சுயமாக இயங்குக !

சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

அவருக்காக எதையும் செய்துகொள்ளத் தெரியாது. எல்லாத்துக்கும் நான் வந்து நிக்கனும்என்று ஒரு திருமண இல்லத்தின் முதல் நாளன்று உறவினர் பலரும் அரட்டை அடித்த வேளையில் கணவரின் காலை வாரிவிட்ட ஒரு மனைவியின் வாக்குமூலம் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.

அந்தக் கணவரை எனக்கு நன்கு தெரியும். ”ஏய்! ஜா… (பூர்த்தி செய்து கொள்க) இங்க வா. இதை (?) எடுத்துக் குடு. நான் இப்ப என்னென்ன (!) மாத்திரை சாப்பிடணும்? நம்ம கணக்குல பணம் இருக்கா இல்லையா? புது செக் புத்தகம் வாங்கச் சொன்னேன். வாங்கினியா? ஊருக்குப் போக என் பெட்டியில் எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேனே வச்சிட்டியா?” பாணியில் அத்தனை அடிப்படைகளிலும் மனைவி வேண்டும் இவருக்கு. இவர் மனைவி ஊருக்குப் போய்விட்டாலோ, ஒருவேளை இறந்துவிட்டாலோ (சாரி) என்ன பாடுபடுவார் என்று எண்ணிப்பாருங்கள்.

இப்போதெல்லாம் மின்வெட்டு சகஜமாகிவிட்டது. ஒரு கடையில் ஜெனரேட்டர் உள்ளது. இதை வேலை செய்யும் பையன்தான் இயக்கி ஆரம்பித்து வைப்பான். ”முதலாளி, இதை எப்படி இயக்கணும்னா…” என்று ஆரம்பித்தவனைக் கையமர்த்தி, ”அது இல்ல முதலாளி இதுல ஒரு சின்ன சூட்சுமம் இருக்கு முதலாளிஎன்றவனை, ”அதெல்லாம் எனக்குத் தெரியணும்கிற அவசியமில்லைஎன்று காது கொடுக்க மறுத்துவிட்டு, அவன் வேலைக்கு வராத ஒரு நாளில் ரொம்பவே அவதிப்பட்டுவிட்டார். ஒரு பார்வையாளனாககூடத் தெரிந்து வைத்துக் கொண்டால் என்னவாம்?

ஒரு பிரபல மனிதருக்குக் கார் ஓட்டத் தெரியாது. இதனால், அவரது தெரியக்கூடாத சில அசைவுகள் ஓட்டுநர் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டன. நெளிகிறார் இப்போது. கார் ஓட்டுவது, ராக்கெட் செலுத்தும் வித்தையா என்ன?

சட்டையை அயர்ன் செய்வது அசாத்தியக் கலையா? இதை முதல்முறையாகச் செய்ய நேர்ந்து 800 ரூபாய்ச் சட்டையைப் பொசுக்கிக் கருக்கிவிட்டார் என் நண்பர்.

நாமே சுயமாக இயங்க வேண்டும். எதையும் சற்றேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுதந்திரமாக இயக்குவதில் தனி சுகம் இருக்கிறது. இதை அனுபவிக்க முன்வர வேண்டும்.

பிறர் உதவி என்பது கூடுதல் சுகமே தவிர, அடிப்படைச் சுகமாகிவிடக்கூடாது.

லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்

நன்றி;

http://www.tamilvanan.com/content/2008/09/12/20080912-lena-katturai/

 

சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

 

தெரியாத்தனமாக நண்பரின் காரில் லிப்ட் கேட்டேன். ஏன்தான் பயணம் செய்தேன் என்று ஆகிவிட்டது” – நண்பர்.

 

ஏன்?” என்றேன்.

 

அவர் காரில் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். ரொம்பவும் அசெளகரியமான பயணம்என்று மிகவும் அலுத்துக் கொண்டார்.

 

காரில் வந்ததன் மூலம் பேருந்து கிடைக்காத அந்தப் பகுதியிலிருந்து தப்பித்து வந்ததும், காசை மிச்சம் பிடித்தும், காலத்தைச் சேமித்தும், நீங்கள் அனைவரும் காரில் அடித்த அந்த ஆனந்தமான அரட்டையும் உங்களுக்கு செளகரியமாகத் தெரியவில்லையா? ஒரு சிறு அசெளகரியத்தை மட்டும் சகித்துக் கொண்டிருந்தால் மற்ற செளகரியங்கள் உங்களுக்குப் பெரிதாகப்பட்டிருக்கும். அந்த ஓர் அசெளகரியம் பெரிதாகப்பட்டிருக்கிறதுஎன்றேன். நண்பர் திகைத்துப் போனார்.

 

நாம் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை பல அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அவ்வளவையும் வெறுக்கக் கற்றுக் கொண்டால் நம் மகிழ்ச்சி ஒவ்வொரு மணிநேரமும் அடுத்தடுத்த அசெளகரியங்களால் பறிக்கப்பட்டுவிடும்.

 

வாழ்வின் இனிமைகளைத் தேடிப் பிடித்து, அவற்றை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக் கற்றுக் கொண்டால் அன்றாட அசெளகரியங்கள் பெரிதாகத் தெரியா.

 

அசெளகரியங்களைத் திரும்பத் திரும்பத் பேசிக் கொண்டிருக்கும் அல்லது நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் இயல்பு வாழ்க்கையின் பிடிப்பை அகற்றி, சலிப்பை அதிகப்படுத்தும்.

 

இந்தச் சலிப்புணர்வு மேலும் பல அசெளகரியங்களைச் சேமிக்க ஆரம்பித்துவிடும். சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் நம் திட்டமிடாக் குறைபாடும், முன்னேற்பாடுகள் இல்லாத தன்மையுமே நம் பல அசெளகரியங்களுக்கு மூலகாரணங்கள் என்பது தெரியவரும்.

 

முன்பதிவு செய்யாமல் இரயிலில் பொது வகுப்பில் இரவு முழுக்க நின்றுகொண்டு பயணம் செய்பவரின் நிலை போன்றது இது.

 

அசெளகரியத்திலும் மனதளவில் அதில் உள்ள செளகரியங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பண்பும், சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வதே மகிழ்ச்சியை மீட்கும் வழி என்பதை உணரும் இயல்புமே இதிலிருந்து மீளும் நிரந்தர வழி.

 

************************************************************************************

 

லேனாவின்  ஒரு பக்கக் கட்டுரைகள்

source:http://www.tamilvanan.com/content/2008/09/05/20080905-lena-katturai/

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers