை ஒழி என்கிறார். மகன் புகையை ஒழித்தே தீருவேன் என்கிறார். நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் இந்த அப்பா பிள்ளையை எனக்கு மிகவும் பிடிக்கிறது.
********************************************************
எம்.கெளசிக், ரத்னகிரி.
பொடா சட்டம் தேவையா?
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்போது பொடா வந்துவிடும். கண்ணா! ராஜா! தீவிரவாதம் வேண்டாமடா! என்கிறது காங்கிரஸ் அரசு. பொடாவால் வாலை ஒட்ட நறுக்குவோம் என்கிறது. பொடா வேண்டும்தான்.
*****************************************************************
முகமது மீரான், நெல்லூர்.
விஜயகாந்த் யாருடன் கூட்டுச் சேர்வார்?
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் தொடர்ந்து தாக்குகிறார். காங்கிரசையும் பாரதிய ஜனதாவையும் விட்டு வைத்திருக்கிறார். இவற்றுடன் சேர்த்தால் இந்த இரண்டும் தி.மு.க. மீதும் அ.தி.மு.க. மீதம் குதிரைச் சவாரி செய்யும் கட்சிகள் தாமே! விஜயகாந்த் தெளிவாக இருந்து நம்மைக் குழப்புகிறாரா அல்லது தாமும் குழம்பி நம்மையும் குழப்புகிறாரா? ஒன்று நிச்சயம். விஜயகாந்த் தனிமனிதனாக இயங்கி எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது!
*********************************************************************
மா.வசந்த், செவ்வாய்ப்பேட்டை.
ஒரிஸ்ஸா வன்முறைக்குப் பதில் தரும்படி தமிழகக் கிறித்தவர்கள் போராடியது குறித்து?
இந்த மண்ணில் அனைவருக்கும் தங்களவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க உரிமை இருக்கிறது. வரவேற்போம். இதில் பள்ளி பிள்ளைகளைச் சம்பந்தப்படுத்தியதை மட்டும் தவிர்த்திருக்கலாம்! பிஞ்சுக்களுக்குள் ஏன் வகுப்புவாத விதைகள்?
*****************************************************************
இருதயராஜ், வேளச்சேரி.
உலக அளவில் பெட்ரோல் விலை குறையும்போது இந்தியாவும் குறைத்தால் என்னவாம்?
நஷ்டத்தின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதே தவிர நீங்கள் எண்ணுமளவு நிலைமைகள் ஆரோக்கியமாக இல்லை. பெட்ரோல் நிறுவனங்கள் தினந்தோறும் 400 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் இன்றளவும் இயங்குகின்றன.
*******************************************************************
எம்.செல்வராணி, ஆத்தூர்.
சிரஞ்சீவி ஆந்திர அரசியலில் ஜெயிப்பாரா?
ஆந்திர அரசயிலை அலசுமளவிற்கு எனக்கு ஆற்றல் போதாது. இருந்தாலும் ஆந்திர மக்கள் திரையுலக நேசர்கள் என்பதால் சிரஞ்சீவி ஒரு கலக்குக் கலக்குவார் என்றே தோன்றுகிறது. ஆனால் கட்சி ஆரம்பித்ததுமே பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர்.போல் தன்னை எண்ணிக் கொள்ளாமல் பொறுமையாக, திட்டமிட்டு, சரிவர அரசியல் நடத்தினால் பெயருக்கு ஏற்றபடி ஆந்திர அரசியலில் சிரஞ்சீவியாய்த் தொடர்வார் என்று மனம் கணக்குப் போடுகிறது.
*********************************************************************
எம்.அப்பாதுரை, வேலூர்.
கேபிள் டி.வி. பிரச்னை தீர்வு காணப்படுமா?
எது குறித்து ஊசி முனை குத்திக் கேட்கிறீர்கள் என்பது பிடிபடாத நிலையிலும் என் பதில் இது. மதுரைப் பகுதியில் ஆர்.சி.வி. டி.வி, ஆளுங்கட்சியின் பலத்துடன், காவல்துறை அனுசரணையுடன் நுழையப் பார்க்கிறது. ஆர்.சி.வி மக்கள் விரும்பிப் பார்க்கும் ஒளிபரப்புகளைச் சேர்த்துக் கொண்டால் ஆதரவு அமோகமாகும். கம்யூனிஸ்டுகள் இந்த விஷயத்தில் மூக்கை நுழைந்திருப்பதால் நன்மைகள் விளையலாம்!
*********************************************************************
கே.ரங்கராஜன், கோவைப்புதூர்.
அண்ணாவின் குடும்பம் உதவிகளைப் பெறும் (பெற்ற) நிலையில் உள்ளது எதைக் காட்டுகிறது?
அரசியலில் அண்ணா நேர்மையாக வாழ்ந்தார் என்பதை! திராவிட இயக்கத்தின் நேர்மை அரசியல் அண்ணாவுடன் முடிந்துவிட்டதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.
********************************************************************
ஆர்.புவனா, புதுக்கோட்டை.
ஒரு ரூபாய் அரிசி?
உதவாது! தேர்தலுக்கு உதவாது என்று சொல்ல வந்தேன்.
***********************************************************************
கே.காளிமுத்து, காரைக்குடி-2.
இரண்டரை ஆண்டுகளுக்கு மின்தட்டுப்பாடு தொடரும் என்று பொங்கலூரார் மிரட்டிவிட்டாரே?
தி.மு.க. இருக்கும்வரை மினவெட்டும் தொடரும் என்கிறாரா? அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் செயலாகும் வரை மின் வெட்டுத் தொடரும் என்று சொல்ல வந்து, இந்த ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். அனல்(கரி) பொய்த்துவிட்டது. புனல் (நீர்) ஏமாற்றிவிட்டது. காற்றாலைக்கூடக் கைவிரித்துவிட்டது. அணுமின் உற்பத்தியின் அவசியத்தை நாட்டிற்கும் குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கும் உணர்த்தும் மின்வெட்டு இது.
*************************************************************
எஸ்.ராஜா, கோத்தகிரி.
ஒன்றரை இலட்சம் பேர் ஓடிய பத்து இலட்ச ரூபாய் மாரத்தான் ஓட்டப்பந்தயம் பற்றி?
நல்ல முயற்சிகளுக்குத் ஆதரவு கொடுக்கும் என்பதற்கு இந்த ஓட்டம் நல்ல உதாரணம். முயற்சிகள், உழைப்புகள், விளம்பரங்கள், செலவுகள் வீண்போகவில்லை. பத்து இலட்சம் பரிசு வாங்கிய உத்திரப்பிரதேசத்துக்காரர் தன்னாலியன்ற சிறு பங்களிப்பையும், ஏழைப் பிள்ளைகளுக்குச் செய்திருந்தால் ஐஸ்கிரீம் மிது வைக்கப்பட்ட செர்ரி பழமாக இருந்திருக்கும்.
****************************************************************
எஸ்.முகேஷ், வாடிப்பட்டி.
தமிழக வீரர் பத்ரிநாத் இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் பெரிதாகச் சோபிக்கவில்லையே?
நம்மவர்களுக்கு நம்மவர்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறைவுதான். இலங்கைத்தொடரை வென்று கொடுத்தவர் பத்ரிநாத்தான் என்கிறார் கவாஸ்கர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? பத்ரிநாத்திற்கு எதிரே விரிவான கிரிக்கெட் வாய்ப்புக் குவிந்து கிடக்கின்றன. நல்லபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
Thanks:
http://www.tamilvanan.com/content/2008/09/12/20081012-junior-kelvi-pathil/